மெரீனா இயற்றிய புத்தகங்கள் - 1.காதலென்ன கத்திரிக்காயா? 2.நாத்தனார் கலகம்
எழுத்தாளர் பற்றி : மெரீனா:
இவருடைய இயற்பெயர் T.S.ஸ்ரீதர். இவருடைய தந்தை T.S.சேஷாசலம். அவரும் ஒரு எழுத்தாளர். 1928 முதல் 35 வரை ஏழு ஆண்டு காலம் ' கலா நிலையம்' என்ற இலக்கிய வார ஏட்டை நடத்தி வந்தவர். மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் என்று பன்முகத்தன்மை வாய்ந்த பரணீதரன் என்று பரவலாக அறியப்படும் டி.எஸ். ஸ்ரீதரன்.
டிசம்பர், 1925-ல் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை புரசைவாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் தொடங்கி, தி.நகர் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் முடித்து, பின்பு லயோலா கல்லூரியில் B.Com., பட்டப்படிப்பை பெற்றார். பள்ளி நாட்களிலேயே ஓவியம் தீட்டுவதில் திறமை இவருக்கு உண்டு. 1948 ஆனந்த விகடனில் Free-Lance கார்ட்டூனிஸ்டாகச் சேர்ந்தார். பிறகு 1956 முதல் உதவி ஆசிரியராகப் பணியாற்றி, 1985-ல் இணை ஆசிரியராகி, ஓய்வு பெற்றார். இவர் 1970 முதல் சமூக நாடகங்கள் எழுதத் தொடங்கினார். இவருடைய முதல் நாடகமான 'தனிக் குடித்தனம்' - 1970-ல் மேடையேறி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸாம்பியா போன்ற மேலை நாடுகளில் பெரும் புகழ் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்நாடகம் L.P.Record வடிவில் வெளியிடப்பட்டது. நாடக உலகில் வெளிவந்த முதல் L.P.Record இதுதான். இந்த நாடகம் திரைப்படமாகவும் வெளிவந்தது. இவருடைய நாடகம் 'எங்கம்மா' அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு 25.4.85 அன்று அகில இந்திய வானொலியில் இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் ஒளிபரப்பப்பட்டது. இவர் இருபதுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதியுள்ளார். இவை அனைத்தும் பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவை.
பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதும்போது அவர் பரணீதரன். கார்ட்டூன் வரையும்போது ஸ்ரீதர். நாடகங்கள் எழுதும்போது மெரீனா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த "அருணாசல மகிமை'தான் பள்ளி மாணவனாக இருந்த எனக்கு பரணீதரனை அறிமுகப்படுத்தியது. இமயமலைக்குச் சென்று பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்கள் குறித்து அவர் எழுதிய "பத்ரி கேதார் யாத்திரை', காசி, ராமேஸ்வரம் யாத்திரை, ஆலய தரிசனம் உள்ளிட்டவைதான் இளம் வயதிலேயே என்னில் ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்தியது என்பதை நான் இப்போது உணர்கிறேன். காளிதாசனின் ரகுவம்சத்தையும், ஆர்.கே. நாராயணின் "கைட்', "ஸ்வாமி அண்ட் ப்ரண்ட்ஸ்' நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் பரணீதரனையே சாரும். மெரீனா என்கிற பெயரில் இவர் எழுதிய "தனிக்குடித்தனம்', "மாப்பிள்ளை முறுக்கு', "மகாத்மாவின் மனைவி', "கஸ்தூரி திலகம்' போன்றவை ஆனந்த விகடனில் தொடராகவும், மேடையில் நாடகமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றன.
ரோம் நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பற்றி ஆராய்ந்து வரும் ஃபெர்ரோலூஸி என்ற ஜெர்மானியப் பெண்மணி, இவரது மேடை நாடகங்கள் அனைத்தையும் பார்த்து, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றை ஆராய்ந்து 'Humour in a Tamil Popular Comedies' என்ற ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். 1993-ம் ஆண்டு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர் ரஸிக ரங்கா' என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் துவக்கி, அதன் மூலம் தன்னுடைய 18 நாடகங்களை 800 தடவைகளுக்கு மேல் மேடையேற்றியுள்ளார்.
மெரீனா இயற்றிய புத்தகங்கள் :-
1.காதலென்ன கத்திரிக்காயா?
2.நாத்தனார் கலகம்
==========================================================
1.காதலென்ன கத்திரிக்காயா?
இந்த நூல் காதலென்ன கத்திரிக்காயா?, மெரீனா அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஹாஸ்ய நாவல்/ நகைச்சுவை நாவல்.
காகித உறை / பேப்பர்பேக்;
302 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: 2009.
என்னுரை:
'காதலென்ன கத்திரிக்காயா?' - சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்தது. இதுவே என்னுடைய முதல் நாவல்.
அறுபதுகளில், தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த காதல் கதைகளையும், திரையுலகில் மலிந்து கிடந்த காதல் படங்களிலும் மனத்தைப் பறிகொடுத்த ஓர் இளைஞன், தானும் அக்கதாநாயகர்களைப் பின்பற்றி, காதலித்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, செயலில் இறங்கினால் என்னவாகும் என்று விபரீத கற்பனைக் கருவில் உதயமானவன்தான் இந்நாவலின் கதாநாயகனான சுதாகர். அவனுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை படிக்கும்போது, நமக்குச் சிரிப்பு வந்தாலும், 'ஐயோ! பாவம்!' என்று அவன்மீது பரிதாபமும், ஒருவித பச்சாத்தாபமும் நிச்சயம் ஏற்படும்.
சுதாவின் வாழ்க்கையை சாக்காக வைத்துக் கொண்டு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சமுதாயத்தில், முக்கியமாக வாலிப உள்ளங்களைக் கவர்ந்த நவநாகரிக நடை முறைகளையும், உடைமுறைகளையும், காதல் லட்சிய வேட்கைகளையும், அதன் தொடர்பான மாயக் கவர்ச்சிகளையும் ஓரளவு பிரதிபலிப்பதுதான் இந்நாவலின் முக்கிய நோக்கம்.
காதல் பயித்தியமான கதாநாயகனோடு உறவாடும் அருள்தாஸ், நாராயணன், வரதாச்சாரி, சீனி போன்ற இதரப் பாத்திரங்களின் மூலம் காதலின் வெவ்வேறு வடிவங்களையும் கோடிட்டு காட்டியிருப்பதை, ஆழ்ந்து படிப்பவர்கள்எளிதில் அறிந்து கொள்ளலாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் திடீர் சரித்திரம் படைத்த 'ஸ்டவ் ஜோசிய'த்தைப் பற்றி படிப்பவர்களுக்கு, பின்பு, ஒருநாள் நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய 'பிள்ளையார் பால் அருந்திய 'மர்ம நிகழ்ச்சி நிச்சயம் நினைவுக்கு வரத்தான் செய்யும்.
அந்தக்கால நடப்புகளை, இந்தக் கால வாசகர்கள் படித்து மகிழ, ஓர் அரியவாய்ப்பை ஏற்படுத்தி தந்த பதிப்பகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுகிறது.
-மெரீனா.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
2.நாத்தனார் கலகம்
ஹாஸ்ய நாடகம்/ நகைச்சுவை நாடகம்.
காகித உறை / பேப்பர்பேக்;
128 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: 2013;
இரண்டாம் பதிப்பு: 2018.
நாத்தனார் கலகம்
காட்சி - 1
சங்கரராமன் வீடு
(சங்கரராமன் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். மகன் மணியும் மருமகள் சியாமளாவும் வருகிறார்கள்)
சியாம: நமஸ்காரம் பண்றோம்பா....
(இருவரும் நமஸ்காரம் செய்கிறார்கள். அப்போது அங்கு வந்த முத்துராம ஐயர் அதைப் பார்க்கிறார்)
சங்கர: யார் கண்ணும் படாம இந்தக் குடும்பம் இப்படியே ஒத்துமையா ஒண்ணா சந்தோஷமா இருக்கணும்.
(உள்ளே போகிறார்கள்)
முத்து; சங்கரராமன், இன்னிக்கு என்ன விசேஷம்? பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் நமஸ்காரம் பண்ணிட்டுப் போறாளே, அவாளுக்குக் கல்யாணம் ஆனநாளோ?
சங்கர: இல்லேல்லே, சியாமளா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என சம்சாரத்துக்கு நமஸ்காரம் பண்ற வழக்கம். அவ போய்ச் சேர்ந்தப்புறம் ரெண்டு பேருமா எனக்குப் பண்ணிண்டிருக்கா, அவ்வளவு தான்.
முத்து: என்ன இதைப் போய் சாதாரண விஷயம் மாதிரி சொல்றேள்? இது 'கின்னஸ் புக்' லே வரவேண்டிய ரெக்கார்டுன்னா... சாதாரணமா வீடுகள்லே நாள், கிழமை, கல்யாணம், கார்த்திகை, பர்த்டே, வெட்டிங்டேன்னு தான் பெரியவாளுக்கு அபூர்வமா ஒரு நமஸ்காரம் கிடைக்கற வழக்கம். இங்கே என்னடான்னா வாரா வாரம் நமஸ்காரம் கிடைக்கறதே, குடுத்து வெச்சவர்தான்...
சங்கர: ஓய், கண்ணைப் போட்டுட்டாதேங்கோ. லைஃப்லே எத்தனையோ துன்பப்பட்டுட்டேன். இது ஒண்ணுதான் சித்தெ நிம்மதியாயிருக்கு. ஒவ்வொரு வீட்லே பெத்தவாளுக்குக் கிடைக்கிற மரியாதையைக் கேட்டா கதிகலங்கறது... என்ன சொல்றேள்?
முத்து: அதைச் சொல்றதுக்குத் தானே வந்திருக்கேன். கார்த்தாலே நான் பேச, அவா பேச, மாட்டுப் பொன்னும் புள்ளையும் என்னை இன்னிக்குப் புதுப்புது வார்த்தையாலே அர்ச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டா...! அளவுக்கு மீறி மரியாதை குடுத்துட்டா! பேச்சு வளர்ந்துடக் கூடாதேன்னு இன்னிக்கு மார்னிங் வாக் கிளம்பி வந்துட்டேன்.
சங்கர: உமக்குப் பொறுமை போறாது. வார்த்தையைக் கொட்டிடறேள், வாங்கிக் கட்டிக்கறேள்.
முத்து: போற போக்கைப் பார்த்தா மாணிக்க வாசகம் செஞ்சதுதான் ரைட்டுன்னு தோண்றது.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Comments
Post a Comment