ரா. இராகவய்யங்கார் இயற்றிய புத்தகங்கள் - 1.தமிழக குறு நிலவேந்தர்கள்
சேதுசமத்தான மகாவித்துவான், பாசா கவிசேகரர் இரா. இராகவையங்கார் (20 செப்டம்பர் 1870 - 11 சூலை 1946) சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர் எனப் பல்திறம் பெற்றுத் திகழ்ந்தவர் ஆவார்.
முன்னுரை:
மகாவித்துவான் ரா.இராகவய்யங்கார்
(1870-1946)
இக்கட்டுரைத் தொகுதியின் ஆசிரியரின் முன்னோர்கள் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள திருப்புட்குழியில் வாழ்ந்தவர்கள். இவ்வூர் பல நூற்றாண்டுகள் வடமொழி, தென்மொழி வல்ல புலவர்கள் வசித்த இடம், இவர்களில் ஒருசிலர், வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரிக்குக் குடியேறினார்கள். நைத்ருவ காசிப கோத்திர வைணவ அந்தணர்களுக்கு அத்தலத்து எம்பெருமானார் ஜீயர் மடாதிபத்யம் உரியதாகும். கட்டுரை ஆசிரியரின் குடும்பத்தார் பின் சேதுநாடு வந்து தமிழ், வடமொழி வல்லவராய்த் திகழ்ந்தனர்.
1870- ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் பிறந்த ஆசிரியரின் பெற்றோர் இராமாநுஜ ஐயங்கார் - பத்மாசனி ஆவர். பிறந்த ஊர் சிவகங்கை அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டை. இளமையிலேயே தந்தையை இழந்து மாமா சதாவதானம் முத்துசுவாமி ஐயங்கார் ஆதரவில் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். தமிழார்வத்தால் உந்தப்பட்டு பள்ளிப்படிப்பை நடுவிலே விட்டு, தமிழை ஆதரிக்கும் வள்ளல்களிடம் தம் தமிழறிவைக் காட்டி அவர்களால் ஆதரிக்கப்பெற்றார். மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். திருமணத்துக்குப்பின் திருச்சி தேசிய உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். இவர் தமிழார்வத்தினாற் பெரிதும் ஊக்கப்பட்டு, இவர் மாணவர்களில் பலர், தமிழையே வாழ்க்கைத் துணையாக எடுத்துக் கொண்டார்கள். இக்காலகட்டத்தில்தான் டாக்டர் ஐயரவர்களுடன் குடந்தையில் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் தமிழ் நூல்கள் பதிப்பிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
இராமநாதபுரம் சேதுபதிகள் தமிழை நன்கு வளர்த்த வள்ளல்கள். நவராத்திரித் திருவிழாவில் பல புலவர்களையும், அருங்கலைவிநோதர்களையும் அழைத்துப் பரிசுகள் வழங்குவதுண்டு. பாஸ்கர சேதுபதி தம் அவையில் அமர்ந்திருந்த இராகவய்யங்காரின் புலமையில் ஈடுபட்டு அவரைத்தம் சமஸ்தான வித்துவானாக இறுக்கப் பணிந்தார். இதுபோலவே இசைத்துறையில் தேர்ந்த பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் சமஸ்தான வித்துவானாக உபசரிக்கப் பெற்றார். ஸ்வாமிவிவேகானந்தர் சிகாகோ செல்ல விரும்பிய பொழுது பலநாட்கள் இராமநாதபுரத்தில் தங்கி சேதுமன்னரின் பொருளதவியால் அமெரிக்கா சென்றார்.அவர் அவைக்களப் புலவர்களோடு இந்து சமயம் பற்றிய சர்ச்சைகள் பல செய்து இன்புற்றது உண்டு.
சேதுபதியின் உறவினரான பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை 1901-ல் நிறுவி இராகவய்யங்காரைச் 'செந்தமிழ்' என்னும் ஆராய்ச்சி இதழுக்கு ஆசிரியராக்கினார். இதன் மூலம் தமிழன்னை பெற்ற ஆராய்ச்சி முத்துகள் எண்ணிலடங்கா. விஞ்ஞான-பகுத்தறிவுக்கு ஏற்ப தமிழாராய்ச்சி செய்தற்குத் தம் கட்டுரைகளின் மூலம் இலக்கணம் வகுத்தார். கம்பர், திருவள்ளுவர், சங்ககாலச் சான்றோர் வரலாறுகள், நூல்கள், நூல்களின் ஆசிரியர் பெயர்கள் தமிழுலகுக்குத் தெரிய ஆரம்பித்தார். எல்லாவகை அபிப்பிராயங்களுக்கும் இடம் அளிக்கும் இதழாகத் திங்கள்தோறும் வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப்பின் தம் தாய் மாமன் மைந்தரும்' தமிழ்ப் பெரும் புலவருமான மு.இராகவய்யங்காரிடம் ஆசிரியப் பொறுப்பு அளித்தார். மீண்டும் சேது சமஸ்தான அவைக்களப் புலவரானார்.
அண்ணாமலை நகரில் 1935ஆம் ஆண்டு தமிழாராய்ச்சிப் பகுதி திறக்கப்பட்டு, அப்பகுதித் தலைவராக நியமிக்கப் பெற்றார். இதுவரை சொந்த முயற்சியால் நூல்கள் வெளியிட்டும், சொற்பொழிவுகள் புரிந்தும் தமிழுக்கு தொண்டு புரிந்தவர்க்கு இப்பதவி மூலம் மிக விரிவாகத் தமிழாராய்ச்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. தம் 65ஆம் வயதில் அளிக்கப்பெற்ற பெரும் பொறுப்பை மிகச் சிறப்பாக ஆறு வருடங்கள் நிறைவேற்றினார். இக்காலத்தில் இவர் செய்த சொற்பொழிவுகளைக் கேட்டு மயங்கிவர்களில் டி.கே.சி., ராஜாஜி, சத்தியமூர்த்தி, நீதிபதிகள், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பலர். தமிழ் வரலாறு, பாரிகாதை, தித்தன், கோசர், பட்டினப்பாலை உரை, பெரும்பாணாற்றுப் படை ஆராய்ச்சி, அபிஜ்ஞான சாகுந்தலம் ஆகியன இந்த ஐந்தாண்டுகளில் வெளியானவை. குறுந்தொகை விளக்கத்தின் ஒரு பகுதி பின்னர் பதிப்பிக்கப்பெற்றது.
இவ்வாறு தென்னாட்டுத் தமிழ்த்திலகமாய் விளங்கிய புலவர் பெருமான் 1946ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் நாள் தமது 77ஆம் வயதில் தம் இராமநாதபுரத்து இல்லத்தில் காலமானார். அவரால் வெளிவந்த நூல்கள், கட்டுரைகள், தனியே கொடுக்கப்பட்டுள்ளன. பரிமேலழகரை "ஈசனதருளால் உய்த்து உணர்வுடையவோர் உண்மையாளன்" என்பர். அத்தகைய "அநுக்ரக சக்தி" இம் மகாவித்துவானிடம் அமைந்திருந்தது.
இவர் சுதந்திரமான சிந்தனையாளர். விஞ்ஞான பூர்வமான தமிழாராய்ச்சிக்கு வழி வகுத்தவர். மாற்றுக் கருத்துக்கு மதிப்புக்கொடுத்து, அதைப் பலரறிய ஒத்துக் கொள்ளும் பெரும் உள்ளம் உண்டு. நச்சினார்க்கினியர் உரையை மறுக்கும் அதே நேரத்தில், புது மாணாக்கர்களின் கருத்துக்கு மதிப்பும் தருவார். சமரச சன்மார்க்கவாதி. பிறப்பில் வைணவ அந்தணராயினும், ஆண்டுதோறும் சைவ சித்தாந்தக் கழகச் சொற்பொழிவுகளில் சைவ சமயக்குறவர்களின் பேரிலயக்கத்தைப் புகழ்வார். தானம், தயை, தபஸ் என்ற மூன்றும் இஸ்லாமிய அன்பர்களின் பெருநாள் நோன்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்று காட்டுவார். தேம்பாவணி போன்ற கிறிஸ்தவ இலக்கியத்தைப் பெரிதும் பாராட்டுவார். எல்லாவித உண்மைகளையும், எங்கிருந்தாலும் அறியும் ஆர்வம் இருந்தது. இவர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதற்குச் சான்றாக அமைவன.
வாழ்க்கையில் வறுமையால் பன்முறை அல்லற்பட்ட பொழுதும் ஆராய்ச்சியையும், பதிப்பித்தலையும் விட்டதே இல்லை. பகவானே மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்த பொழுது உடல் குறுகி பெற்றவர்களே. நகையாடும் படியான தோற்றத்தில் வாமனனாய் அமைந்தான் என்றால் சாதாரண மனிதர்கள் எவ்வளவு கூனிக்குறுக வேண்டும் என்று கூறிக் கம்பராமாயணத்தில் அப்பகுதியைக் காட்டுவார். தம்மைப் புரந்த சேதுபதி மன்னர்களையும், இராஜா சர். அண்ணாமலைச் செட்டியாரையும், கம்பன் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்ததுபோல் கவிபாடி நன்றிக் கடனைத் தீர்த்தார். பெண்களிடமும், பெண் கல்வியிலும் பெருமதிப்பு வைத்தவர். சங்க இலக்கியத்தில் கண்ட பெண் புலவர்களை "நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்" என்ற நூலை எழுதி உலகுக்கு' அறிவித்தார்.
இவர் சிறந்த நாவலர். மகாவித்துவான் என்ற பட்டம் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரால் அளிக்கப்பட்டது. வடமொழி அன்பர்கள் நிறைந்த சமஸ்க்ருத சமிதி "பாஷா கவிசேகரர்" பட்டம் அளித்து கௌரவித்தது. மூன்று சோழப் பேரரசர்கள் அவையில் ஆஸ்தான வித்துவானாக இருந்த ஒட்டக்கூத்தன்போல் ஐவரும் மூன்று சேது மன்னர்கள் அவைப் புலவராக அமைந்தார். சங்ககாலக் குறுநிலமன்னர்களான வேளிர், கோசர் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவருடைய சுதந்திரமான தனி வழிப்பாதை காண்பதில் உள்ள ஆர்வத்தைப் புலப்படுத்தும். தித்தன் வேளிர் குறுநில மன்னன். வஞ்சியருகில் வதிதவன் என்பதைச் சமீபத்தில் கருவூர் அமராவதிப் படுகையில் கிடைத்த தித்தன் பெயர் பொறித்த நாணயம் வலியுறுத்தும்.கோசர் வேளிரை அடுத்துத் தமிழ்நாடு வந்தவர்; கோசர் புத்தூர், பின்பு கோயம்புத்தூர் எனத் திரிந்தது; வேளிர் காஷ்மீர நாட்டிலிருந்து மிகப் பழைமையான காலத்தில் தமிழ்நாடு போந்தவர். பொருநராற்றுப் படைத்தலைவன் கரிகாலன், பட்டினப்பாலைத் தலைவன் திருமாவளவன் என்று இன்னோரன்ன புதிய செய்திகளை வெளியிட்டவர். இவற்றில் சில காலத்தால் வேறு படலாம்.
தமிழர் இப்படைப்புகளைப் படித்து இன்புறுவதற்காகவே இந்நூல் தொகுதி வெளியிடப்படுகிறது.
Comments
Post a Comment