தேனம்மை லெக்ஷ்மணன் - 1.வளையாபதி குண்டலகேசி;

ஆசிரியர் குறித்து: தேனம்மை லெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு ஆகிய ஐந்து நூல்களின் ஆசிரியர். நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.




குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.

இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .

நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது.

இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்திரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறை பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கையின் “ஸ்பெஷல் லேடி” விருது பெற்றவர்.

                                           ******

புத்தகம் 1.வளையாபதி குண்டலகேசி - தேனம்மை லெக்ஷ்மணன் 

தமிழ் இலக்கியம்/ சமண சமயம் நூல் / சமய இலக்கியம் / ஐம்பெருங் காப்பியம் நூல் / பௌத்த சமயம் நூல்.

காகித அட்டை/ பேப்பர்பேக்;

163 பக்கங்கள்;

மொழி: தமிழ்;

பதிப்பு: ஜனவரி 2022.

https://bookwomb.com/valayapathi-kundalakesi-thenammai-lakshmanan.html 

Buy from Bookwomb


முன்னுரை: ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன.

இவை இரண்டும் காணாமல் போன காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. கிடைத்த பாடல்களிலும் வளையாபதி, குண்டலகேசிக்குச் சொல்லப்படும் கதையின் குறிப்பாக ஒரு பாடல் கூட இல்லை.

சமண மதத்தின் குறிப்புகள் வளையாபதியிலும், பௌத்த மதத்தின் குறிப்புகள் குண்டலகேசியிலும் காணப்படுகின்றன. அறிவன் அருகக்கடவுள் அடி போற்றி என்ற இறைவணக்கப் பாடல் சமணத்தைக் குறிப்பதாகும், இறைவன் அவன் தாள் சரண் நாங்களே - புத்தபகவான் திருவடி சரணம் என்பதாக வரும்பாடல் பௌத்தத்தைக் குறிப்பதாகவும் சுட்டுகிறார்கள். 

வளையாபதியின் கதை என்று எடுத்துக் கொண்டால் புகார் என்னும் நகரில் வாழ்ந்த நவகோடி நாராயணன் என்னும் வணிகனும் அவனது இருதார மண வாழ்க்கை, ஊர்கட்டுப் பாட்டுக்காக இரண்டாவது மனைவியை விலக்கி வைத்தல் அதன் பின் இரண்டாம் தாரம், தன் மகனுடன் ஓரளவு நிலைபெற்றதும் சேர்த்துக் கொள்வது போன்றவைதாம். 

இவை இரண்டின் காலமும் ஏழாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள். காளியை வணங்குவதாகச் சொல்லும் இக்கதையில் காளி பற்றிய குறிப்பு எங்குமே இல்லை !

வளையாபதியில் அநேகப் பாடல்கள் அரசவாழ்வின் அநித்தியம், மானிடப் பிறப்பின் மகத்துவம், பெண்ணின் பெருமை, ஆடவர்க்கும் கற்பு நிலை, பிறன் மனை விரும்பாப் பேராண்மை, இல்லாதவரை எல்லாரும் இகழ்வார் மனைவி மக்களும் மதியார் எனப் பகன்றாலும் பல பாடல்கள் மனம் மாறும் பெண்கள் பற்றியும், கற்பில்லாப் பெண்கள் பற்றியும் கணிகையர், அவர்தம் தாய் கூற்றாக ஆணை வஞ்சித்துப் பொருளைக் கைக்கொள்ள வழி கோலுதல் என்பன பற்றியும் பாடப்பட்டுள்ளன.

மனை நலம், மனைவி நலம், நன்மக்கட்பேறு, பசிப்பிணி போக்குதல், அருளே பொருள், எவ்வுயிர்க்கும் அன்பு செய்தல், தவத்தின் அடையாளம், பிறர்க்குதவி செய்தல், மூத்தோர் சொல் அமுதம், இல்லற வாழ்வே இனியது ஆகிய பொதுமையான பாடு பொருளைக் கொண்டிருக்கின்றன.

பொய், புறம் கூறாதிருத்தல், அல்லன செய்யாதிருத்தல், கொலை, களவு, காமம் கொள்ளாதிருத்தல், உயிர்க்கொலை தவிர்த்தல், செல்வத்தின் நிலையாமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. 

இதில் சிலம்பில் வரும் பாசாண்ட சாத்தன் பற்றியும் ஒரு பாடல் வருகிறது. 

"பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட 

தொண்ணூற்று அறுவகைக் கோவையும் வல்லவன் 

விண்ணாறு இயங்கும் விரலவர் ஆயினும் 

கண்ணாரி நோக்கிக் கடுநகை செய்வான்"

தொண்ணூற்று ஆறு வகையான தருக்க நூல்களிலும் துறைபோகு வித்தகனாகிய பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் விண்வழியே செல்லும் இசை பொழிவதில் வல்லவர்களாகிய கந்தர்வர்களைக் கண்டு பெரிதாகச் சிரித்தான் என்று கூறப்பட்டுள்ளது!

இந்நூல் மனிதர்கள் வாழ்வியல் தவறுகள் புரியாமலிருக்கக் கடிந்து சொல்லி, பேராண்மை மிக்க ஆண்மகனாகவும் பெருந்தன்மை மிக்க கற்பரசியாகவும் வாழ மெய்நெறியில் வழிகாட்டுகிறது.

                                                     ***

வளையாபதியின் கதைச்சித்திரம் 

வளையாபதிக்கு எதிராக சாட்சி சொன்ன நாளி

எந்தக் காலத்திலும் நீதியைத் தம்பக்கம் வளைத்துவிடலாம் என்பது பணம் படைத்தவர்களின் எண்ணமாய் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் படைத்தாலும் தெய்வத்தை வளைக்க முடியாது அது உண்மையையே தாங்கிப் பிடிக்கும். ஒரு வைர வாணிகன் தன் செல்வாக்கால் உண்மையைத் திசை திருப்பப் பார்த்தான். அவனுக்கு எதிராக சாட்சி சொல்லி உண்மையை நிலைநாட்டியது நாளி என்ற காளி தெய்வம். அது பற்றிப் பார்ப்போம்.

கடலும் அலையும் கைகோர்த்துத் திரியும் இடம் புகார் நகரம். கடற்துறைமுகத்தில் மரக்கலங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று நவகோடி நாராயணன் என்ற வைர வியாபாரி உடையது. இவர்தான் வைர வாணிகன் வளையாபதி என்று அழைக்கப்பட்டார். அவர் வீட்டில் செல்வம் மலைபோல் குவிந்திருந்தது. வீடு நிறைய உறவினர்களும் அவர்களுக்குப் பணிபுரிய வேலையாட்களும் நிரம்பி இருப்பார்கள்.

நவகோடி நாராயணன் மிகுந்த சிவபக்தி கொண்டவர். நாள்தோறும் சிவனைப் பூசித்துதான் தன் வேலையைத் தொடங்குவார். நவரத்தினங்களும் வைரமும் விற்றுத் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து வந்தார்.

அவருக்குத் தன் வணிகக் குலத்திலேயே திருமணம் ஆகி நிறையப் பிள்ளைகளும் இருந்தார்கள். மனை நலம், மனைவி நலம், நன்மக்கட்பேறு வாய்த்திருந்தாலும் அவர் வேறு குலத்திலும் ஒரு பெண்ணை விரும்பி மணந்து கொண்டார். இதைக் கண்டு வெகுண்ட வணிகர் குல மக்கள் ஊர்க்கட்டுப்பாடு விதித்து அவரை ஒதுக்கி வைக்கின்றனர்.

"நான் செய்த தவறென்ன?" என்று அவர் ஊர்ச்சபையில் கேட்க அவர்கள் "ஒரு தாரம் இருக்கையில் மறுதாரம் திருமணம் செய்தது தவறு, மேலும் அப்பெண் வேறு குலத்தைச் சேர்ந்தவள். அவளை விலக்கி வந்தால் ஊராரோடு இயைந்து இருக்கலாம்." என்று தீர்ப்புரைக்கிறார்கள். "ஆடவர்க்கும் கற்புநிலை வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஊரிலேயே பெரிய மனிதன். ஆனால் என்ன, எந்த மரியாதையும் கௌரவமும் இல்லாமல் ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்டவன். வேறுவழியின்றி நவகோடி நாராயணன் ஊர்க்கட்டுப்பாட்டுக்காகத் தன் இரண்டாம் மனைவியை விலக்கி வைக்கிறார். அப்போது நவகோடி நாராயணனின் சிசுவை வயிற்றில் தாங்கி இருந்தாள் அந்த இரண்டாம் மனைவி. அவள் பக்கம் நியாயம் பேசுவோர் யாரும் இலர். எனவே அவள் தன் விதியை நொந்தபடி தனியே சென்று ஒரு இல்லத்தில் வசித்து வருகிறாள்.

அதன் பின் நவகோடி நாராயணனை வைர வியாபாரத்தை விரிவுபடுத்தத் தன் மரக்கலத்தில் கடற்பயணம் மேற்கொள்கிறார். இன்னும் பல அயல் தேசங்கள் சென்று வியாபாரத்தைப் பெருக்கி நவநிதியமும் வைரங்களும் கொண்டு வந்து சேர்க்கிறார். அவர்கள் குடும்பம் செல்வச் செழிப்பின் உச்சியில் இருக்கிறது. முதல் மனைவியுடனும் மக்களுடனும் இன்பமாகக் குடும்பம் நடத்துகிறார். இரண்டாம் மனையாளை மறந்தே போகிறார்.

குறிப்பிட்ட காலம் வந்தவுடன் அழகான ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள் நவகோடி நாராயணனின் இரண்டாம் மனைவி. அக்குழந்தைக்கு நற்பண்புகள் பலவும் போதித்து வளர்க்கிறாள். உயிர்களைக் கொள்ளாமை, புலால் உண்ணாமை, உலகின் நிலையாமை எல்லாம் கற்பிக்கிறாள். அழகிய அச்சிறுவனும் வளர்ந்து மற்ற சிறார்களோடு கலந்து கல்வி கற்று வருகிறான்.

ஒரு நாள் சிறுவர்கள் கூடி விளையாடும்போது அவனைத் "தகப்பன் பெயர் தெரியாத பிள்ளை" என்று எள்ளி நகையாடுகிறார்கள். உடனே அவன் தன் தாயிடம் ஓடித் தன் தகப்பன் பெயரைக் கேட்கிறான்.

"அம்மா, உடனே சொல், என் தகப்பன் பெயர் என்ன"

"நான்தான் உனக்குத் தகப்பனும் தாயும் ஐயா" என்கிறாள் அவள் தாய்.

"பொய் சொல்லக்கூடாது என்று கற்றுக் கொடுத்த நீயே பொய் சொல்கிறாயே அம்மா, உண்மையைச் சொல் என் தந்தை யார். என்னைத் தகப்பன் பெயர் தெரியாதவன் என்று மற்றவர்கள் எள்ளுகிறார்கள்" மகன் கண்ணில் கண்ணீர் வடிகிறது.

அதைக் கண்டு பொறுக்க முடியவில்லை அத்தாய்க்கு, இருந்தும் மௌனம் சாதிக்கிறாள்.

"அம்மா நீ தினம் வணங்கும் அந்த நாளி என்னும் காளி மேல் ஆணை" உண்மையைச் சொல். என் தந்தை யார். இதை நான் உலகுக்குச் சொல்லியே ஆக வேண்டும்" என்கிறான்.

நாளியின்  பெயரைக் கேட்டதும் துடிதுடித்துப் போகும் அத்தாய் உடனே நவகோடி நாரயணன் என்னும் வைர வியாபாரிதான் அவன் தந்தை என்று உரைக்கிறாள்.

உடனே அவன் வாணிகர் தெருவில் சென்று நவகோடி நாராயணனிடம் தான் அவன் புதல்வன் என்று நிறுவ முற்படுகிறான். ஏழ்மையில் புரண்ட அச்சிறுவனைப் பார்த்து நவகோடி நாராயணன் தன் மகன்தான் அவன் என்பதை நம்பாமல் புறந்தள்ளுகிறான். தந்தையின் புறக்கணிப்பால் கண்களில் நீர் வடியத் தன் தாயிடம் ஓடி வருகிறான் அச்சிறுவன்.

"அல்லும் பகலும் என் அன்னை வணங்கும் நாளிய. என் தந்தை நவகோடி நாராயணன் என்பதற்கு நீதான் சாட்சி, நான் அவர் மகன்தான் என்பது உண்மையானால் நீதான் சபைக்கு வந்து சாட்சி சொல்ல வரவேண்டும்" என்று வேண்டுகிறான்.

அச்சிறுவனின் கையறு நிலைகண்டு இரங்கும் காளியும் வருவதாக வாக்கு கொடுக்கிறாள். ஊர்ச்சபையைக் கூட்டுகிறான் அச்சிறுவன். பிராது விசாரிக்கப்படுகிறது. நவகோடி நாராயணன் அச்சிறுவன் தன் மகன்தான் என்பதை மறுக்க அங்கே அதிரடியாக தோன்றுகிறாள் நாளி என்னும் காளி.

"வைர வாணிகன் வளையாபதியே, வாழ்க்கையை உன் விருப்பத்திற்கு வளைத்து வாழ்கிறாய். உன் விருப்பத்திற்குப் பெறவும் விலக்கவும் குழந்தை ஒன்றும் கடைச்சரக்கல்ல. இவள் உன் இரண்டாம் மனைவி. இவளை நீ தள்ளி வைத்தபோது கர்ப்பமுற்று இருந்தாள். உனக்குப் பிறந்தவன்தான் இச்சிறுவன். அதற்கு நானே சாட்சி. இவனை ஏற்றுக் கொள் "எனத் தன் கரிய உருவத்தோடும் நீளத்தொங்கும் முடிகளோடும் ஆடும்கரங்களோடும் ஆவேசமானாள் நாளி.

உண்மையை உணர்ந்த வைர வாணிகன் வளையாபதி என்ற நவகோடி நாராயணன் அப்பெண்ணைத் தன் மனைவியாகவும் அச்சிறுவனைத் தன் மகனாகவும் ஸ்வீகரித்து அவனுக்கு வீர வாணிபன் எனப் பெயரிட்டுத் வாணிபம் தொடங்கவும் பொருள் கொடுக்கிறான்.

என்றைக்கிருந்தாலும் தெய்வம் நின்று பேசும். எனவே உண்மையே பேசி உண்மையின் வழி நடக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது வளையாபதியின் கதை.

வளையாபதி - மூலமும் கதையும் உரையும்

 01.அருகன் வணக்கம்; 

02.துறவிகள் வணக்கம்; 

03.நெஞ்சுக்கு நீதி உரைத்தல் ; 

04.அரச வாழ்வின் நிலையாமை; 

05.மானுடப் பிறப்பின் சிறப்பு; 

06.உயர்குடிப் பண்புநலம்; 

07.துணைநலன் சிறப்பு; 

08.நிலையற்ற மனம்கொண்ட பெண்கள்; 

09.மனதைக் காத்தல்; 

10.ஆண்களுக்கும் கற்புநெறி;

11.நிறைவடையாத பெண்கள்; 

12.மக்கட் செல்வத்தின் சிறப்பு; 

13.நாவடக்கம் தேவை; 

14.அன்பான இல்லறமே நல்லறம்; 

15.பிற பெண்களை விரும்பாமை; 

16.இவற்றைச் செய்யாதீர்; 

17.தீச்செயல் புரியாதீர் ; 

18.உணவு தானம் உயர்ந்த தானம்; 

19.உயிர்க்கும் அன்பு காட்டுதல்; 

20.அருளே செல்வம்; 

21.உயிர்க்கொலை புரியாதீர்கள்.; 

22.ஊன் உண்பதன் இழிவு;

23.ஊன் உணவு தவிர்ப்பீர்;

24.பொருளோடு அருளும் கைக்கொள்வீர்;

25.தவத்தின் பண்புநலம்;

26.காமத்தின் தீய இயல்புகள்;

27.காமம் படுத்தும் பாடு;

28.காமத்தால் இழிவடைதல்; 

29.காமத்தால் மானம் இழப்பர்; 

30.ஒழுக்கமற்றவர்களின் நட்பு தீமை தரும்; 

31.திருடுவதால் வரும் துன்பம்; 

32.பொய் பேசுவதால் வரும் வேதனை; 

33.பொய்யால் விளையும் தீமைகள்; 

34.கொலைத்தொழில் ஒழிப்பீர்; 

35.செல்வத்தின் நிலையாமை; 

36.நல்லறம் செய்வீர்; 

37.செல்வத்தை விட்டு விலகியிருப்பது சிறப்பு; 

38.பற்றின்மையே வலிமை; 

39.பொருளை விளக்குதல் மேன்மை; 

40.இளமையின் நிலையாமை; 

41.பிறருக்கும் பயன்தந்து வாழுங்கள்; 

42.பிறப்பறுக்கப் பற்றறுத்தல்; 

43.பற்றை நீக்குக; 

44.சான்றோர் சொல்லே சிறந்தது; 

45.இன்பத்துன்பத்தைச் சமமாய்க் கருதுதல்; 

46.மெய்த்தவம் நலம் தரும்; 

47.பொருட்செல்வத்தின் சிறப்பு; 

48.இல்லார்க்கு யாரும் இலர்; 

49.பொருளிலானை யாரும் மதியார்; 

50.இல்லாதவனுக்குச் சிறப்பும் இல்லை; 

51.செல்வரையே அனைவரும் நாடுவர்; 

52.பொருள் இல்லையேல் பயனில்லை; 

53.பெண்மனதை ஒழுங்குபடுத்துதல்; 

54.முதிராத காதல்; 

55.மகளுக்கு அறிவுரைகூறிய பொதுமகள்; 

56.பொருள் படைத்தவருடன் இணைய அறிவுறுத்தல்; 

57.செல்வம் குறைந்தோரை விட்டு நீங்க அறிவுறுத்தல்;

58.பொருளுடையோரை அடைய அறிவுறுத்தல்;

59.கைப்பொருள் தீர்ந்ததும் கைவிடுவர்;

60.தேயும் நிலவை ஒப்பர்;

61.வனப்பினால் செல்வரைக் கவர்தல்;

62.ஆழ்கலம் போல் அழிப்பார்கள்;

63.பொருளுடையோரை வழிபட்டுப் பணிவர்;

64.மேய்ச்சல் நிலம் மாற்றும் மாக்களாவர்;

65.மரம்தாவும் குரங்குக்கு ஒப்பாவர்;

66.தேன்பூக்களைச் சுற்றும் வண்டுபோல்வர்;

67.மனையறத்தின் மாட்சி;

68.அடக்கம் அமரருள் உய்க்கும்;

69.அறிவிலார் அறம் உரைத்தல்; 

70.மருதநிலத்தின் வளம்; 

71.பாசாண்ட சாத்தனின் பெருஞ்சிறப்பு; 

72.கணவனுக்காகக் காத்திருக்கும் காரிகை.                                              

                                               ***

குண்டலகேசி மூலமும் கதையும் உரையும்

முன்னுரை: 

ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன. குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

இவை இரண்டும் காணாமல் போன காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. கிடைத்த பாடல்களிலும் வளையாபதி, குண்டலகேசிக்குச் சொல்லப்படும் கதையின் குறிப்பாக இவற்றில் ஒரு பாடல் கூட இல்லை. குண்டலகேசி தன் வரலாற்றைக் கூறுவதாகச் சில பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 

சமண மதத்தின் குறிப்புகள் வளையாபதியிலும், பௌத்த மதத்தின் குறிப்புகள் குண்டலகேசியிலும் காணப்படுகின்றன. அறிவன் அடி - அருகக்கடவுள் அடி போற்றி என்ற இறைவணக்கப் பாடல் சமணத்தைக் குறிப்பதாகவும், இறைவன் அவன் தாள் சரண் நாங்களே - புத்தபகவான் திருவடி சரணம் என்பதாக வரும் பாடல் பௌத்தத்தைக் குறிப்பதாகவும் சுட்டுகிறார்கள். 

குண்டலகேசியின் கதையில் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசியின் (சுருண்ட கேசம் உடையவள்) கணவன் காளன். களவுத்தொழில் புரிபவன். மனைவியை அழித்து அவள் செல்வத்தை வஞ்சனையாள் அவன் அபகரிக்க நினைக்க அவளோ அவன் திட்டத்தை செயல்படுத்தி தான் தப்பிக்கிறாள். அதன்பின் தலைமுடி மழித்துக் காவியுடை அணிந்து உஞ்சை மாநகரிலிருந்த அருக்கச்சந்திரன் என்பவரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பௌத்தத் துறவியாகிப் பலருடன் வாதம் புரிந்து வென்று பின் முக்தியடைந்தாள்.

குண்டலகேசியில் மெய்த்தவம், நல்லன எல்லாம் தரும், வாழ்வின் சிறப்பு, நடப்பது நடந்தே தீரும். வாழ்க்கை விதி வழியே, செய்த வினை வழியே என்று பாடுபொருள் இருந்தாலும் காமம் தவிர்ப்பது பற்றியும் இறப்புப் பற்றியும் பாடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவமும் முடியும்போது (குழந்தை, காளை, பேரிளம் பருவம்) அதன் இறப்பு ஏற்படுகிறது. அதற்க்கு வருந்தாத மானிடர் முடிவில் முதுமை, நோய், பிணியால் ஏற்படும் இறப்பிற்காக வருந்துவது பேதமை என்று கூறியது யோசிக்க வைத்தது.

மேலும் ஒன்பது வாயில் ஊத்தைச் சடலம் இது, நாய் கழுகுக்கு இறையாகும் நாற்ற உடம்பு, புன்புலால் யாக்கை, மனித உடம்பும் மண்ணுக்குத்தான் சொந்தம் என யாக்கையின் நிலையாமையைப் போதித்தது.

அரசனைப் போற்றும் ஓரிரு பாடல்களும் உண்டு. புத்த தேவனைப் போன்ற புகழோன் என்றும் கற்றவர் போற்றும் காவலன் என்றும் அரசனைப் புகழ்கின்றன பாடல்கள்.

பிற்சேர்க்கையாகச் சில பதிப்புகளில் காணப்படும் குண்டலகேசி கூற்றாகக் காணப்படும் பாடலில் அவள் புத்த மதத்தைத் தழுவியதும் (பத்தா) அதற்கு உதவும் (சீவரம் கொடுக்கும்) மாந்தர் நீடு வாழ்ந்து முக்தியை அடைய அவள் வழங்கும் ஆசியும் பாட்டாகி உள்ளன.

ஊழையும் விதிப்பயனையும் நம் அல்லல்களுக்குக் காரணமாகச் சுட்டுகின்றன இப்பாடல்கள். வாழ்வின் நிலையாமையையும் உணர்த்துகின்றன. இதைப் படித்தவுடன் உயிர்க் கொலையும் உணர்வுக்கொலையும் தவிர்ப்பீர்கள், மேலும் என்பு தோல் போர்த்த இவ்வுடல் மீதும் பற்றற்றுப்போம். இது உண்மை. சத்தியம். 

                                         ***

நிலையாமையை உணர்ந்த குண்டலகேசி

ஒரு பொருளின் மேல் ஆசைப்படுவதும் அது கிடைத்தாலும் சலித்துப் போவதும் மனித இயல்பு. ஆனால் ஆசைப்பட்ட ஒரு பொருள் கிடைத்ததும் அடுத்த பொருளின்மேல் ஆசைப்படுவதும் அதை அடையப் போராடுவதும் அது கிடைத்ததும் அதை விட்டு விட்டுக் கள்ளமாக இன்னொன்றை நாடுவதுமாகத் திரிந்தான் ஒருவன். அவன் செயல் தவறு என்று நீதி புகட்டினாள் ஒருத்தி. அந்தக் கள்வன் பற்றியும் அவனைத் திருத்தி நீதி புகட்டியவள் பற்றியும் பார்ப்போம்.

அது ஏழாம் நூற்றாண்டுக் காலம். செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பத்தார் பலர் அந்த நகரில் வசித்து வந்தார்கள். அவர்களுள் ஒரு வணிகனின் மகள்தான் பத்தா தீசா. அழகும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவள். பருவமடைந்த வயதில் அவளின் பேரழகைக் கண்டு அவ்வூரே வியந்தது.

அவள் தந்தை வணிகர் என்பதால் அரசாங்கத்தில் ஏக செல்வாக்கு. வீட்டில் பொன்னையும் மணியையும் படியில் அளக்கும் அளவு செழிப்பம். தந்தைக்கோ மிகவும் செல்லம். மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் தந்தை. மாளிகை, மாடு, மனை, பணியாள் என்று எந்த வசதிக்கும் குறைவில்லை. இப்படிச் செல்வத் திருமகளாக வசித்திருந்த அவள் கூந்தல் சுருண்டு வளர்ந்ததால் குண்டலகேசி எனவும் அழைக்கப்பட்டாள்.

ஒருநாள் அவள் தன் மாளிகையின் உப்பரிகையில் நின்று தலை உலர்த்திக் கொண்டிருந்தபோது வித்யாசமான அக்காட்சியைக் கண்டாள். தெருவில் அரசாங்க வீரர்கள் ஒரு மனிதனைச் சங்கிலியால் பிணைத்துக் கொலைக்களத்துக்கு இழுத்துச் சென்றனர். முரட்டுத் தோற்றமும் மீசையும் கொண்ட அவன் சிறிதும் கலங்காமல் சென்று கொண்டிருந்தான். வாழ்க்கை விதி வழியே செய்த வினை வழியே என்றபடி அவனைப் பார்த்ததும் பத்த தீசாவுக்கு ஏனோ இரக்கம் தோன்றியது.

வீரர்களிடம் "அவன் பெயர் என்ன? அவன் செய்த தவறு யாது?" எனத் தோழிகள் மூலம் வினவினாள். தோழியர் விவரம் கேட்டு வந்து "பத்த தீசா, அவன் பெயர் சத்துவான். வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வழி செல்வோரின் உயிரைக் கவர்ந்ததால் அரசன் கொலைத்தண்டனை விதித்துள்ளார்" என்று கூறினர்.

"ஐயோ பாவம். அவன் திருந்த வாய்ப்புக் கொடுக்கலாம்தானே" என்று பலவாறு அவள் புலம்பவும் மகளுக்கு அந்த சாத்துவன் மேல் ஏற்பட்ட இரக்கத்தைப் புரிந்து கொண்ட அவள் தந்தை தனது செல்வாக்கால் அரசனிடம் சொல்லி அவனை விடுவிக்கிறார்.

"அரசே இவன் கொள்ளையடித்த பொருட்களுக்கீடாக நான் எனது செல்வத்திலிருந்து பொருட்களைக் கொடுத்து விடுகிறேன். இவனை விடுவிக்க வேண்டுகிறேன்" என்று அரசனிடம் பத்தா தீசாவின் தந்தை வேண்ட அரசனும் சம்மதித்து விடுவிக்கிறான்.

மேலும் பத்தா தீசாவுக்கு சாத்துவன்மேல் விருப்பம் ஏற்பட்டதைக் கண்டுபிடிக்கிறார். மனம் துணுக்குற்றாலும் நடப்பது நடந்தே தீரும் அதைத் தவிர்க்க இயலாது என்று மகள் விரும்பியவனுக்கே அவளைத் திருமணமும் செய்து வைக்கிறார். பத்தா தீசாவும் சாத்துவனும் திருமணம் ஆகி அவள் தந்தை கொடுத்த ஒரு இல்லத்தில் வசித்து வந்தார்கள். 

திருமணம் செய்து வைத்ததோடு அல்லாமல் மகளின் குடும்பத்தையும் நிர்வகித்து வந்தார் அவளது தந்தை. எந்தக் கவலையும் இல்லாமல் பத்தா தீசாவும் அவள் கணவன் சாத்துவன் என்ற காளனும் இனிமையாகக் குடும்பம் நடத்தி வந்தார்கள்.

எனினும் திருடிப் பழக்கப்பட்ட சத்துவானால் அங்கே சில காலத்துக்கு மேல் நீடித்து இருக்க முடியவில்லை. மேலும் சொந்த மனைவிதான் எனினும் அவன் மனைவி பத்தா தீசா தலைமுதல் கால்வரை அணிந்திருந்த தங்க வைர நகைகள் வேறு அவனது திருடும் ஆசையைத் தூண்டியது.

ஒரு நாள் அவன் தன் மனைவி பத்தா தீசாவை இன்பச் சுற்றுலா சென்று வரலாம் என்று அழைக்கிறான். அவளும் கணவனுடன் மகிழ்வாகக் கிளம்புகிறாள். பக்கத்திலிருக்கும் சேரர் மலைக்கு இருவரும் கைகோர்த்துச் செல்கிறார்கள்.

சிறிது தூரம் ஏறியதும் அவளுக்குக் கணவனின் நடத்தையில் சந்தேகம் தோன்றுகிறது. ஆங்காங்கே பள்ளமாக இருக்கும் இடத்தை எட்டிப் பார்ப்பதும் அதன் பின் வந்து அவள் கைபிடித்து மேலேறுவதுமாக இருக்கிறான்.

உச்சியில் ஏறியதும் "என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தீர்கள்" எனக் கணவனிடம் வினவுகிறாள் பத்தா தீசா.

"உன்னிடம் இருக்கும் நகைகளைக் கொள்ளையடித்து உன்னை கொள்ளவே அழைத்து வந்தேன்." என்று சிறிதும் இரக்கமின்றிக் கூறுகிறான் சத்துவான்.

திக்கென்று தூக்கிவாரிப் போடுகிறது அவளுக்கு. இவனைப் போய் காப்பாற்றினோமே. கடைந்தெடுத்த கயவனை நம்பித் தன் வாழ்வை வேறு ஒப்படைத்தோமே. என்ன செய்வது, எப்படித் தப்பிப்பது? என்று யோசிக்கிறாள்.

"ஐயனே நான் என் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு சாவதற்கு முன் உங்களை ஒருமுறை வலம் வந்து வணங்க விரும்புகிறேன்."

இரண்டு கால்களையும் அகல வைத்துத் திமிரோடு நின்றவன் "ம்ம்ம் சீக்கிரம் ஆகட்டும்" என்று கூற,எ வானை வலம் வருகிறாள் பத்தா தீசா. அவன் பின்புறம் வரும்போது தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அம்மலை உச்சியில் இருந்து அவனைக் கீழே தள்ளி விடுகிறாள்.

தன் புத்திசாலித்தனத்தால் அவனிடமிருந்து தப்பித்தாலும் செல்வம், உடல் இளமை, பொருள் ஆகியவற்றின் நிலையாமையை உணர்கிறாள். அதன் பின் தலைமுடி மழித்துக் காவியுடை 

அணிந்து உஞ்சை மாநகரிலிருந்த அருக்கச்சந்திரன் என்பாரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பவுத்தத் துறவியாகிறாள். அத்தோடு பவுத்தம் பற்றிப் பலருடன் வாதம் புரிந்து வெல்கிறாள்.

பவுத்தமதத்தைத் தழுவ விரும்புபவர்களுக்கு - சீவரம் கொடுக்கும் - உதவும் மாந்தர் நீடு வாழ்ந்து முக்தியை அடைய அவள் ஆசி வழங்கி உள்ளாள். எதிலும் நிலையாமையை உணர்ந்த அவள் அதை மக்களுக்கு அறிவுறுத்தி முடிவில் முக்தி அடைந்தாள். 

                                         ***

பொருளடக்கம்: 

01.கடவுள் வணக்கம்; 

02.அவையடக்கம் உரைத்தல்; 

03.மனத்துக்கண் மாசிலன் ஆதல்; 

04.உண்மைத்தவம்; 

05.இச்சையை இச்சையால் நீக்க முயல்தல்; 

06.வெள்ளத்தை வெள்ளத்தால் தடுத்தல்; 

07.உடல்மேல் பற்றறுத்தல்; 

08.இரக்கமற்ற எமன்; 

09.பருவங்களின் இறப்பு; 

10.நிலையற்ற வாழ்வு;

11.யாக்கை நிலையாமை; 

12.உடல் இச்சையைக் களைதல்; 

13.அழுகும் யாக்கையை வெறுத்தல்; 

14.யாக்கை நமதல்ல; 

15.புத்ததேவனைப் போன்ற சிறப்புக்குரியவன்; 

16.காக்கும் காவலன்; 

17.குற்றமற வாழ்க; 

18.ஊழ்வினைப்படி நடக்கும்; 

19.நன்மை தீமையைச் சமமாகக் கருதுதல்; 

20 - 24.குண்டலகேசி பாடிய ஐந்து பாடல்கள்.

                                               ***


Comments

Popular posts from this blog

கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்