சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்

புத்தகம்1.ஏணிப்படிகளில் மாந்தர்கள் - சிவா 

 Buy from Bookwomb ஏணிப்படிகளில் மாந்தர்கள் சிவா EANIPPADIGALIL MAANTHARGAL - A TREATISE ON SPIRITUALITY AND HUMAN SALVATION SHIVA



கடின அட்டை / ஹார்ட்பௌண்ட்; 

648 பக்கங்கள்; 

மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம்; 

முதல் பதிப்பு: நவம்பர் 1986; 

எட்டாம் பதிப்பு: ஆகஸ்ட் 2020.


வாசகர்களுக்கு :இந்நூலாசிரியவர்கள் தன் விவரக் குறிப்பெதையும் தெரிவிக்க வேண்டாம் என ஆக்ஞை தந்ததையடுத்து, தவிர்க்கபட்டிருக்கிறது.

- முரளி, மோகன் 

பதிப்பாசிரியர்கள். 

                                   ***

புதிய பகுதிகள் சேர்ந்த புதுப் பதிப்பு.

ஆன்மீகத் தேடல் உள்ளவர்களின் கைவிளக்கு! 

                                   ***

ஏணிப்படிகளில் மாந்தர்கள்:ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. மனித ஆத்ம ரட்சாமிர்த செய்திகளை உள்ளடக்கிய இந்நூலில் மானுடப்பிறவி குறித்தும் உலக சமூக அமைப்பு பற்றியும் விஸ்தாரமாக விவரிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் வாழும் சமூகங்களின் பழக்க வழக்கங்கள், மனித கடைத்தேற்றத்திற்கு உதவிடும் குணநலன்கள், மனிதர்களிடையே உள்ள ஆன்மீக நிலை ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி விளக்கமும் அளிக்கும் ஆன்மிக அகராதி இது.


                          ****


பதிப்புரை:  

எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக, ஸ்ரீ சிவன் ஸ்வாமிகள் அவர்களின் இந்நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. 

அவர்களுடைய 'தெய்வீகமும் ஆத்மீகமும்' நூலைப் பதிப்பிக்கும் பொருட்டு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமிகளைத் தரிசிக்க நேர்ந்தது எங்களது புண்ணியப் பயன் என்றே நம்புகிறோம்.

அன்றிருந்த அதே பௌதீக உருவம்; செங்காவி வஸ்திரம்; தீட்சயமான விழி நோக்கம். "நல்லா வருவ நீ" என்று மலர்ந்த ஆசீர்வாதத்தின் பலிதம் கண்டு மெய்யுருக நிற்கிறோம். "ஸ்வாமி! தங்கள் அனைத்து விரல்களிலும் சக்கரம் இருக்கிறதே! சக்கரவர்த்திகளுக்குத்தானே இது..." என்று ஒரு சமயம் வியந்து நின்றபோது, புன்முறுவல் பூத்தார்கள். "ஏகாக்கிரக சித்தருக்கும் அது பொருந்தும்" என்றார்கள்.

எங்களுக்கெல்லாம் ஆன்மீக விளக்காக விளங்கும் அவர்கள் அறிவுரை என்று எதையும் தனித்துப் புலப்படுத்தியதில்லை. "என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்று கேள்வி வரும். பதில் சொல்வோம். "இப்படி செய்யலாமில்லையா?" என்பார் ஆக்ஞை என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். "இரண்டுக்கும் என்ன வித்தியாசம், உனக்கு தெரியுமா?" என்று சந்தேகம் கேட்கிற மாதிரி கேள்வி பார்த்து பதில் சொல்ல ஆரம்பிப்போம், பாதியிலேயே பூக்கும் குமிண்சிரிப்பு பார்த்துத்தான் 'அது பரீட்சை' என்று தெரியும்!

சாதாரணமாக, துறவியர் என்றாலும் பிடியளவு அன்னம், சிறு பழம் என்பதையாவது ஏற்காமலிருக்க மாட்டார்கள். ஸ்வாமி அவர்களோ மூவிரலால் அளந்த அன்னம் மட்டுமே; மின்விசிறி காற்றும் கூடாது; அருந்த நீரும் வேண்டாம். லௌகீக வசதிகளை மறுத்து, தான் வாழும் காலத்தை புனிதப்படுத்துகிறார்கள்.

அவர்களின் இந்நூலுக்கு மிகுந்த நுண்மான் நுழைபுலத்தோடு தேவைப்பட்டிருக்கும் Reference என்று பல்நூல் பக்கம் புரட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்நூல் உருப்பெறும்போது, ஸ்வாமிகள் இந்நூலையும் படித்ததை நாங்கள் பார்த்தது கிடையாது. பத்திரிகை, சஞ்சிகைகளை வாசிப்பதும் இல்லை. அவர்களைத் தரிசிக்க வருபவர்கள், சமயம் நேரும் போது சில உலக வர்த்தமானங்களை தெரிவித்துக் கொள்வது உண்டு. இவைகள் அனைத்தையும் மனதில் கிரகித்துக் கொண்டு, சந்தர்ப்பங்கள் நேரும்போது, பாமரருக்கும் புரியும்படியாக விதத்தில் இவைகளை உபதேசித்து வருவதுண்டு. என்றோ, எப்போதோ பயின்றவை ஞானக் கேணி ஊற்றாக சுரக்கிறது போலும்...

இவ்வரிய நூல் நர்மதா பதிப்பக வெளியீடாக வெளிவந்தாலும், இப்பதிப்புக்குத் தோன்றாத் துணையாக இருப்பவர்கள் பலர். இதை வெளியிட ஆதரவு தந்தவர்களுக்கு ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களின் அருள் நிறைந்த ஆசி கிட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

இந்நூலைப் பயிலும் வாய்ப்பு பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு ஸ்வாமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கப் பிரார்தித்துக் கொள்கிறேன்.

அடியேன்,

நர்மதா இராமலிங்கம்

27.6.1994.

                          ****உட்பொதிவு:

மனித வர்க்கத்தில் ஏற்றத் தாழ்வான நிலைகள்' என்ற அத்யாயத்தையும் 'முக்கிய கவனிப்பு' என்ற அத்யாயத்தையும் கவனத்துடன் க்ரஹிக்காத வரையில் இந்த புஸ்தகத்தை படிப்பதில் பயனேற்படாது. பக்கங்கள் 5 - 12 தவிர, இடது பக்கத்தில் சில தொகுப்புகளின் எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், அந்தத் தொகுப்புகளிலுள்ள சில முக்கியமான விஷயங்களுக்கு தலைப்புகளும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

                                   ***

முகவுரை

001.உலக ஆயுள் - ஆதியும் அந்தமுமற்ற வேதம்;  

002.உலகம் பூராவிலும் குலங்கள்;  

003.ரத்தத்தில் மானிட தூய்மைகளும் தீமைகளும்;  

005.புலால் - களங்கமற்ற ஆகார நிர்ணயம்;  

006.நமது காலத்திய தாழ்ந்தோரின் செயல்கள்;  

016.தெய்வஸாதுவின் பக்திக்கு உதாரணம்;  

021.வேதாந்த அரிச்சுவடியில் 'இரக்கம்' என்பது ஓர் மனநோய்க்கொப்பாகும்;  

024.பண்பும் நாகரீகமும்;  

025.யாருக்கு யார் என்ன சொந்தம் (வேதாந்த பக்வங்களில் இதுவும் ஒன்றாகும்); 

028.ஸாதுக்கள் ஆக்ஷிக்கு உகந்தவர்களல்லர் - ஸாது க்ஷபக் மன்னர் (Egypt - 700 B.C.); 

029.மனசாக்ஷி - பாஸிஸ் & பிலமோன்;  

039.ஸ்ரீ ராமரும் வாலியும்;  

042.எகிப்திய பெரியோர்களும் கிரேக்க மேதைகளும்;  

044.அந்தணரின் திறமையும், பொறுப்பும்: கடந்த குலமுறையின் அநுகூலங்கள்;  

045.லிங்க வடிவத்தில் பரம்பொருள்;  

053.நமது ஜென்மாக்கள் பிறவிக் கடன்களாகும் - மலைபோல் குவியும் நமது அன்றாடத்திய தவறுகள்; 

065.பூச்சிகள், விஷ ஜந்துக்கள் போன்றவைகளுக்கு ஹானி விளைவித்தல் - ப்ராணி பந்தன யக்ஞம்;  

066.வேந்தர்களை கண்டித்த இரு வேதாந்திகள்; 

067.பசுவின் புனிதங்கள் - கண்ணப்ப நாயனார்; 

069.தவறு புரிந்த தனயனுக்கு விடுவித்த தண்டனை;  

075.- 'பெண்மை' - Women as domestic professors;  

077.தேவதாசிகள் - கோவில்களின் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்த பவித்ரமான கன்னிகைகள் (Vestals) - முதன் முதலாக ரோம நாட்டில் நமது மதத்தின் தளர்ச்சி; 

085.விருக்ஷங்களின் பராமரிப்பு - நந்தவனம்;  

092.தீயர்களை முற்றிலும் அழித்த ஸுல்தான் முராட்; 

099.தண்டனைகளையும் நெறிகளையும் நிலவ வைத்த பண்டைய பெரியோர்கள் - மங்கோலிய ஜெங்கிஸ்கானின் அற்புத பிறப்பு - ஜார்ஜ் காரா விதித்த பயங்கர தண்டனை;  

109.பாபங்களின் பெருக்கத்தால் தெய்வஸான்யத்யம் அகன்று விட்டாலும், கோவில் தரிசனத்தால் நல்லவர்களுக்கு பலன் உண்டு.; 

112.ஓர் நாட்டின் - பாபங்களை பொறுத்து இயற்கை நாசங்கள் - பண்டைய சீனர்களின் எச்சரிக்கை - விஞ்ஞான மழை வரட்சியை இழைக்கும்; 

113.D.D.T.விஷம் - ஓர் மகான் யாகத்திற்கான பொருள்களை ராவணனிடமிருந்து பெற்ற நிகழ்ச்சி; 

115.முன்பின் யோசனையில்லா விஞ்ஞானம் - ஒரு சில விஞ்ஞான விளைவுகளின் உதாரணங்கள்;  

117.பண்டைய சீனாவின் சிறப்புச் சுருக்கம் - பண்டைய உலகத்திய ஆத்மீக ஸ்தாபனங்கள்; 

123.வடக்கிருத்தல் ஜீவராசிகளின் பிறவிகள்; 

124.ஸ்பார்த்தாவின் தந்தையான லைகர்கஸ் Lycurgus; 

126.எகிப்தியச் சுருக்கம்; ஸூரிய வம்சத்திற்கு புத்துயிர்; 

131.ராசி மண்டலம்: விஷூ த்ருவம் போன்றவைகளின் இடப்பெயர்ச்சி மேற்கு திசையில் ஸூரிய உதயம்; 

133.காகிதத்தின் அநுகூலமும் ப்ரதிகூலமும்; 

138.பண்டைய தெய்வ விவேகிகள் சிவலிங்க உபாஸகர்கள் - ரோமிய எட்ரஸ்கன்கள்; 

143.ஞானப்பாதைக்கான தொகுப்பு; 

144.பண்டைய யூதமத போலிச் சாமியார்கள்;  

148.அன்னிய நாடுகளில் ஸம்ஸ்க்ருதம் - 'எந்தரோ மகானுபாவுலு' த்யாக்ராஜ ஸ்வாமிகள்; 

150.ஓர் வேந்தனின் மூலம் தெய்வீக நிவர்த்தி; 

151.நமது நாட்டின் செல்வம் - பண்டைய எகிப்தியர்களின் தாய்நாடு; 

153.வருந்தி ஒப்புதல் - மனுநீதி சோழர்; 

155.பலாத்கார மத மாற்றம்; எகிப்து, பல்கேரியா, காவா, மெக்கா - ஆரம்ப கிருஸ்தவர்களின் லிங்க வழிபாடு - நாகூர் தர்க்காவும் வேளாங்கன்னியும் - தெய்வங்களின் இயக்கத்தை உறுதிபடுத்திய கிருஸ்தவ மேதைகள் - பைபிளின் ப்ரகாரம் உலக உற்பத்தியும் முதல் மனிதனும் - அப்ரஹாம் என்கிற அபிராமு; 

156.ஸர்வம் லிங்கமயம், - ஜான் என்ற துறவி - Bogomiles என்ற சந்யாசிகள்; 

158.இறந்த பிறகு தண்டனை விடுவித்த எகிப்திய பெரியோர்கள்; 

160.தற்காலிக வைராக்யம்; 

161.வினைப்பயன்களை குறைத்துக்கொள்ள; 

162.மாந்த்ரீக வித்தைகள் - தெய்வீக போர்வையில் நிவர்த்திவாதிகள் - செப்பிடு வித்தைகாரர்கள்; 

168.மேல ஆசியாவின் இரு போலி அவதாரங்கள்; 

172.புத்தர்; 

174.மஹாவிஷ்ணுவும் அஸூரர்களும்; 

176.குணம், புத்தி, பக்தி - யுகங்களின் ஆயுள்; 

177.ஒருமையும் மாயையும் - அத்வைதம்; 

விசிஷ்டாத்வைதம் - உபநிஷத்துகள்; 

179.எகிப்தியர்களின் ப்ரேத அடக்கம்.

                                          ***

மகரிஷிகளின் நிலைகள்;  

அன்றும் இன்றும்; 

நன்றியும் பதவியும்; 

ஸோலனும் (solon) க்ரீஸஸும் (Croesus); 

க்ரீஸஸும் ஸைரஸும் (Cyrus); 

பாபிலோன் (Babylon); 

நெபுசத்ரஸர் - யூத ப்ராபெட்டுகள்; 

ஹீராதத்தர் (Herodotus); 

ஒலிம்பிக் உத்ஸவம்; 

விநாயகர் (Janus); 

ஸாக்ரட்டீஸ் - ஆன்ட்டிஸ்தனீஸ்; 

க்ரைஸ்ட்; 

தயகனீஸ் (Diogenes); 

கிரேட்டஸ் - ஹிப்பார்க்கியா; 

டெமோக்ரிட்டஸ் (Democritus); 

எபிமெனைடஸ் (Epimenides); 

எம்பிடோகில்ஸ் (Empidocles); 

பாரசீகப் போர்; 

போதேந்திர ஸ்வாமிகள்; 

நந்தனார்; 

ஸ்ரீதர அய்யாவாள்; 

புனித களவு; 

தொண்டரடிப் பொடி ஆழ்வார்; 

மாணிக்கவாசகர்; 

ஏழு உலக அதிசயங்கள்; 

வருண ஜெபம்; 

நமது புராணமும் யூதமதமும்; 

அக்ஷய பாத்திரம்; 

நாராயண தீர்த்த ஸ்வாமிகள்; 

சண்டேச்வரர்; 

திருமூலர்; 

மறதி; 

காரைக்கால் அம்மையார்; 

அப்பரடிகள் - அப்பூதியடிகள்; 

பட்டினத்தடிகள்; 

பிழையின் வினை; 

ஊழ்வினை; 

நமது ஆத்மா; 

சின்னாஞ்சாமியார்; 

தீர்த்த நாராயணர்; 

ஸதாசிவ ப்ரம்மம்;  

தேச வரைபடங்கள்.

                               ****

முகவுரை

நமது பாரதநாடு பழம் பெரும் நாடென்றும், உலகிலேயே நமது நாடு மட்டும்தான் புனித நாடென்றும், நமது நாட்டிலிருந்துதான் ஏனைய உலக நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டதை போல நமது அரைப்படிப்பாளிகளில் சிலர் மேடைகளில் பேசி வருகின்றனர். அது முற்றிலும் தவறாகும். நமது உலகம் பூராவையும் பூமாதேவி என்பதாக சாஸ்திரம் கூறுகிறது. நமது தேசத்திய ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல பெயர்களை சூட்டி நாம் ஆராதித்து வருவதைப் போல மற்றைய தெய்வ மதநாட்டினர்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் நூற்றுக்கணக்கான பெயர்களை சூட்டியிருந்தனர். குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், காது குத்தல், முடியிறக்குதல், பாட்டனாரின் பெயரை பேரன்களுக்கு சூட்டுதல், ஜல்லிக்கட்டுகளை நடத்துதல், லிங்கங்களை ஆராதித்தல் போன்றவைகள் உலகம் பூராவிலும் பரவியிருந்தன. விவாதத்தின் போது தம்பதிகள் பரஸ்பரம் உள்ளங்கைகளை அணைத்துக் கொள்ளும் (பாணிக் கிரஹணம் - Handling over of the palms) சாஸ்திர முறையை ஆதியிலிருந்தே ஒவ்வொரு நாடும் ஏற்றுவந்திருக்கிறது.

தவிர ப்ரபஞ்சத்தின் 12 ராசிகளையும், அவைகளின் பெயர்களையும், அவைகள் ஒவ்வொன்றின் ஆட்சியிலும் சஞ்சரித்து வரும் நேரத்தையும்தொன்று தொட்ட காலத்திலிருந்தே அன்னிய நாடுகள் அறிந்து வைத்திருந்தன. மேலும் அவர்கள் வாரத்தின் ஏழு நாட்களின் பெயர்களையும், முக்யமாக 72 ஆண்டுகளுக்கு மேல் பருவங்கள் பெயர்ந்து ஆரம்பிப்பதையும் அறிந்து வைத்திருந்தனர். சுருங்கச் சொல்லின் அவர்கள் வானத்திலும், ஜோஸ்யத்திலும் வல்லுநர்களாக இருந்தார்கள்

ஆதியிலிருந்தே உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஏனைய கலைகளிலும் நிபுணர்களாக இருந்து வந்ததுடன் தெய்வங்களுடன் தொடர்பை ஏற்று வந்தனர். முன்பின் தெரியாத அன்னியர்களை உபசரித்து வரும் மரபையும் ஏற்று வந்தனர். எனினும் வேதத்தில் அடங்கியிருக்கும் பல உண்மைகளை அன்னிய நாடுகள் இழக்க நேரிட்டு விட்டதாலும், இன்றைய நமது ஆராய்ச்சியாளர்கள் வேதங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிட்டு வருவதாலும் நமது தேசத்திலிருந்துதான் அனைத்தையும் அந்நியர்கள் கற்றுக் கொண்டதாக நமது ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.

தெய்வ மதத்திய கடைசிக் காலங்களில்கூட உலகத்திய அரசர்கள் நெறியுடன் ஆக்ஷி புரிந்து வந்தனர். எனினும் நாடுகளில் ஏதாவது மாசுகள் நேரிட்டால் தெய்வங்கள் தாமாகவே தலையிட்டும் வந்தன. தவிர, முக்கியமான ப்ரச்னைகளில் மக்கள் தெய்வங்களை நாடி விதாயம் பெற்று வந்தனர். இக்காலத்திய அன்னிய மதங்கள் தெய்வங்களை அகற்றிவிட்ட போதிலும் அந்த ராஜாங்கங்கள் ஆக்ஷிக்குரிய நீதிகளை கூடிய வரையில் காப்பாற்றி வருகின்றன. எனவே அவைகள் தெய்வங்களை புறக்கணித்துவிட்டாலும் தெய்வங்கள் அத்தகைய நாடுகளை ஆமோதித்து அவைகளுக்கு சுபிக்ஷத்தையும் அளித்து வராமலில்லை. இதற்கு மாறாக, அநீதிகளை ஏற்கும் ராஜாங்கங்களுக்கு இயற்கை நாசங்களை விடுவித்து வராமலுமில்லை. எந்த மதமாயினும் தெய்வங்களுக்கு பாரபக்ஷம் என்பது கிடையாது.

ராஜாங்கமும் பெரும்பாலான ப்ரஜைகளும் பாவங்களை ஸகஜமாக செயலாற்றும் பொழுது நம்மை தாங்கி வரும் பூமாதேவி துடிதுடித்து வருந்துகிறாள். இதன் காரணமாக நாடுகள் பாதிக்கப்படும்பொழுது நல்லவர்களும் அவர்களுடைய சென்ற வினைகளைப் பொறுத்து பாதிக்கப்படுவதுண்டு. ஆகவே, பகவானுடைய கோபத்தைத் தவிர்க்க வேண்டுமானால் ஓர் நல்லாக்ஷியினர் குற்றவாளிகளை அடியுடன் ஒழித்துக் கட்ட வேண்டும். ஆட்டோ மான் ஸாம்ராஜ்யத்தில் திடீரென்று தோன்றின ஸுமார் ஒரு லக்ஷம் தான்தோன்றிகளை வாளுக்கிறையாக்கி நல்லாக்ஷியை நிலை நாட்டினான் முராட் என்ற ஸூல்தான்.

நிற்க, சென்ற ஸமீப காலத்திய பெற்றோர்கள்கூட தங்களுடைய பாலர்கள் குணசாலிகளாக வளர வேண்டுமென்ற நோக்கத்தில் நீதிக்கதைகளைப் புகட்டி வந்ததுடன், குற்றங்களையும் கூடாதவைகளையும் வெறுத்திடும் கல்வியை உள்ளத்தில் ஊட்டி வளர்த்தனர். இக்காலத்திலோ பள்ளிப் படிப்பை ஓதுவதற்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, சென்ற காலங்களில் சிறுவர்கள் ஏதாவது கூடாதவைகளை புரிந்துவிட்டால் பெற்றோர்கள் அவர்களை கண்டித்தும், தண்டித்தும், பட்டினி போட்டும் விலங்கிட்டும் வந்தார்கள். இக்காலத்திலோ, தாங்கள் மெனக்கெட்டுப் பெற்ற மக்களின் செய்கைகளை கண்டித்து திருத்துவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தயாராக இல்லை.

நிற்க, நமது தேசத்தில் "யூனிவர்ஸிட்டி" என்ற கல்வியை அதனுடைய உற்ற தரத்திற்கு உயர்த்த வேண்டும். Higher Secondary பரிக்ஷையில் 75 சதவிகித மார்க்குக்கு குறைந்தவர்களை யூனிவர்ஸிட்டி படிப்புக்கு அனுமதிக்கக் கூடாது. (Technological Study யையும் Academic Study யையும் ஒன்றாக பாவித்துக் குழப்பக் கூடாது.) இன்றைய நமது பெரும்பாலான யூனிவர்ஸிட்டி மாணவர்களின் அன்றாடத்திய பலாத்கார (தீ வைக்கும் உத்ஸாகம் உட்பட) ஆர்ப்பாட்டங்களை  நமக்கு 'யூனிவர்ஸிட்டி' தேவைதானா என்றும் தோன்றுகிறது. "உங்களுடைய நாட்டின் மாணவர்கள் 'தீ வைப்பு' போன்ற பலாத்கார ஆர்ப்பாட்டங்களில் உத்ஸாகத்துடன் ஈடுபடுகிறார்களே. அத்தகைய ஊக்கம் எங்கள் மாணவர்களுக்கு ஏற்படவில்லையே" என்று ஓர் லண்டன் கலாசாலை மாணவன் நமது லண்டன் நிருபரிடம் குறையுடன் கேட்டானாம்

நிற்க, புராணங்கள் மூலம் அக்காலத்திய மகத்வங்களையும் அமானுஷ்யமான வரலாறுகளையும் அறிந்து கொள்வதைப் போல, பண்டைய சரித்திரங்களின் மூலம், ஆக்ஷிமுறைகளையும், மானிட மேன்மைகளையும் கலாசாரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒருவன் மற்றொருவனால் எந்த வகையினாலும் பாதிக்கப்படாமல் கண்காணிப்பதே ஆக்ஷிமுறைக்கான முதல் கட்டளையாகும். முறையான வாழ்க்கையையும், பயனுள்ள கலைகளையும், நோயற்ற வாழ்வுக்கான விதிகளையும் நிலவ வைப்பதே கலாசாரமாகும். நோய்களுக்கு இடமளித்துவிட்டு நோய் விழாக்களை கொண்டாட நமது முன்னோர்கள் விரும்பவில்லை. ஆஸ்பத்திரிகளுக்கு தேவையற்ற ஸமீப காலத்தில்கூட, பாட்டிமார்கள் டாக்டர்களாக விளங்கினர். சென்ற தலைமுறையினர்கள் Checkup, Caesarian, தடுப்பு ஊசிகள், விதவிதமாக பிறக்க ஆரம்பித்திருக்கும் குழந்தைகள் போன்ற பலவித கவலைகளை அறியாமலேயே ஆரோக்யத்துடன் வாழ்ந்து வந்தனர்.

கன்னிப் பெண்களை தாய்மாமன்களுக்கு திருமணம் செய்விக்கும் வழக்கத்தையும் உலகம் பூராவிலும் உள்ள தெய்வமத நாட்டினர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடைப்பிடித்து வந்தார்கள். இதன் மூலம் உடல் உபாதைகளை ஏற்காமல் திடமான ஆரோக்யத்தை ஏற்று வந்தனர். எனினும் வைத்ய நிபுணர்கள் பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். மேலும் வயது வித்யாசம் சற்று அதிகமாக இருந்த காலத்தில் திருமணத்தை முடிப்பதால் தம்பதிகளின் ஆரோக்யம், குழந்தைகளின் ஆரோக்யம் கடைசி காலம் வரையில் சீராக நிலவி வந்ததை அக்காலத்திய பெரியோர்கள் அறிந்து வைத்திருந்தனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது தெய்வமத கலாசாரத்தின் பழக்க வழக்கங்கள் சீர்கேடு அடைந்து விட்டதன் காரணமாக உலகம் ஆரோக்யத்தை இழக்க ஆரம்பித்ததுடன், ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஆரோக்யத்திலும் ஊடுருவ ஆரம்பித்தன. இந்த காரணத்தினால்தான் வருங்காலத்திய உலக மக்கள் என்ன ஆவார்களென்ற கவலையை விக்ஞான மேதைகள் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நிற்க, சில பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கட்டட வளர்ச்சிகளிலும், கோயில்களை எழுப்புவதிலும் முன்னேற்றம் அடைந்த அன்னிய நாடுகளிடமிருந்துதான் நாம் (நமது தேசம்) கற்றுக்கொண்டோம். சங்கீதம், கதகளி (மௌன நாடகம்) போன்றவைகளை அன்னிய நாடுகளிடிமிருந்துதான் நாம் இறக்குமதி செய்தோம்

ஈம சடங்குகளில் ப்ரேதத்திற்கு அருகில் அமர்ந்து போஜனத்தை ஏற்பது என்பது ஒரு முறையாகும். அதாவது ப்ரேத போஜனத்தை ஏற்பவன் தனது இலைக்கும் ப்ரேதத்துக்கும் நடுவில் ஒரு நூலை இணைத்து போஜனத்தை ஏற்பான். இத்தகையவனை 'Sin Easter' என்று ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு. இதைப் போலவே அபர சடங்குகளில் பலவற்றை அன்னிய நாடுகளிடமிருந்துதான் நாம் இறக்குமதி செய்துகொண்டு வந்தோம்.

பொதுவாக கிறிஸ்தவ சகாப்தத்திய ஆசிரியர்கள் உண்மையான சரித்திரங்களை தொகுத்து வந்திருந்த போதிலும், அவைகளில் சிலவற்றில் கலப்படங்கள் இல்லாமலில்லை. சில ராஜாங்க ஆசிரியர்களோ, உண்மைகளை மறைத்தும் நிகழாதவைகளை கற்பித்தும் தங்களுடைய நோக்கத்தை ஸாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.உதாரணமாக, கிருஸ்தவர்களே தோன்றாத காலத்தில் நீரோ (Nero) என்ற ரோமா ஸாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி தனது உத்யானவனத்தில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்களை படுகொலை புரிந்ததாக அபாண்டம் சாட்டப்பட்டிருப்பதுடன் அவர் ஒரு கூத்தாடியை, (Poppaea) அதுவும் ஓர் யூதக் கூத்தாடியை மணந்ததாகவும் ஏளனப் படுத்தப்பட்டிருக்கிறார். பாப்பையா ஓர் கூத்தாடியல்ல; அவள் யூத மதத்தை சார்ந்தவளுமல்ல. அவளுடைய பாட்டனார் ரோம ராஜாங்கத்தில் Consul பதவியை வகித்தவராவார். ரோமஸாம்ராஜ்யம் ஸுமார் 400 A.D.9 வரையில் தெய்வ மதத்தை நிலை நிறுத்தி வந்தது. Poppaea Sabina-the beautiful and licentious Daughter of T.Ollius, took the name of her maternal grandfather, Poppaeus Sabinus (who was consul A.D9, and afterwards governed Moesia till his death, A.D.35), and married Rufus Crispinus, to whom she bore a son. She left him and married Otho, and then the Emperor Nero himself. -Bectons Cyclopaedia Greece Rome. Ward Lock Co. London. நிற்க, எந்த உத்யானவனத்தில் கிருஸ்துவர்கள் நீரோவினால் அழிக்கப்பட்டதாக கற்பிக்கப்பட்டிருக்கிறதோ அந்த இடத்தில்தான் Vatican என்ற போப்பாண்டவரின் ஸ்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

It was only during the reign of Trajan that a very few persons bearing a strange faith were traced out in Rome i.e.during the first decade of the second century.

தவிர, ப்ரச்சார நோக்கத்துடன் தொகுக்கப்பட்ட எந்த மத புஸ்தகங்களையும் ஆராய்ச்சியாளர்கள் சற்றேனும் ஏற்பதில்லை. அதே முடிவுக்கு வந்த சரித்திர மேதாவிகள் அத்தகையவைகளில் நடுநிலைமை வகிக்க சரித்திர ஆசிரியர்களை வற்புறுத்தி வராமலுமில்லை. இவைகள் ஒருபுறமிருக்க, சரித்திரங்களை வாசிப்பவர்கள்.வரலாறு அல்லது நிகழ்ச்சிகளின் காலங்களையும், (கி.பி. அல்லது கி.மு.) நாடுகள் அமைந்திருக்கும் பூகோள ஸ்தானங்களையும் கவனத்தில் ஏற்று வரவேண்டியது மிக்க அவசியமாகும். ie. period and topography.

நிற்க, ஒரு சமயம் அமைச்சர்கள் நெப்போலியனை (1769-1821) அணுகி, "நமது காலத்திய சரித்திரத்தை தொகுக்க ஏற்பாடு செய்யலாமா?" என்று கேட்டுக் கொண்டதற்கு, "அப்படியானால் பொய் சொல்வதில் தீரனாயிருக்கும் ஒருவனை தேடிப்பிடித்து வாருங்கள்" என்று ஹாஸ்யமாக பதில் கூறினானாம் மன்னன். ஆகவே, உண்மையான சரித்திரங்களை பிரித்தறிந்து, அவைகளை மாணவர்களுக்கு போதிப்பதின் மூலம், அவர்கள் ஆக்ஷியின் மேன்மையையும், சிறுமையையும் அறிந்து கொள்ளவும், குணங்களிலும் நடவடிக்கைகளிலும் உயரவும் ஹேதுவாகும்.

உலகையும், மானிடர்களையும் சிருஷ்டித்த தெய்வங்கள் அப்பொழுதே வாழ்க்கை முறைகளையும், ஸகல சாஸ்திரங்களையும் அளித்து விட்டன. மதங்கள் என்ற பெயரில் சில பிரிவினர்கள் உலகில் பரவ ஆரம்பித்த வரையில் தெய்வங்களை ஆராதித்து வரும் நாம் 'மதம்' என்ற பெயரை சூட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் மற்றைய மதங்களிலுருந்து நம்மை பிரித்துக் காட்ட வேண்டியதன் பொருட்டு "ஹிந்து மதத்தினர்" என்று குறிப்பிட்டுக் கொண்டோம். அதாவது, நமது தேசத்தின் வடமேற்கு எல்லையில் 'ஸிந்து' பாய்வதால் 'ஹிந்து' என்ற பெயரை ஏற்றோம். நமது தேசத்திற்கு India என்ற பெயரை அளித்தவர்கள் பண்டைய கிரேக்கர்களாவார்கள். இதைப் போலவே தற்போதைய பல தேசங்களின் பெயர்கள் கிரேக்கர்களால் குறிப்பிடப்பட்டவையாகும்

நிற்க, அந்நியமத-புஸ்தகங்கள், நமக்கு போட்டியாக சில மாற்று முறைகளையும் கொள்கைகளையும் பண்டிகைகளையும் வகுத்துக் கொண்டிருக்கின்றனவே தவிர, ஒரு சாஸ்திரத்தைக்கூட அருளவில்லை. எனினும் தெய்வ மதத்திய நெறி முறைகளை பின்பற்றாமலுமில்லை. சென்ற காலத்தியவர்கள் இந்த நெறிமுறைகளை செயலாற்றி வந்தனர். இன்றைய அளவிலோ, முக்யமாக நமது தேசத்தில், நெறிகளை மேடைகளில் முழங்கிக் காட்டினாலே போதுமானது என்ற முடிவுக்கு பெரும்பாலோர் வந்து விட்டனர். எனவே, நமது தமிழ் நாட்டின் பாலர்களுக்கு எளிதில் ஊட்டக்கூடிய "ஆத்தி சூடி" மிக்க உதவியளிக்கக் கூடியதாகும். ஔவை அம்மையார் அதில் நெறிமுறைகளை மட்டும் உபதேசிக்கவில்லை. வாழ்க்கை கல்வியையும் போதித்திருக்கிறார். அது மட்டுமே? நோயற்ற வாழ்வை (Hygenie) ஏற்பதற்கும் அருளியிருக்கிறார். அவர் தெய்வத்தினால் அங்கீகரிக்கப்பட்டவராவார்.

'அறநெறிகள்' என்பது உலகப் பற்றுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டவைகளாகும். அறநெறிகளிலுள்ள ஏனைய குண, தன்மைகளையும் எல்லோராலும் கடைபிடித்து விட முடியாது. பாமரர்களுள் நல்லவனாக இருப்பவன் ஒரு சில ஸாதாரண நற்குணங்களை மட்டும்தான் ஏற்க முடியும். ஓர் விவேகி உயர்ந்த குணங்களையும் சிறந்த மனப்பான்மையையும் ஏற்பவனாவான். ஓர் ஸாதுவோ பிறர்க்காக வாழ்பவனாகவும், ஈடற்ற தன்மைகளைக் கொண்டவனாகவும் விளங்குவான். ஆனால் இவனுக்கடுத்த சிறந்த விவேகியோ உலகப் பற்றுதல்களிலிருந்து அகல ஆரம்பிப்பவன்; எனவே, ஸாதுவினால் கருத்துடன் கடைப்பிடிக்கப்படும் சில அபார தன்மைகள் இவனுடைய நிலையில் தானாகவே விலக ஆரம்பித்து விடுகின்றன. உதாரணமாக, எவரிடத்திலும் அடக்கத்தைக் காண்பிக்கும் ஸாதுவின் ஓர் தன்மை, சிறந்த விவேகியின் நிலையில் தானாகவே அகன்று விடும். ஆம், இவன் வேதாந்த அரிச்சுவடியில் நடந்து கொண்டிருக்கின்றவனல்லவா? இந்த வாக்யங்களிலிருந்து சிறந்த விவேகியை கெர்வம் கொண்டவனாக நினைத்து விடாதீர்கள். அவன் மற்றவர்களை 'அறியாத பாலர்களைப் போல' பார்த்து வருபவனாவான். இதைப் போலவே மேன்மேலும் உயர்பவர்கள் நமது இன்ப பாசங்களை வெறுப்பவர்களாகவும் முடிவாக, யாவற்றையும் அகற்றியவர்களாகவும் ப்ரகாசிப்பவர்களாவார்கள். நான் இத்தகைய பல நிலையினர்களை பிரித்துக் கட்ட வேண்டியதன் பொருட்டு அவரவர்களுடைய குணம், மனோபாவம், தன்மை போன்றவற்றை தொகுப்புகளாக வகுத்திருப்பதுடன் சிற்சில இடங்களில் மேற்கோள்களையும் காட்டியிருக்கிறேன். கடைசியாக சில மிக்க உயர்ந்தோர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கொடுத்திருக்கிறேன்.

நிற்க, நமது அரசியல்வாதிகள், சில உலகப் பெரியோர்களின் புனித நாட்களில் பேசும்பொழுது, ஒருவர் அஹிம்சையை கண்டுபிடித்ததைப் போலவும், மற்றொருவர் அன்பை கண்டுபிடித்ததைப் போலவும், இன்னுமொருவர் ஸத்யத்தையும் தர்மத்தையும் கண்டுபிடித்ததைப் போலவும் பொருள்படுத்தி வருகிறார்களே தவிர, இவைகளைனைத்தும் நமது ஆதிமத போதனைகளென்பதை மறந்து விடுகிறார்கள். தேசத்தின் நன்மையின் பொருட்டு 'எம்மதமும் சம்மதம்' என்பதாக இவர்கள் பேசுவதாக வைத்துக் கொண்டாலும், அந்நிய மதத் தலைவர்கள் இந்த உபதேசத்தை கண்டிப்புடன் மறுத்து வருகின்றனர்.

'சைனாவின் தந்தை' என்று புனிதத்துடன் ஆராதிக்கப்பட்டு வரும் தெய்வமதத்திய கன்ப்யூஷியஸ், (551-479) தான், ஆதிசாஸ்திரத்திலிருந்து ஓர் எழுத்தைக் கூட அகற்றவில்லை; ஓர் எழுத்தைக் கூட சேர்க்கவுமில்லை என்பதாக அறிவித்திருக்கிறார். அதாவது ஆதிசாஸ்திரத்தில் எந்த ஒரு திருத்தத்தை (amendment) கொண்டு வந்தாலும் உலகம் க்ஷீணத்தை ஏற்க நேரிட்டுவிடும் என்பதே அதன் பொருளாகும். தெய்வங்களை நிந்திக்கும் மதங்களுள் புத்த மதமும் ஒன்றாகும். ஆனால் புத்த மதத்தினர்களாக குறிப்பிடப்பட்டு வந்த சீனர்கள் தெய்வங்களை ஆராதித்து வந்தவர்களாவார்கள். அவர்கள் தெய்வங்களின் ஆக்ஞைக்கேற்ப நெறிமுறையுடன் ஆக்ஷிபுரிந்து வந்தனர். எந்த மதத்திய நாடுகளானாலும், அவற்றில் நெறிகள் இயங்கினால் சுபிக்ஷம்; நெறிகள் தவறினால் இயற்கை தண்டனைகள். சென்ற காலத்தியவர்களுக்கு முறை கேடான ஜீவனத்தையும் பாதகச் செயல்களையும் புரிவதற்கு மனம் எழவில்லை. ஆம்! அவர்கள் நல்லவர்களாக வளர்க்கப்பட்டு வந்தார்கள்.


ஓர் ராஜாங்கம், போருக்கான இராணுவத்தையும், குற்றங்களுக்கான போலீஸையும், தனது ப்ரஜைகளின் மீது ஏவி விட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்குமேயானால், அந்த ராஜாங்கத்தினர் ஆக்ஷிமுறைகளை நீக்கிவிட்டு தங்களுடைய நோக்கங்களுக்கு கொள்கைகளை வகுத்து வந்தவர்களென்பதை அறிய வேண்டியதுடன், ப்ரஜைகள் தீயவர்களாக மாறி விடுவார்களென்பதையும் அறிய வேண்டும். இத்தகைய ராஜாங்கங்கள் தெய்வங்களின் கோபத்திற்கு இலக்காவதுடன், நாடுகளில் வெள்ளம், பூகம்பம், பனிப்புயல், பயிர்களின் நாசம், கடும் வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் போன்ற விதவிதமான தவிப்புகளுக்கும் மக்கள் இரையாக நேரிட்டுவிடும். தவிர, தகாதவர்களின் ஆதரவை திரட்டும் உபாயத்தை ஓர் ராஜாங்கம் ஏற்றாலும், ப்ரஜைகளனைவரும் பலவிதங்களில் வாழ்க்கை தவிப்பை ஏற்க நேரிடும். மக்களை ஆளுவதற்காக, ராஜாங்கங்கள் ஏற்பட்டனவே தவிர, ராஜாங்கங்களை ஆளுவதற்காக மக்கள் ச்ருஷ்டிக்கப்படவில்லை. இக்காலத்தில் சிறந்த விவேகிகள் தோன்றுவது அரிதாகி விட்டதால், விவேகிகளுக்குள் சிறந்தவர்களை ஆஸனத்தில் அமர்த்த வேண்டும். உலகம் நல்லவர்களை தாங்கி வரவேண்டுமென்பதே எனது அவாவாகும். இத்துடன் இதை முடித்துக் கொள்ளுகிறேன். இந்த புஸ்தகம் வெளிவருவதற்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான ஆசிகள்.

                               ****

மனித வர்க்கத்தில் ஏற்றத் தாழ்வான நிலைகள்: 

Gradations in Human Levels : 

இந்தத் தலைப்பின் கீழ் மிக்க தாழ்ந்த நிலையிலிருந்து மிக்க உயர்ந்த நிலை வரையிலுள்ள மானிட வர்க்கத்தினரின் நடவடிக்கை, குணம், செயல், தன்மை, மனோபாவம், மனோநிலை போன்றவைகளை பல தொகுப்புகளின் மூலம் வகுத்திருக்கிறேன். அத்தகைய நிலைகளாவன : 

1.பாபி : பாவங்களையும் மகாபாபங்களையும் கொடிய பாபங்களையும், பாதகச் செயல்களையும் புரிபவன். இத்தகையவர்களை பிரித்தறியும் வேலையை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

2.பாமரன் : அற்ப பாபங்களையும் பிழைகளையும் நற்செயல்களையும் புரிபவன்.

3.விவேகி : அற்ப பாபங்களுக்கு பயப்படுபவன். வாழ்க்கையில் நிதானத்தைக் கொண்டவன். 

4.ஸாது : தன்னலமற்றவன். பிறர்க்கு பணிபுரிவதை கடமையாகக் கொண்டவன். 'தான்' என்ற அகந்தை அறவே அகன்றவன். பொதுவாக 'ஸாது' என்ற பதத்தை நம்மவர்கள் குறிப்பிடும்பொழுது 'அசடு' 'மந்தன்' 'நல்லவன்' போன்ற பல கருத்துக்களை சந்தர்ப்பங்களை அநுஸரித்து பயன்படுத்தி வருவதுடன், விபூதி ருத்திராக்ஷத்தையோ, நாமம் துளசி மாலையையோ தரித்து ஓரிடத்திலமர்ந்து இலவச பிக்ஷை ஏற்று வருபவர்களையும் 'ஸாதுக்கள்' என்ற பதத்தால் குறிப்பிடும் வழக்கத்தையும் ஏற்று வருகிறார்கள். இத்தகையவர்கள் உண்மையில் தெய்வத்தை நினைத்துக் கொண்டிருப்பவர்களேயானால் அவர்களை தெய்வீக பாமரர்கள் என்று குறிப்பிடலாம். ஆனால் ஸாதுவின் நிலையினராக நான் குறிப்பிட்டிருப்பது அத்தகையவர்களையல்ல. எனவே என்னால் விளக்கப்பட்டிருக்கும் தன்மையைக் கொண்டவர்களைத்தான் 'ஸாது' என்ற பதத்தால் குறிப்பிட வேண்டுமே தவிர அத்தகைய தன்மைகளனைத்தையும் ஒருவன் அடையாத வரையில் அவனை ஸாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற ஓர் பழமொழியை கொண்டிருக்கிறோமே, அந்த பழமொழி இத்தகைய ஸாதுவைத் தான் குறிப்பிடுவதாகும்.

5.சிறந்த விவேகி: தூரத்ருஷ்ட்டியைக் கொண்ட புத்திமான் (Man of Wisdom). தன்னை அண்டியவர்களுக்கு யுக்தமான யோசனைகளை அளிப்பவன். சிக்கலான ப்ரச்னைகளில் நீதியை தெளிவாக்குபவன். வேதாந்த மனப்பான்மையுடன் வாழ்க்கையையேற்பவன்.

6.முற்றின விவேகி அல்லது உலகைத் துறந்த துறவி : குடும்பத்தை கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் குடும்ப பாசத்தையும், உலக பாசங்களனைத்தையும் அகற்றியவன். செயல் வேதாந்தி. Absence of all wants is happiness என்றார் ஒரு மேதை. அத்தகைய வற்றாத இன்பத்தில் வாழ்பவன். இவர்கள் ஆத்மாவைப் பற்றியும், ஆத்மீக நிலையைப் பற்றியும் விளக்கம் கொடுப்பதும் உண்டு. முற்றின விவேகிகளில் சிலர் இல்லங்களை அகற்றி, நினைத்த இடங்களில் அமர்ந்து எவரிடமும் உரையாடாமல், வலுவில் வரும் அரும் பிக்ஷையை ஏற்று இயங்கி வருபவர்களாவர். இவர்கள் தங்களை அண்டி தரிசிப்பவர்களி நெருங்கவிடாமல் ஏசித்தள்ளுவதுமுண்டு. இத்தகையவர்களை பழுத்த விவேகி என்று கூறலாம். இந்த இரு விவேகிகளும் உலகை மாய்கையாகக் காணும் துறவிகளல்லர். ஆனாலும் தெய்வங்களையோ கடவுளையோ ஸ்மரிக்காதவர்களுமல்லர்.

7.தெய்வ விவேகி: இவர்கள் ஓர் ப்ரத்யேகமான நிலையினர்கள். பண்டைய உலக நாடுகளனைத்திலும் ப்ரகாசித்து வந்த ப்ராம்மணர்கள். மகரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள். குடும்பத்தை வகித்தாலும் தாமரைத் தண்ணீரைப்போல் இயங்குபவர்கள். கடினமான சாஸ்திர விதிகளை கடைபிடித்தவர்கள். தூய்மையின் சிகரமாக விளங்கியவர்கள். தெய்வங்களுடன் தொடர்பை கொண்டவர்கள். மற்றவர்களால் தெய்வம் போல் மதிக்கப்பட்டவர்கள்.

8.தெய்வ ஸாது : முரட்டு பக்திமான்கள், நாயன்மார்கள், ஆழ்வாராதிகள், பக்திதாஸர்கள் போன்றவர்களைப் போல் இயங்குபவர்கள். விதவிதமான வகைகளில் தெய்வீக பணிகளை ஏற்பவர்கள்.

9.மகான் : குடும்பத்தைக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் உலக பாசங்களை அகற்றி தெய்வபாசத்தில் மட்டும் ஆழ்ந்து விடுபவர். எத்தகைய எதிர்ப்பு சக்திகளாலும் பாதிக்கப்படாதவர்.

10.தன்னையும் துறந்த துறவி : தெய்வ பாசத்தையும் அகற்றியவர். ஆத்மீக சக்தியை அடைந்தவர். பேரின்பத்தில் ஆழ்ந்திருப்பவர்.

11.ஞானி : பரம் பொருளான ப்ரம்மத்துடன் கலப்பவர். 

என்னுடைய தொகுப்புகளை பார்த்த மாத்திரத்தில் "நாம் எந்த நிலையில் இயங்கி வருகின்றோம்" என்ற அவாவை ஆர்வமுள்ளவர்கள் ஏற்காமலிருக்க முடியாது. ஆனால் இந்த தொகுப்புகளை மேலெழுந்தவாரியாக நீங்கள் வாசிப்பீர்களேயானால் உங்களுடைய நிலையை உங்கள் விருப்பத்தின்படி முடிவு கட்டலாமே தவிர, குறிப்பாக எந்த நிலையில் இயங்கி வருகிறீர்கள் என்பதை தீர்மானமாக நிர்ணயித்துக் கொண்டு விட முடியாது. உதாரணமாக: ஓர் முரடனிடம் அகப்பட்டுக் கொண்ட ஓர் ஜேப்படிக்காரன் "தூற்றுபவனை அடிபணிபவன் ஸாது' என்ற வரியையும், ஓர் ஸங்கீத வித்வான் 'தெய்வ லீலைகளை புகழ்ந்து இசைப்பவர் மகான்' என்ற வரியையும், ஜீவனத்திற்கு தடுமாறும் ஓர் தரித்திரன் 'உலக போகங்களை மறந்தவர் மகான்' என்ற வரியையும், தெய்வங்களை நிந்திக்கும் ஓர் அன்னிய மதத்தினன் 'தெய்வங்களை வணங்காதவர் துறவி' என்ற வரியையும், படுத்த படுக்கையிலிருக்கும் ஓர் நோயாளி 'மருந்தை போல் ஏற்கக் கூடியவர் துறவி' என்ற வரியையும், பெரும்பாலும் போதையில் ஆழ்ந்திருக்கும் ஒருவன் ;குடும்ப பொறுப்பில் கருத்தற்றவன் முற்றின விவேகி' என்ற வரியையும், பிள்ளைப்பேறு இல்லாத ஒருவன் 'சந்ததியற்றவர் துறவி' என்ற வரியையும், முழுச் சோம்பேறியாக இயங்கும் ஒருவன் 'சும்மாயிருப்பவர் ஞானி' என்ற வரியையும் காண நேரும்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு உயர்ந்த நிலையை தவறாக நிர்ணயித்துக் கொள்ள முயல்வீர்களேயானால், ஓர் குருடன் தன்னுடைய கண்களை ஓர் கழுகின் கண்களுக்கு ஸமானமாகக் கூறிக் கொள்ளும் விந்தைக்கொப்பாகி விடும். இதன் மூலம் நீங்கள் பரஸ்பரம் கேலிச் சிரிப்புக்கு இலக்காக நேரிடும்.

                    ****************

Comments

  1. ஐயா, வணக்கம்.
    உங்கள் வலைத்தளத்தில் துக்ளக் சத்யா எழுதிய மாடசாமியின் மனசாட்சி பல இடங்களில் தேடியும் பேசியும் மின்னஞ்சல் அனுப்பியும் எங்கும் இல்லாததால், உங்களிடம் புத்தகம் விற்பனைக்கு இருந்ததை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்! அந்த புத்தகம் உண்மையிலேயே இருப்பில் உள்ளதா என்று அறிய தங்கள் அலைபேசியை அழைத்து பேச விழைந்தேன். ஆனால் பேச முடியவில்லை இன்று, ஞாயிற்றுகிழமை அதனால் போலும். புத்தகம் இருப்பில் உள்ளதா என்று தயவு செய்து குறுந்தகவல் மூலம் பதில் சொல்லவும். இங்கனம் ஸ்ரீராம் கண்ணன். சிட்னி, ஆஸ்திரேலியா.whatsapp +61469593202

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்