'சோ' @ சோ ராமசாமி இயற்றிய புத்தகங்கள் - 1.எங்கே பிராமணன்? 2.ஹிந்து மஹா சமுத்திரம்
சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது. இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.
சோ ராமசாமி இயற்றிய புத்தகங்கள்:-
1.எங்கே பிராமணன்?
2.ஹிந்து மஹா சமுத்திரம் - ஒன்று முதல் ஆறு பாகம் வரை
புத்தகம் 1.எங்கே பிராமணன்?
கலாச்சாரம்/ வேதம் சார்ந்த புதினம்/ நாவல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
440 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: 1996;
இருபத்தி மூன்றாம் பதிப்பு: 2021.
முன்னுரை:
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'டைம்' பத்திரிகையின் சமீபத்திய இதழ் ஒன்றில், ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. 'கர்ப்பமாக இருக்கும் அமெரிக்கப் பெண்களில் சிலர் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவு வளர்ச்சி வேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக - வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்குப் பல விதமான பாடங்களைப் புகட்டுகிறார்கள். ஏற்கெனவே, ஒரு சில வருடங்களுக்கு முன்பாகவே சிலர் இம்முயற்சியைச் செய்தனர். இப்படிக் கர்ப்பத்திலேயே போதனை பெற்று பிறந்த குழந்தைகள் இப்போது, மற்ற குழந்தைகளைவிட அறிவு வளர்ச்சி பெற்றவையாக இருக்கின்றன. ஜப்பான் நாட்டிலும் இந்தப் பழக்கம் பரவி வருகிறது...' இது அந்தச் செய்திக் கட்டுரையின் சாராம்சம்.
இதைப் படிக்கும் பொது வியப்படைகிறோம். "அட! இந்த அயல் நாட்டவர்கள் என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்!" என்று அவர்களுடைய திறைமையைப் பாராட்டுகிறோம். ஆனால், நம் நாட்டில் புழங்கி வரும் புராணக் கதையில் 'அபிமன்யு' சுபத்திரையின் கர்ப்பத்தில் இருந்த போது கிருஷ்ணனும்,எ அர்ஜுனனும் பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்து விடும் யுத்த முறையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சுபத்திரையின் வயிற்றில் இருந்த சிசு (அபிமன்யு) இதைக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆகையால், பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வித்தையை அபிமன்யு இயற்கையாகவே அறிந்திருந்தான். கிருஷ்ணனும், அர்ஜுனனும் அந்த வியூகத்திலிருந்து வெளியேறும் வழியைப் பற்றி அப்போது பேசாததால், அதை அபிமன்யு அறியவில்லை... உள்ளே சிக்கிக் கொண்டான் என்று கூறப்படும் பொது அதை ஏளனம் செய்கிறோம். 'என்ன பிதற்றல் இது? கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை, வெளியே பேசப்படுவதைக் கற்றுக் கொள்கிறதாம் ! சரியான முட்டாள்தனம்' என்று பேசுகிறோம். அதுவே இன்று செய்தியாகும் போது, வியப்படைகிறோம். ஏற்கெனவே, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே, நமது பூமியில் இது பற்றிச் சிந்தித்திருக்கிறார்களே என்ற எண்ணமே தோன்றுவது இல்லை. நமது முன்னோர்களின் அறிவு தீட்சண்யத்தை நினைத்துப் பெருமைப்படும் சுயமரியாதைகூட, நம்மிடம் இல்லாமல் போய் விட்டது.
டைம் பத்திரிகையிலேயே இன்னொரு கட்டுரை. இது கொலம்பஸ் பற்றியது. அமெரிக்காவைக் 'கண்டுபிடித்தது' கொலம்பஸ் - என்று சரித்திரப் பாடங்களில் படித்து விடுகிறோம். ஆனால், அவரைப் பற்றிச் சரித்திரத்தில் இதுவரை கூறப்பட்டதெல்லாம் மெய்தானா? அமெரிக்காவில் இருந்த பூர்வ குடிமக்களின் வாழ்வையே, கொலம்பஸ் நாசமாக்கினாரா? மற்றவர்களுக்குச் சேர வேண்டிய பெருமையையும், தனதாக்கிக் கொள்ளும் செயல்பாடு அவரிடம் இருந்ததா ?...' என்பது போன்ற கேள்விகள் இன்று அமெரிக்காவில் எழுப்பப்படுகின்றன. அதாவது ஏற்கெனவே சரித்திரம் என்ற பெயரில் நிலை நின்று விட்ட தகவல்களில் எவ்வளவு பொய், கலப்படம் இருக்கிறதோ - என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.
நம் நாட்டிலோ அந்நியரால், அதுவும் ஆக்கிரமிப்பாளர்களால், எழுதப்பட்ட சரித்திரத்தை அப்படியே, எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்று விட்ட நாம் இன்றும்கூட அது பற்றிச் சந்தேகப்படுவதில்லை. அப்படிச் சந்தேகப்படுபவர்களைப் பிற்போக்குவாதிகளாகவே நினைக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். ஆங்கிலேயர் எழுதிய நமது சரித்திரம்தான், நமது பழங்காலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது - என்று நம்புவதுதான் நாகரிகமான செயல் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த அந்நிய இனத்தைச் சேர்ந்தவர்களோ, முன்பு தங்களவர்களால் தங்களைப் பற்றி எழுதப்பட்ட சரித்திரத்தையே, சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார்கள்.
பிறகு ஏற்படப் போகும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை ஜூல்ஸ் வெர்ன், ஹெச்.ஜி.வெல்ஸ் போன்றவர்கள், முன்கூட்டியே தங்களுடைய கற்பனை இலக்கியங்களில் எழுதினார்கள் என்பதால் அவர்களை பாராட்டுகிறோம். அவர்களுடைய கற்பனா சக்தி எவ்வளவு தூரம் வேலை எண்ணிப் பார்த்து மலைக்கிறோம். ஆனால், இன்று வந்துள்ள விமானங்களையும் அணு அயுதங்களையும் எதிர்பார்த்தது போல், பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே நமது புராணங்களில் புஷ்பக விமானம், ப்ரும்மாஸ்திரம் - என்றெல்லாம் எழுதிய வாழ்மீகியையும், வியாசரையும் நினைத்து நாம் வியப்பதில்லை. 'இதையெல்லாம் பற்றி இவர்களால் எப்படி அன்றே சிந்தித்துப் பார்க்க முடிந்தது?' என்று எண்ணி நாம் மலைப்பதில்லை. கணிதத்திலும் வான சாஸ்திரத்திலும் பெரும் நிபுணத்துவம் பெற்றிருந்த நமது பாஸ்கரனையும், ஆர்யபட்டாவையும் பற்றி நாம் பெருமையாக நினைப்பதில்லை. பாரதத்தில் தோன்றிய கணித மேதைகளால் வகுக்கப்பட்ட எண் குறிகளை ஒட்டித்தான் இன்று உலகமே எண்களைக் குறிக்கிறது - என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை.
'பூஜ்யம்' என்ற கணித சிந்தனை, நம் நாட்டில்தான் தோன்றியது. இதன் மூலமாகத்தான் கணித சாஸ்திரமே பல முன்னேற்றங்களை அடைய முடிந்தது. அறுவை சிகிச்சையிலும், மருத்துவ முறையிலும் நமது நாடு பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில், பிரமிக்க வைக்கக்கூடிய வகையில் அரசு நிர்வாகத்திற்கான வழிமுறைகளும், தத்துவங்களும் கூறப்பட்டிருக்கின்றன. நீதி நிர்வாகத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே நாம் மிகவும் முன்னேறியிருந்தோம்.
இத்தனை சாதனைகளையும் நிகழ்த்தியவர் யார்? 'மூட நம்பிக்கை கொண்டவர்கள்; இட்டுக் கட்டிய கதைகளை நம்பியவர்கள்; பிற்போக்குவாதிகள்; சுய சிந்தனை அற்றவர்கள்...'என்றெல்லாம் இன்று வர்ணிக்கப்படும் நமது முன்னோர்கள்தான் இவ்வளவு சாதித்திருக்கிறார்கள். ஹிந்து மத (இந்தப் பெயரே சரியில்லை; - இது பற்றிய விளக்கங்கள் பிறகு வரும். வழக்கில் வந்து விட்டதால் இந்தப் பெயரே பயன்படுத்தப்படுகிறது) நம்பிக்கைகளை வளர்த்தவர்களும், போற்றியவர்களும்தான் இந்தச் சாதனைகளைச் செய்தார்கள். முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும், அநியாயமான பாகுபாடுகளையும், துவேஷத்தையும் ஒரு மதம் வளர்த்து வந்தது என்றால், அதில் நம்பிக்கையுடவர்களால், இப்படிப் பட்ட அறிவாற்றலோடு செயல்பட்டிருக்க முடியுமா?
ஹிந்து மதம் சிந்தனைக்கு முக்கிய இடத்தை கொடுத்ததால்தான், அதை ஏற்றவர்களால் இந்தச் சாதனைகளைச் செய்ய முடிந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உபநிஷத்துகளிலும், புராணங்களிலும், வாதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 'ஏன்? எப்படி? எதனால்?' என்ற கேள்விகளும், அதற்கான விடைகளும் இந்த மாதிரி இலக்கியங்களில் பல இடங்களில் வருகின்றன.
'நான் சொல்கிறேன். கேட்டுக் கொள்' என்ற முறையிலும் பல விஷயங்கள் கூறப்படுகின்றன - என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதனுடன் கூடவே கடுமையான விவாதங்களுக்கும் நிறையவே இடம் அளிக்கப்பட்டிருக்கிறது... என்பதை நாம் உணராமல் இருந்து விடக்கூடாது.
பகவத் கீதையில் கூட, அர்ஜுனனுக்கு விரிவாக உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, இறுதியில் என்ன சொல்கிறார்? ரகஸ்யத்திலும், ரகஸ்யமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன்... இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்' என்றார் கிருஷ்ணர்!
'இதுதான் வழி - நீ நண்பன். உனக்கு நல்லதைச் செய்கிறேன் - எல்லா அறங்களையும் துறந்து என்னையே சரண் எய்துவாயாக- எல்லாப் பாவங்களிலுருந்தும் உன்னை நான் விடுக்கிறேன் - எது எது பெருமை உடையதோ, எது அழகுடையதோ, வலிமை படைத்ததோ, அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது என்று உணர்வாயாக' - என்றெல்லாம் கூறிய கிருஷ்ணர் இறுதியாக 'நன்றாக யோசித்து, எப்படி இஷ்டமோ அப்படிச் செய்' என்கிறார்.
அவனவன் சிந்தனை செய்து, சரியான வழி எது என்று தெளிந்து அதை மேற்கொள்ள வேண்டும் - என்று வலியுறுத்துவது ஹிந்து மதத்தின் ஒரு அடிப்படை அணுகுமுறை. இதைத்தான் 'ஸ்வதர்மம்' என்றும் சொல்கிறார்கள் என்பதே என் கருத்து.
இதனால்தான் சமூக வழிபாட்டு முறை - என்பதுகூட ஹிந்து மதத்தில் ஏற்படவில்லை என்று நான் நினைக்கிறேன்.
இதனால்தான் 'போப்' போன்று சர்வ அதிகாரம் பெற்ற மதத் தலைவரும் ஹிந்து மதத்தில் இல்லை என்றும் கருதுகிறேன்.
அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று சித்தாந்தங்கள் பலவகையாக உருப்பெற்றதாகும், இந்தச் சிந்தனை சுதந்திரமே வழி வகுத்திருக்கிறது.
தத்துவங்கள், போதனைகள், அறிவுரைகள் ஆகியவை மத இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எதை ஏற்பது, எதை ஏற்காமல் விடுவது என்பது ஒவ்வொரு தனி மனிதனின் இஷ்டத்தைப் பொறுத்தது.
'இஷ்டம்' என்பது இவ்விஷயத்தில் என்ன? தானாக படித்தோ, அல்லது படித்தவர்கள் கூறுவதைக் கேட்டோ, பல விஷயங்களைப் புரிந்து கொண்ட பிறகு, அதில் எது தனக்கு ஏற்றது - என்று ஒருவன் தீர்மானித்தால்,எ து அவனது இஷ்டம். அல்லது பெரியோர்கள் சொல்வதால் அவ்வழியை ஏற்பதே நல்லது என்று ஒருவன் நினைத்தாலும், அது அவனுடைய இஷ்டம். தானாக இது பற்றிச் சிந்தித்து, பல வழிமுறைகளை ஒருவன் நிராகரித்தாலும்கூட, அதுவும் அவனுடைய இஷ்டமே.
ஆனால், வேண்டுமென்றே துவேஷம் காரணமாகவோ, அல்லது பிழைப்பதற்காகவோ, ஒருவன் ஒரு வழிமுறையை மேற்கொண்டாலும் சரி, நிராகரித்தாலும் சரி - அதற்குப் பெயர் அவனுடைய 'இஷ்டம்' என்று ஆகாது. அது மோசடி. வரட்டுத்தனம்.
இப்போது நான், இந்த என்னுடைய முயற்சியில் நான் படித்த, கேட்டுத் தெரிந்து கொண்ட, ஓரளவு யோசித்து முடிவு செய்த, சில விஷயங்களைக் கூறும் போது அவற்றை ஏற்பதும், ஏற்காததும் வாசகர்களின் இஷ்டம்.
பழைய விஷயங்களை அலசிப் பார்க்கும் போது, இரு வழிகளில் நாம் அவற்றை அணுகலாம். இன்று நம்மால் ஏற்க முடியாத தத்துவங்கள், இன்றைய மனித நாகரிகத்திற்குச் சற்றும் ஒவ்வாத விஷயங்கள் இருப்பதால், 'இந்தப் பழைய சமாசாரங்கள் எல்லாமே குப்பை - ' என்று அவற்றைக் கண்டனம் செய்து ஒதுக்கி விடுவது ஒரு வழி.
'இன்றைய நாகரிகத்திற்கும் ஒத்து வரக்கூடிய, இன்றைய வாழ்க்கைக்கும், வழிகாட்டக் கூடிய விஷயங்கள் இருப்பதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே இவ்வளவு சிந்தித்து இவ்வளவு அழகான எண்ணங்களை வெளியிட்டிருக்கிறார்கள்!' என்று அவற்றை ஏற்கலாம் - இது இரண்டாவது வழி. நான் இதைத்தான் மேற்கொள்கிறேன்.
புராண, இதிகாசங்களில் இன்று நம்மால் நம்ப முடியாத பல நிகழ்ச்சிகளும், ஏற்க முடியாத விஷயங்களும் இருப்பது உண்மைதான். 'இது என்ன அபத்தம்!' என்று நினைக்கும்படியாகக் கூட விஷயங்கள், நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால், இவற்றை மட்டும் பார்த்து எல்லாமே பிதற்றல் என்று முடிவு செய்வதா ? அல்லது இவற்றை மீறி புராணங்களிலும், இதிகாசங்களிலும் கொட்டிக் கிடக்கின்ற வியக்கத்தக்க அறிவுபூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பதா?
மனித நேயம், தீர்க்கமான சிந்தனை, என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய உண்மைகள்; ராஜ நிர்வாகத்தில் இருந்து சாதாரண மனிதன் அன்றாடம் கடைபிடிக்கக்கூடிய வழிமுறைகள் வரை இன்றைய நடைமுறைகளுக்கும் ஏற்ற அறிவுரைகள் என்று ஹிந்து மத இலக்கியங்களில் நிறையவே இருக்கின்றன. இவற்றை இயற்றியவர்கள், அறிவுக்கும், பண்புக்கும் ஒவ்வாத விஷயங்களை எவ்வாறு சொல்லி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஆகையால் அம்மாதிரி விஷயங்கள் இடைச் செருகல்களாக இருக்கக்கூடும்.
இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டாலும், எது இடைச் செருகல் என்று யார் நிர்ணயிப்பது? இன்றைய ஆராய்ச்சிகள் மூலம் முடிவு செய்யப்படக்கூடிய விஷயம் அல்ல இது. ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தன மனத்திற்கேற்ப கூறும் கருத்துக்களை, முடிவான தீர்வாக அங்கீகரித்துவிட முடியாது. ஆகையால், இடைச் செருகல்கள் எவை என்று நிர்ணயிக்க முடியாத நிலையில் தர்ம நியாயங்களைச் செய்வதற்காக எழுதப்பட்ட இலக்கியங்களில், அவற்றுக்கு முற்றிலும் விரோதமான போதனைகள் இருந்தால், அவைதான் இடைச் செருகல்கள் என்று கருதுவது நியாயமே. இது என் கருத்து, என் அணுகுமுறை.
நான் பண்டிதன் அல்ல, மாணவன் என்றுகூட சொல்லிக்கொள்ள முடியாது. ஹிந்து மதம் பற்றியும், அதை ஒட்டி எழுந்த தத்துவங்கள் பற்றியும், காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்ட வகை பற்றியும், பண்டைய ராஜ்யங்களில் காணப்பட்ட நடைமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு - என்று வேண்டுமானால் நான் சொல்லிக் கொள்ளலாம்; அவ்வளவுதான்.
வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸ்மிருதிகள், புராண - இதிகாசங்கள், இவையெல்லாம் ஒரு மிகப் பெரிய சமுத்திரம். அதைக் கடந்து விட்டவர்கள் யாருமே இருக்க முடியாது என்றுகூடச் சொல்லி விடலாம். ஆனால், அதில் நீந்தும் வல்லமை படைத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அந்தச் சமுத்திரத்தில் குளித்து முத்தெடுத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். நானோ மிஞ்சி மிஞ்சி போனால் 'அலை ஓரத்தில் நின்றவன்' என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அந்த அலை ஓரத்தில்கூட நிற்காதவர்கள் பலர் இருப்பார்கள். அலை ஓரத்தில் நின்று, சமுத்திரத்தைக் கண்டு மலைத்து நிற்கும் நான் அச்சமுத்திரத்தில் நீந்தியவர்களிடமும், முத்துக் குளித்தவர்களிடமும் பேசி, அவர்களது அநுபவங்களில் சிலவற்றைப் புரிந்து கொண்டேன். அலை ஓரத்தில்கூட நின்று பார்க்காதவர்களுக்கு, அந்த அநுபவங்களை என் வழியில், கதையாக எடுத்துரைத்து, சமுத்திரத்துடன் அறிமுகம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையில் நான் எடுத்துக் கொள்ளப் போகும் பிரச்னைகளைப் பற்றி, ஏற்கெனவே பலர் எழுதியிருந்தார்கள். மகாகவி பாரதியார், இப்பிரச்னைகள் சிலவற்றைப் பற்றி மிக அருமையான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவருக்குப் பின் மாதவய்யா என்றவர், இப்பிரச்னைகளில் சிலவற்றை வைத்துச் சில கதைகள் எழுதியிருக்கிறார். அதற்குப் பின் பல எழுத்தாளர்கள் கதைகள், குறுநாவல்கள் போன்றவற்றில் இப்பிரச்னைகளில் சிலவற்றைத் தொட்டிருக்கிறார்கள். ஏன் புராணக் கதைகள் சிலவற்றில்கூட இப்பிரச்னைகள் ஆராயப்பட்டிருக்கின்றன.
நான் எழுதும் இந்தத் தொடர் கதையில், புதிதாக நான் எதையும் பார்த்துவிடப் போவதில்லை என்பதை நானே உணர்கிறேன். ஆனால், நான் பார்க்கப் போகும் கோணம், புதியதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது மறுபட்டதாகவாவது இருக்க வாய்ப்பிருக்கிறது.
மனித சமுதாயத்தின் உயர்வுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட மிகப் பெரிய தத்துவங்களை, நாம் புரிந்து கொள்ளா விட்டால் கூடத் தவறில்லை. அந்தத் தத்துவங்களில் காலப் போக்கில் ஏற்பட்டு விட்ட - அல்லது ஏற்படுத்தப்பட்டு விட்ட - வக்கிரங்கள், சிக்கல்கள், அனர்த்தங்கள் - இவற்றையெல்லாம் கூட நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் தவறில்லை.
ஆனால் ஒரு மிகப் பெரிய பொக்கிஷம் நம்மிடம் இருக்கிறது என்பதையாவது, நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதில் சில இடங்களில் வேண்டாத குறுக்கீடுகள், இடைச் செருகல்கள் நேரிட்டிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாசகர்களுக்கு மேலும் ஒரு வார்த்தை. ஒரு கதை வெறும் கதையாகவேதான் இருந்து தீரவேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. கற்பனை கதாபாத்திரங்களையும், கற்பனை நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொண்டு சில உண்மைகளைக் கூறுவதில் தவறில்லை. இந்தத் தொடர் கதையை எழுதுவதில் அதுவே என் முயற்சி.
கதையை விட்டது போதும் என்ற மனத்திருப்தியுடன், கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
ஒரு தொழிலதிபரின் குடும்பம், ஆசிரியர் ஸ்டைலில் ஒரு பிராமண தொழிலதிபரின் குடும்பம், அந்த குடும்பப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட நாவல். சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று அலையும் வசுமதி, அவளுடைய கணவன் நாதன், அவர்களுக்கு தப்பிப் பிறந்த பிள்ளை அசோக் (கைலாயத்தில் எங்கே பிராமணன் என்ற வாதத்தை தொடர்ந்து ஈசன் வஷிஸ்டரை அசோக் என்ற மானிடப் பிறவியாக அனுப்புகிறார், பூணூல் அணிந்து ப்ரம்மோபசேசம் முடிந்து ஒரு உண்மையான பிராமணனை சந்தித்த பின் அசோக் என்பவன் தான் வஷிஸ்டர் என்பதை உணர்ந்து மேலுலகம் செல்வார் அதனை தொடர்ந்து ஈசனின் தாண்டவம் நடக்கும், அசோக் உண்மையான பிராமணனை சந்தித்தானா, வஷிஸ்டராக மேலுலகம் சென்றானா என்பதுதான் கதை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புத்தகம் 2.ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - 6
இந்த நூல் ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1, சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இந்திய வரலாறு.
கடின அட்டை/ ஹார்ட்பௌண்ட்;
304 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: 2007;
பத்தாம் பதிப்பு: 2022.
***
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; சட்டம் இயற்றி; சமூக சிந்தனையில் ஆழ்ந்து; விஞ்ஞானம், கணிதம், இலக்கியம், வானசாஸ்திரம் என்று விரிந்து...ஆழ்ந்து, அகன்ற இந்த சமுத்திரத்தை அதன் கரையோரத்தில் நின்று பார்த்தவருக்கு ஏற்பட்ட பிரமிப்பை, அவர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிற முயற்சி இது.
***
முன்னுரை:
சமுத்திரம்தான். சந்தேகமில்லை.
தொடங்குவதற்கு முன்னால், ஒரு உறுதி, ஒரு சங்கல்பம்செய்து கொள்கிறேன்.
இப்படி ஒரு செயலைத் துவங்குவதற்கு முன்பாக, செய்யப்படுகிற சங்கல்பத்திற்கான, பொருளைப் பார்த்தாலே - ஹண்து மத விளக்கங்கள், சிந்தனைகள், ஒரு சமுத்திரம்தான் என்பது புரியும்.
அத்ய ப்ரம்ஹண: த்விதீய பரார்த்தே
ச்வேத வராஹ கல்பே
வைவஸ்வத மன்வந்தரே
அஷ்டாவிம்சதி தமே
கலியுகே ப்ரதமே பாத
ஜம்பூத்விபே
பாரத வர்ஷே
பரத: கண்டே
மேரோ: தக்ஷிணே பார்ச்வே
சாலிவாஹன சகாப்தே
அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே
ப்ரபாவாதி சஷ்டி ஸம்வத்ஸாராணாம் மத்யே
தாரண நாம ஸம்வத்ஸரே
உத்தராயணே
ஹேமந்த ருதௌ
மகர மாஸே
சுக்ல பக்ஷே
சதுர்த்யாயாம் சுப திதௌ வாஸர:
ப்ருகு வாஸர யுக்தாயாம்
சதபிஷக் நக்ஷத்ர
சுப யோக
சுப கரண
ஏவம் குண விசேஷண விஸிஷ்டாயாம்
அஸ்யாம் சதுர்த்யாயாம் சுப திதௌ...
'இப்போதுள்ள பிரம்ம தேவனின் ஆயுளில், இரண்டாவது பாதி...' என்று தொடங்குகிறது இந்த மந்திரம். இது என்ன? என்ற விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், ஒரு காலக்கணக்கு பற்றிய சில விளக்கங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.
பிரம்ம தேவனின் ஆயுள் என்ன? ஒரு வருடத்திற்கு 360 தினங்களைக் கொண்ட 100 வருடங்கள். அந்த 'தினம்' என்பது பூவுலகக் கணக்கின்படி 432 கோடி வருடங்கள்; அவருடைய 'இரவு'ம் இத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது; ஒரு 'தினம் கழிந்த நிலையில், சகல ஜீவராசிகளும் பூவுலக வாழ்க்கையின் முடிவை எய்துகின்றன; அடுத்த 'தினம்' மீண்டும் பிரம்ம தேவனின் படைப்பு நிகழ்கிறது.
பிரம்ம தேவனின் ஒரு தினம் பதினான்காகப் பிரிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு ஒவ்வொன்றும் ஒரு மன்வந்த்ரம். இந்த மன்வந்த்ரம் ஒவ்வொன்றும் ஒரு மனு என்ற தெய்வத் தந்தையின் கீழ் வருகிறது. ஒவ்வொரு மனுவிற்கும் ஒரு பெயர் உண்டு. அவர் கீழ் வருகிற மன்வந்த்ரம் அவருடைய காலம் ஆகிறது. நாம் இருப்பது வைவஸ்வத மனுவின் காலம். இவர் ஏழாவது மனு.
ஒவ்வொரு மன்வந்த்ரமும் 71 மகா யுகங்களைக் கொண்டவை; நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹா யுகம்; 14 மனுக்களின் கீழ் 14 x 71 = 994 மஹா யுகங்கள் போக, 6 மஹா யுகங்கள் ஒரு மன்வந்த்ரம் முடிந்து மற்றொன்று ஆரம்பமாகிற காலம்.
இப்படி 1000 மஹா யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்பம். இதுவே பிரம்ம தேவனின் ஒரு தினம். நாம் ச்வேதவராஹ கல்பத்தில் இருக்கிறோம்.
ஒரு மஹா யுகத்தில் அடங்கிய நான்கு யுகங்கள் :
17,28,000 வருடங்கள் கொண்ட, க்ருத யுகம்;
12,96,000 வருடங்கள் கொண்ட, த்ரேதா யுகம்;
08,64,000 வருடங்கள் கொண்ட, த்வாபர யுகம்;
மற்றும் 04,32,000 வருடங்கள் கொண்ட, கலியுகம்.
நான்கு யுகங்களும் சேர்ந்த மஹா யுகம், 43,20,000 வருடங்கள் கொண்டது. இந்த மஹா யுகங்கள், மீண்டும் மீண்டும் வருபவை.
அதாவது, சிரியத்திலிருந்து பார்த்தோமானால் -
நான்கு யுகங்கள் அடங்கிய ஒரு மஹா யுகம் 43,20,000 வருடங்கள்.
ஒரு மனுவின் காலம் 71 மஹா யுகங்கள்,
அதாவது 71 x 43,20,000 = 30,67,20,000 வருடங்கள்;
ஆகையால் 14 மனுவின் காலம் 14 க்ஸ் 30,67,20,000 = 429,40,80,000.
இத்துடன் ஒவ்வொரு மனுவின் காலம் முடிவுற்று, அடுத்த மனுவின் ஆரம்பமாகிற காலகட்டத்திற்காக 6 மஹா யுகங்கள்; அதாவது 6 x 43,20,000 = 2,59,20,000 வருடங்கள்.
ஆக, 14 மனுவின் காலம் என்பது, 429,40,80,000 + 2,59,20,000 = 432,00,00,000 வருடங்கள் = பிரம்மாவின் ஒரு தினம்.
இந்தக் கணக்கை மனதில் வைத்துக் கொண்டு ஆரம்பத்தில் கூறப்பட்ட மந்திரத்தின் விளக்கத்தைப் பார்ப்போம்.
இந்தப் பிரம்ம தேவனின், 51-ஆவது ஆண்டின் முதல் தினமாகிய சமயத்தில் -
ச்வேத வராஹ கல்பத்தில் - வைவஸ்வத மனு காலத்தின் - இருபத்தியெட்டாவது முறையாக வருகிற கலியுகத்தின் முதல் பகுதியாகிய நேரத்தில் -
பூலோகத்தின் ஏழு பகுதிகளில், ஜம்பூத்விபம் என்ற பகுதியில் -
பாரத வர்ஷம் என்கிற பிரதேசத்தில் -
பரத கண்டம் என்கிற இடத்தில் -
மேரு மலையின் தெற்குத் திசையில் -
சாலிவாஹன மன்னர் பெயர் கொண்ட காலத்தில் -
இவ்விவரங்கள் இத்தன்மை கொண்டவையாக இருக்க -
பிரபவ என்று தொடங்குகிற 60 வருடங்களில், தாரண என்கிற வருடத்தில்,
சூரியன் வடக்கு முகமாகத் தெரிகிற உத்தராயணத்தில்,
ஹேமந்த ருது என்கிற பருவத்தில்,
மகர (தை) மாதத்தில்,
வளர்பிறையில்,
நான்காவது தினமாகிய இந்த சுப தினமாகிற - வெள்ளிக்கிழமை,
சதய நக்ஷத்ரம் விளங்குகிற,
சுப நக்ஷத்ரம்,
சுப யோகம்,
சுப கரணம்,
- என்கிற இவ்விதமான சிறப்புகளைக் கொண்ட இந்த நான்காவது தினமாகிய சுபதினத்தில்,
ஹிந்து மஹா சமுத்திரம் என்கிற இந்த தொடரை எழுத முனைகிறேன்...
இந்தச் சங்கல்பத்தில் - உறுதியில் எவ்வளவு விவரங்கள் கூறப் படுகின்றன என்பதே, பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம்.
'2005-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 14-ஆம் தேதி இதைத் தொடங்குகிறேன்' என்று சொல்வது, இன்றைய நாகரிக உலகின் நடைமுறை வழக்கப்படியானது. ஏனென்றால் இப்போதைய சமுதாயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தனது சிந்தனை அலைகளை ஓட்டுவதில்லை. அப்படிச் செய்ய முனைகிற சரித்திர ஆராய்ச்சியாளர்கள்கூட, கிறிஸ்துவிற்கு முன்னால் 3000 வருடம்... கிரேக்க நாகரிக காலம்... சீன நாகரிகம்... என்று சுமார் 6000 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்ப்பதுடன் நின்று விடுகிறார்கள்.
இதையொட்டி, அவர்கள் ஹிந்து மதத்தையேகூட, மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐயாயிரம் வருடத்துச் சமாச்சாரம் போலவே பார்க்கிறார்கள். இது ஒரு யூகமே தவிர, தவறு காண முடியாத கணக்கு அல்ல. இதற்கு சில ஆராய்ச்சிகள் பின்னணியாக இருக்கலாம். ஆனால் அந்த ஆராய்ச்சிகள், 'இதற்கும் முன்னால் ஆதாரம் கிடைக்காது' என்ற தீர்மானத்தின் காரணமாக, ஒரு கட்டத்தில் நின்று விடுகிறவை. இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்கள் ஏற்கிற வகையான ஆதாரம் கிட்டவில்லை என்பதாலேயே, ஒரு விஷயம் நடக்கவேயில்லை என்று தீர்மானித்துக் கொள்வது அறிவுடைமை ஆகாது. 'இதற்கு முன் என்ன நடந்தது என்பது தெரியவில்லை' என்று கூறினால், அது நேர்மையுடையதாக இருக்கும்.
தெரியவில்லை. அதுதான் நமது நிலைமை.
'எங்கள் தாய்' என்ற கவிதையில் பாரதியின் "தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் - 'இவள் என்று பிறந்தவள்?' என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று கூறுவது போல, ஹிந்து மதம் என்று பிறந்தது என்று கூறக் கூடியவர் எவருமில்லை.
அதனால், வேதங்கள், இதிஹாசங்கள், புராணங்கள் போன்றவை கூறுகிற கணக்கைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி பார்த்தால், நமது சரித்திரம், பல கோடி நூறாயிரம் ஆண்டுகளுக்குச் சொந்தமானது.
'இதை எப்படி நம்புவது?' என்று கேட்கலாம்.
இதற்குப் பதில் அளிக்கிற வகையில், ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்க முடியும். 'ஹிந்து மத சரித்திரம் சுமார் 5000 ஆண்டுகளுக்குட்பட்டதுதான் என்று மட்டும் எப்படி நம்புவது?'. அதற்கு முந்தைய ஆதாரம் கிடைக்கவில்லை என்பதாலா? எது ஆதாரம்? மேலை நாடுகளின் சரித்திர ஆசிரியர்கள் எதை ஏற்கிறார்களோ, அதுதான் ஆதாரம் என்பதை எப்படி ஒப்புக் கொள்வது?
சரி, அதுதான் போகட்டும். ஆதாரம் இல்லை. அதனால், அதற்கு முன் ஹிந்து மதம் இருந்ததில்லை என்று ஆகிவிடுமா? இப்போது 80 வயதாகிற ஒரு தனி மனிதனை எடுத்துக் கொள்வோம். அவனுக்குத் தன்னுடைய காலம் (1925-2005) தெரியும்; தன்னுடைய தகப்பனார்க் காலம் (1900-1985) கேள்விப்பட்டதாலும், புகைப்படங்களைப் பார்த்ததாலும் தெரியும்; தன்னுடைய தாத்தா காலம் பற்றித் தந்தை சொல்லித் தெரியும். அதற்கு முன்னர்? அதற்கும் முன்பு? ஃபோட்டோ இல்லை; ஓவியம் இல்லை; கடிதம் இல்லை; சுவடி இல்லை... கேள்விப்பட்டதும் இல்லை. ஆதாரமே கிடையாது. அப்படியானால் சுமார் கி.பி.1700-ஆவது ஆண்டுக்கு முன்னால் தன்னுடைய குடும்பத்தில் யாருமே இருந்ததில்லை என்று, அந்த மனிதன் தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதானா? அது பிதற்றலாக அல்லவா இருக்கும்?
தன் குடும்பத்தின் தோற்றம் ஏதோ ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதுதான் என்று தனி மனிதன் பிதற்றலாக நினைத்துக் கொண்டால் - அது அவனுக்கோ, வேறு யாருக்கோ பெரிய நஷ்டமல்ல என்று கூற வாய்ப்புண்டு. ஆனால் ஒரு சமுதாயம் இப்படி நினைத்துக் கொண்டுவிட்டால், அது அந்தச் சமுதாயத்திற்கும், அது சார்ந்த மதத்திற்கும், அது தோன்றி வளர்ந்த தேசத்திற்கும், பெரிய நஷ்டம்.
இந்த நஷ்டத்தை நாம் மனமுவந்து ஏற்றிருக்கிறோம். 'ஏன் என்றால், நாம் அறிவாளிகள்; அறிவுபூர்வமாகத்தான் எதையும் பார்ப்போம், ஏற்போம். ஆகையால், அறிவுபூர்வமாகக் கூறப்படுவதை ஏற்று, ஹிந்து மதத்தின் வயது 5000 வருடங்களுக்கு மேல் இருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு நாம் வந்திருக்கிறோம்' என்று சொல்லலாம்.
ஆனால் அந்தச் சொல்லில் நியாயமோ, தர்க்கவாதமோ இருக்குமா? பார்ப்போம்.
'சுமார் 5000 வருடங்களுக்கு முன் - அதாவது கி.மு.3000-க்கு முன், ஹிந்து மதம் இருந்தது கிடையாது' என்ற முடிவு எப்படி ஏற்பட்டது? சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதால், இந்தச் சிறிய வயது ஹிந்து மதத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
சரி, அந்த ஆராய்ச்சியாளர்கள் அல்லது அறிஞர்கள், எப்படி இந்த வயதை நிர்ணயத்தைச் செய்தார்கள்?
"யூகத்தின் அடிப்படையில் வேதங்களுக்கு - போனால் போகிறது என்று கொசுறாகக் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுத்து - கி.மு.3000 என்ற வயது நிர்ணயம். இதைக்கூட சில கண்டிப்புப் பேர்வழிகள் ஒப்புக் கொள்ளவில்லை; 'அதெல்லாம் ரொம்ப அதிகம்; கி.மு.1500-க்கு முன்னால் வேதமும் கிடையாது ஒன்றும் கிடையாது' என்பது அவர்களுடைய தீர்மானம். இன்னமும் சிலர், பெரிய மனது பண்ணி, ஒரு சலுகை கொடுத்து, 'கி.மு.2000-த்தில் வேதம் வந்திருக்கலாம்' என்றார்கள்; ஆனால் உடனேயே கறார் வந்துவிட்டது; 'கி.மு.2000-த்தில் வேதங்களின் ஒரு பகுதி, பின்னர் பல நூறு வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கப்பட்டு விட்டது' என்பது இவர்களுடைய தீர்ப்பு.
கிட்டத்தட்ட கறிகாய் பேரம் மாதிரிதான். 'இது ரொம்ப அதிகம்... சரி இவ்வளவு வைத்துக் கொள்... அய்யய்யோ, அது ரொம்ப அதிகம்; சரி இந்தா, கொசுறு வைத்துக் கொள்...' என்ற ரீதியில் வேதங்களின் வயது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்பது இந்த அறிஞர்களின் எழுத்துக்களிலிருந்து தெளிவாகவே தெரிகிறது.
இந்த மாதிரி ஒரு வயது நிர்ணயம் செய்யப்பட்டதற்கு என்ன அடிப்படை? 'ஸம்ஸ்க்ருதத்திற்கும், சில ஐரோப்பிய மொழிகளுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகையால் இவை எல்லாமே ஒரே தாய்க்குப் பிறந்தவை. அந்தத் தாய் மொழி எதுவாக இருந்தாலும் சரி, அது கி.மு.3000-க்கு முன்பு இருந்திருக்கு வாய்ப்பில்லை என்பதால், ஸம்ஸ்க்ருதம் உட்பட எல்லா குழந்தை மொழிகளும் கி.மு.3000-க்குப் பின் வந்தவைதாம்' - இது ஓர் அடிப்படைக் காரணம்.
இந்த வாதத்தில் பல யூகங்கள் இருக்கின்றன. கி.மு.3000-க்கு முன் எந்த மொழியும் இருக்கவில்லை - என்று ஏன் யூகம் செய்கிறார்கள்? ஏன் என்றால், அதற்கான சான்றுகள் மேலை நாடுகளில் இல்லை. அப்படியிருக்க, இங்கு மட்டும் ஒரு மொழி இருந்தது என்றும், வேதங்கள் வந்தன என்றும் எப்படி ஒப்புக் கொள்வது?
சரி, அவர்கள் குறிப்பிடுகிற ஐரோப்பிய மொழிகளுக்கும், ஸம்ஸ்க்ருதத்திற்கும் இடையே உள்ள எத்தனை ஒற்றுமைகளை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்? ஒரு சில சொற்கள் - அவ்வளவுதான். ஆயிரக்கணக்கில் அல்ல - நூற்றுக்கணக்கில் அல்ல - டஜன் கணக்கில்கூட அல்ல - சில சொற்களை வைத்துக் கொண்டு, இவற்றுக்கெல்லாம் தாய் ஒருவர்தான் என்று முடிவு கட்டிவிட்டார்கள்.
சரி, அந்த ஒரு சில சொற்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம். ஏன் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து, ஒரு சில சொற்கள் வேறு மொழிகளுக்குப் போய்க் கலந்திருக்கக் கூடாது? ஏன் என்றால் - அது மேலைநாட்டு மொழி அல்ல, அதனால்தான்.
மொழி ரீதியாக மட்டும் இவர்கள், ஹிந்து மதத்திற்கு வயது நிர்ணயம் செய்தார்கள் என்று நான் சொல்லவில்லை - அது ஒரு முக்கியமான டெக்னிக்காக அமைந்தது. அதைத் தவிர அகழ்வாராய்ச்சி. இதில் 'கார்பன் டேட்டிங்' என்று ஒரு முறை வந்தது. அதற்கு முன்வரை செய்ததெல்லாம் தவறு என்று இவர்களே கூறுவது போல - 'இது மிகவும் சரியான வழிமுறை' என்று அறிவித்தார்கள். 'இதுவும் சரியில்லை' என்று எப்போது ஒரு நிபுணர் கூறுவாரோ தெரியாது. அப்படிக் கூறாதவரையில் இதுதான் சட்டம். இதன்படி நமது நாகரிகத்தின் வயது, கி.மு.3000-க்கு மேல் கிடையாது என்று ஆகிவிட்டது.
இத்துடன் சேர்ந்து, 'ஆரிய படையெடுப்பு நடந்தது; ஆரிய நாகரிகம் பரவியது; அதற்கு முன் இருந்ததெல்லாம் மறைந்தது; ஆரியர்கள் வந்த பிறகு அவர்கள் வேதங்களைக் கற்பனை செய்தனர்...' என்பது போன்ற கண்டுபிடிப்புகளையும் நமது நாட்டு அறிஞர்கள் ஏற்றார்கள்.
பின்னர் ஓர் அத்தியாயத்தில் இவற்றையெல்லாம் விவரமாகப் பார்ப்போம். ஹிந்து மத தோற்றத்திற்கு ஒரு வயது நிர்ணயம் செய்து, சான்ஸ்க்ருத மொழியை ஒரு கால வரையறைக்குள் அடக்கி, நமது சரித்திரத்தையே நேற்றைய செய்தியாக்கி, மனித நாகரிகத்திலும், சிந்தனையிலும் நாம் எட்டியிருந்த உயரத்தைத் தவிடு பொடியாக்கி விடுகிற திட்டம் எப்படித் தோன்றி எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்ற விவரத்தைப் பார்த்தால்தான் - மேலே நான் கூறியுள்ள கருத்துக்களை ஏற்பது சிலருக்காவது சாத்தியமாகும். இதைப் பின்னர்ப் பார்ப்போம்.
இப்போது ஒரு விஷயம். சமீபத்தில் சுனாமி இழைத்த பேரழிவை நாம் கண்ணால் பார்த்தோம். அது விளைவித்த கொடுமை, எத்தனை பேரை எவ்வளவு கொடுமையாக பாதித்து விட்டது என்பது நாம் அறிந்த விஷயம். இந்தச் சுனாமி அலைகளால் அந்தமானில் சில தீவுகளே காணாமற் போய்விட்டன; சில தீவுகள் ஒன்றாகச் சேர்ந்துவிட்டன. இத்தனைக்கும் இது சாதா சுனாமி. உண்மையான சுனாமியின் வேகமும், அது எழுப்புகிற அலைகளின் உயரமும் பன்மடங்கானவை என்றும், அது விளைவிக்கக் கூடிய அழிவு, பயங்கரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சாதாச் சுனாமியினால் அழிக்கப்பட்ட ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம். அங்கே ஓர் ஆராய்ச்சி நடக்கிறது; அங்கு இருந்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு வேறு எந்த ஆதாரமும் கிடையாது; அழிவிற்குப் பிறகு என்ன எஞ்சி நிற்கிறதோ அதுதான் ஆதாரம்.
அப்படிப்பட்ட பகுதியில், எல்லாமே அலைகளால் அடித்துக் கொண்டு போய்விட்ட நிலையில், அகழ்வாராய்ச்சியில் கிட்டுவது ஒரு சில விஷயங்கள்தாம். ஒரு பானையின் ஒரு சில துண்டுகள்; குழந்தைகள் விளையாடுகிற பொது ஒரு பாறையில் கிறுக்கிய சில கோடுகள்; சில சிறுவர்கள் பயன்படுத்திய 'கவண்' அல்லது கவண் வில்லின் கட்டைகள் சில. இந்த மாதிரி பொருட்களை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தால், என்ன முடிவு வரும்? 'அந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது; கோடுகள்தாம் அவர்கள் எழுத்து; அவர்களுக்குக் கவண்தான் ஆயுதம்; பானை செய்கிற அளவிற்கு தொழில் முன்னேற்றம் - அதற்கு மேல் கிடையாது...' என்றெல்லாம் முடிவு கட்ட வேண்டியதுதான்.
கண்ணெதிரே பார்க்கிற காலத்தைப் பற்றிய ஆய்வு என்பதால், இப்போது இப்படி ஓர் ஆராய்ச்சி நடந்தால், அது பிதற்றல் என்பது நமக்கு உடனேயே புரிந்து விடும். ஆனால் இதுவே பழங்காலத்தைப் பற்றியது என்றால் - 'சரி. நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால் சரியாகத்தான் இருக்கும்' என்று ஏற்க வேண்டியதுதான்.
'கார்பன் டேட்டிங்காக இருந்தாலும் சரி - ஒரு பழங்கால மரத் துண்டின் வயதைக் கணக்கிடுகிற 'டெண்ட்ரோக்ரோனாலஜி' என்ற வழியாக இருந்தாலும் சரி - எல்லாமே கேள்விகளுக்குரியவைதான். உண்மையான நிபுணர்கள் இவற்றில் தவறு நிகழ வாய்ப்பே கிடையாது என்று கூறத் தயங்குவார்கள். அதனால்தான், மனித இனத்தின் சரித்திரம், பலமுறைகள் பின்னோக்கிச் தள்ளப்பட்டு விடுகிறது. அதனால்தான் சில இனங்களின் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டு வருகிறது.
ஆனால் நாமோ, நமது தலையில் ஆங்கிலேய பிரம்மன் எழுதியது, அழித்து எழுத முடியாத எழுத்து என்று தீர்மானித்து விட்டோம். அப்படித் தீர்மானித்து, நமது சரித்திரம் கி.மு.3000-க்கு முற்பட்டதல்ல என்று முடிவு செய்துவிட்டோம். அதிலிருந்து மாற மாட்டோம்.
ஏனென்றால், நாம் அறிவாளிகள் - அதாவது அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு விட்டவர்கள். அதனால் நம்மை யாராலும் மாற்ற முடியாது. பர்த்ருஹரியின் 'நீதி சதகம்' என்ற நூலில் ஒரு ஸ்லோகம் :
அஞ: ஸூகமாராத்ய:
ஸூகதராமாராத்யதே விசேஷஞ:
ஞானலவ துர்விதக்தம்
ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி:
இதன் பொருள் : 'அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம்; அறிந்தவனை, அதைவிட எளிதில் திருப்தி செய்துவிட முடியும்; மிகக் குறைவாகவே அறிந்து, எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொள்பவனை, ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது'.
நான் அறியாதவன் - அதனால் விவரமறிந்த சிலருடைய எழுத்துக்களைப் பார்த்து, நான் அடைந்த திருப்தியை - வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே, இந்தத் தொடரின் நோக்கம்.
விவரமறிந்த சிலருடைய எழுத்துக்களைப் பார்த்து நான் அடைந்த திருப்தியை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தத் தொடரின் நோக்கம் - என்று நான் குறிப்பிட்டிருந்தேன். 'ஏன்? எப்படி?' என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது தான் அறிவுடையோரின் அணுகுமுறை என்றால் - ஆராய்ச்சி ரீதியான விஷயங்களைக்கூட நம்மால் ஏற்க முடியாமல் போகும் என்ற என் கருத்தையும் சொல்லியிருந்தேன்.
மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. ஒரு யக்ஷனின் வசமிருந்த குளத்திலிருந்து நீர் எடுக்க முயற்சித்த பாண்டவ சகோதரர்களில் நால்வரை அந்த யக்ஷன் செய்துவிட்டு நிலையில், தருமபுத்திரர் அங்கு வருகிறார். தனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுமாறு யக்ஷன் கூற, 'யஷப்ரச்னம்' என்ற யக்ஷனின் கேள்விகள் - தர்மபுத்திரரின் பதில்கள் அடங்கிய பகுதி அங்கே தொடங்குகிறது.
யக்ஷன் கேட்ட கேள்விகளில் ஒன்று : 'பின்பற்ற வேண்டிய வழி எது?'
இதற்கு தர்மபுத்திரர் அளித்த பதில் : "வேதங்கள், ஸ்மிருதிகளைக் கற்றறிந்து, பின்பற்ற வேண்டிய வழி எது என்பதை அறிந்து கொள்ளலாம் என்றால், அது அவ்வளவு எளிதாக முடிகிற முயற்சி அல்ல. ஆழ்ந்து கவனிக்காமல், மேலோட்டமாக இவற்றை அறிபவனுக்கு, அவை முரண்பாடு நிறைந்தவையாகவே தோன்றும். ரிஷிகளின் கருத்துக்களின்படி நடக்கலாம் என்றால், அவர்கள் பற்பல வகைகளில் பிரச்னைகளை அணுகுகிறார்கள். ஆக, தர்மத்தை முழுமையாக அறிவது என்பது சிக்கலான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆகையால், நமது பெரியோர்கள் சென்ற வழியே நாம் பின்பற்ற வேண்டிய வழி."
வேதங்களையும், ஸ்ம்ருதிகளையும், ரிஷிகளின் வாக்கியங்களையும் முழுமையாகப் புரிந்து கொள்வது தர்மபுத்திரருக்கே கடினமான விஷயமாக இருந்திருக்கிறது. அவரோ, மஹாபாரதத்தில் வருகிற எண்ணற்ற மன்னர் வகுப்பினரில், பீஷ்மருக்கு அடுத்தாற்போல தர்மத்தை அறிந்தவர். 'நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்' என்று மகாகவி பாரதியார் வர்ணிக்கிற மாதிரி - நூல்களைப் புரிந்து கொண்டு அவற்றால் 'கூடாது' என்று விலக்கப்பட்ட செயலைச் செய்வதற்கு அஞ்சுகிற விரதமுடையவர். அவருக்கே கடினமான விஷயம், என்னைப் போன்ற சர்வ சாதாரணமான மனிதனுக்கு, சமுத்திரத்தை நீந்திக் கடந்து விடுகிற முயற்சிதான்!
அதனால்தான், பெரியவர்கள் பலர், பண்டிதர்கள் பலர், அருளுடையவர்கள் பலர் கூறியிருக்கிற விளக்கங்களை ஏற்று, அதன் அடிப்படையில் இந்த தொடரை எழுத முனைந்துள்ளேன். இந்தத் தொடரில், சொல்லப்படுகிற விவரங்களுக்கு ஆதாரமான நூல் எது என்பதை ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே போனால், இது ஏதோ பாட புஸ்தகம் மாதிரி ஆகிவிடும். ஆகையால், இதற்கு ஆதாரமான நூல்களின் பட்டியலைத் தொடரின் முடிவில் கொடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
விவரங்கள் - என்று நான் சொல்கிறபோது, 'முழு விவரங்கள்' என்று எடுத்துக் கொண்டு, பயந்துவிட வேண்டாம். ஒரு நல்ல அறிமுகம் கிட்டுகிற அளவிற்கு விவரங்களை நாம் பார்த்தாலே போதும்; ஏனென்றால் இது பண்டிதர்களுக்காக, பண்டிதனால் எழுதப்படுகிற தொடர் அல்ல; ஓரளவாவது தெரிந்து கொள்ள முயல்பவன் செய்கிற முயற்சி இது. சொல்கிறவனின் குறைகளை மீறி, சொல்லப்படுகிற விஷயத்தின் மேன்மை வெளிப்படும் என்று நம்புகிறேன்.
ஹிந்து மதம் எத்தகையது? சொல்ல முடியாது. இயற்கைக்கு உவமையை யார் சொல்வது? அதுபோலத்தான் இதுவும். அத்தனை வடிவங்கள்; அத்தனை புதுமைகள்; அத்தனை வனப்புகள்; அத்தனை பசுமைகள்; அத்தனை வண்ணத்துக் கலவைகள்; அத்தனை சுடரொளி வீசும் சிகரங்கள்; அத்தனை ஒளித் திரள்கள்! அதனால்தான் மகாகவி பாரதி வான் சுடர் பற்றி, 'கணம் தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி, காளி பராசக்தி, அவள் களிக்கும் கோலம்' என்று வர்ணித்தார்.
விக்ரஹ ஆராதனைக்கு ஹிந்து மதத்தில் நிறையவே இடமுண்டு; ஆனால் அது விக்ரஹ வழிபாடே இறுதிப் பாதை என்று கூறவில்லை.
விதியின் வலிமையை ஹிந்து மதம் வற்புறுத்துகிறது; ஆனால் விதி வழியே சென்று முடி என்று அது கூறவில்லை.
வர்ணங்கள் என்ற வகுப்புகளை வரையறுப்பது ஹிந்து மதம்; ஆனால் மனிதர் அனைவரும் சமம் என்று அடித்துச் சொல்வதும் அதே மதம்தான்.
பல தெய்வங்களைக் காட்டுவதும் ஹிந்து மதம்தான்; இறுதி தத்துவம் ஒன்றுதான் என்று அறிவுறுத்துவதும் அதே மதம்தான்.
யாகங்கள் பலவற்றிற்கான வழிமுறைகளை வகுத்து, அவற்றின் உயர்வைக் கூறுவதும் ஹிந்து மதம்தான்; யாகங்கள் மூலம் இறைவனை நீ உணர்ந்துவிட முடியாது என்று நினைவுபடுத்துவதும் அந்த மதம்தான்...
இப்படி நேர் எதிரான விஷயங்களைச் சொல்கிற ஒரு மதத்தை எப்படிப் புரிந்து கொள்வது? கேட்பவனின் தன்மை, அவனுடைய மனப் பக்குவம்; அவன் நிற்கிற சூழ்நிலை; அவன் கடக்க வேண்டிய கட்டங்கள்; அவன் வாழ்கின்ற காலம்... போன்ற பலவற்றைப் பொறுத்து, ஹிந்து மதம் அவனுக்குரியதைக் கூறுகிறது. அதனால்தான், இத்தனை வடிவங்கள்.
வேதங்களிலுருந்து தொடங்கி, பல நூல்கள் கூறுவதையும் ஓரளவாவது தெரிந்து கொண்டால், ஹிந்து மதத்தில் காணப்படுகிற முரண்பாடுகள் என்று நாம் நினைப்பவை - உண்மையிலேயே, மனிதனை ஒருமைப்படுத்துகிற முயற்சியின் பல தோற்றங்கள் தாம் என்பது புரியும். பல்வேறு மனநிலைகளைக் கொண்ட மனிதர்களும், இறுதி தத்துவத்தின் இயல்பை உணர்வதற்காக, ஹிந்து மதம் அமைத்துத் தந்துள்ள பாதைகள் பலவாயினும் - அவை செல்லும் திசையும், அடைய முற்படுகிற இலக்கும் ஒன்றானவையே.
இப்படிப்பட்ட மதத்தின் வீச்சைப் புரிந்து கொள்ள, அதன் தத்துவங்களையும், அந்தத் தத்துவங்களை ஏற்ற சிந்தனையாளர்களின் சாதனைகளையும் நாம் ஓரளவாவது பார்க்க வேண்டும். ஆனால் எதைப் பார்ப்பது, எதை விடுவது?
இதற்கு என்ன ஆரம்பம் - என்று எவராலும் கூற இயலாத, நான்கு வேதங்கள்; ஓர் அற்புத தத்துவ விசாரணையை நடத்திய உபநிஷதங்கள்; வேதங்களுடன் தொக்கி நிற்கிற ஆறு வேத அங்கங்கள்; வேதங்களை விளக்குகிற மீமாம்ஸை என்கிற நூல்கள்; தர்க்க சாத்திரமாக விளங்குகிற 'நியாயம்'; மன்னர் வரிசை, பக்தர்கள் வரலாறு, சிருஷ்டியின் விவரம், பூகோளம் என்று பல விஷயங்களை உள்ளடக்கிய புராணங்கள்; இது இவ்வாறு நடந்தது என்கிற பொருள் கொண்டு, தர்மத்தின் சூட்சுமத்தையும் விளக்கி, நடைமுறை வாழ்க்கைக்குரிய தர்மங்களையும் விவரித்துச் சொல்கிற இதிஹாசங்கள்; இது யுத்த சாஸ்திரம் - இது யோக நூல்- இது ஸந்யாஸ தர்மம் - என்றெல்லாம் அவரவர் பார்வைக்கேற்ப காட்சி தருகிற பகவத் கீதை; அர்ஜுனனுக்குப் பகவத் கீதையை உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணர்; உத்தவருக்கு அருளிய ஞான உரையாகிய உத்தவ கீதை; அதை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த புராணமாகிய ஸ்ரீமத் பாகவதம்; அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிற வியாசரின் ப்ரம்ம ஸூத்திரங்கள்; ராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசத்தைக் கூறுகிற யோகவாஸிஷ்டம்;
இன்று உலகம் முழுதும் அறியத் துடிக்கிற யோக வழிமுறைகளை அறிமுகம் செய்து, அதன் ஆழத்தை விளக்குகின்ற பதஞ்சலியின் யோக ஸூத்ரங்கள்; தேவர்கள், கந்தர்வர்கள், அஸூரர்கள், ராக்ஷஸர்கள் என்ற பிரிவுகளின் விளக்கங்கள்; பலத்த கண்டனத்திற்குள்ளாகியுள்ள மனு ஸ்ம்ருதியும், மற்ற பல ஸ்ம்ருதிகளும் வகுத்துள்ள வழிமுறைகள்; ஸ்வர்க்கம், நரகம், மோக்ஷம் என்பன பற்றிய விரிவுரைகள்; ப்ரம்மச்சர்யம், இல்லறம், வனவாஸம், சன்யாஸம் என்கிற நான்கு நிலைகள்; நன்கு வர்ணங்கள் தோன்றி, பின்னர் வந்த ஜாதி பிரிவுகள்; சங்கரர், ராமானுஜர், மத்வாச்சார்யார் ஆகியோர் கண்ட மூன்று வேதாந்த வழிமுறைகள்; பல தெய்வங்கள், உருவ வழிபாடு ஆகியவற்றின் உள்ளர்த்தம்; யாகங்கள், பூஜைகள், பண்டிகைகள், உற்சவங்கள்; தாந்த்ரிகமும், விபரீதமான வழிமுறைகளைக் கூறுகிற வாமாசாரம் என்கிற சாத்திரமும்; நாயன்மார்கள், ஆழ்வார்கள், கபீர்தாஸர், துளசிதாஸர் போன்ற பக்தர்கள் காட்டிய உண்மைகள்; நாலாயிர திவ்ய ப்ரபந்தமும், சைவ சித்தாந்தமும் வகுத்துக் கொடுக்கிற பாதைகள்; ராஜ நீதிகளையும், மனித தர்மத்தையும் உணர்த்துகிற விதுர நீதி; தாட்சண்யமற்ற அரசு முறையைக் கூறுகிற கணிக நீதி; ஆட்சியை நடத்திச் செல்ல தேவையான அமைப்புகளையும் விவரித்து, சட்டத்தையும் கூறுகிற அர்த்தசாஸ்திரம்; மன்னர் பர்த்ருஹரியின் நீதி மற்றும் வைராக்கிய நூல்கள்; பஞ்சதந்திர கதைகள்; சட்டம் இயற்றிய நூல்கள்; ஹிந்து மதத்திலிருந்து பிரிந்து தோன்றிய புத்த, ஜைன, சீக்கிய மதங்கள் போதிக்கும் தத்துவங்கள்... என்று ஹிந்து மத நூல்களிலிருந்தும் அதைச் சார்ந்தவர்களின் சிந்தனைகளிலிருந்தும் ஆன்மீகம் முதல் அரசியல் வரை பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுடன், விஞ்ஞானத்திலும், கணிதத்திலும், மருத்துவத்திலும் கூட இவர்களுடைய பெரும் பணி பற்றிய விளக்கங்களும் இருக்கின்றன.
இவற்றில் எதைச் சொல்வது, எதை விடுவது? எதை மேலெழுந்த வாரியாகப் பார்ப்பது, எதைச் சற்று விவரமாகவே கவனிப்பது? எதைச் சொல்ல என்னால் இயலும், எதை நெருங்கவும் என்னால் இயலாது?
கடவுள் விட்ட வழி. ஆரம்பிக்கிறேன்.
- சோ.
***
பொருளடக்கம்:
முன்னுரை
அத்தியாயம்:-
01.பெயர் வந்த விவரம்;
02.ஆதாரமாக எதைச் சொல்வது? ;
03.சப்தத்தின் சக்தி;
04.மரம், பூ, காய், பழம்!;
05.உலக நன்மைக்காக...!;
06.யாகங்கள்;
07.யாகங்களில் உயிர் பலி கிடையாது!;
08.வேதம் கூறும் நன்மொழிகள்;
09.யாகங்கள் போன்ற சடங்குகள் போதுமா?;
10.ஒரு விவாதம்!;
11.ஆறு தத்துவங்கள்;
12.அவனிடமிருந்தே அனைத்தும் தோன்றின;
13.எத்தனை தெய்வங்கள்!;
14.வேதம் கூறும் தெய்வங்களில் சில...;
15.உருவங்கள், வாஹனங்கள் சில விளக்கங்கள்;
16.வேத காலத்தில் அரசர்கள்;
17.அன்றைய பாராளுமன்றம்;
18.குருவிற்கு நெருக்கமாக இருந்து...;
19.உபநிஷத்துக்களின் அணுகுமுறை!;
20.உண்மையைத் தேடி!;
21.நான் யார்?;
22.உயர்ந்த ஸத்யம் எது? ;
23.தத்துவங்கள் மூன்றானாலும்;
24.நூறு ஆண்டு காலம் வாழ்வாயாக!;
25.தேவர்களின் திகைப்பு!;
26.தந்தைக்கு வந்த கோபம்!;
27.மூன்று வரங்கள்!;
28.எமதர்மன் செய்த உபதேசம்!;
29.மரணத்திற்குப் பின்...;
30.ஆறு கேள்விகள்;
31.கடலில் கலக்கும் நதிகள் போல...;
32.பலவீனமான படகுகள்!;
33.ஸத்யமேவ ஜயதே!;
34.விழிப்பு: கனவு; உறக்கம்; துரீயம்!;
35.குழப்பத்திலிருந்து விடுதலை பெற...!;
36.வருணனின் உபதேசம்!;
37.ஆபத்து தர்மம்!;
38.அரசன் செய்த உபதேசம்!;
39.நாரதர் உபதேசம் பெற்றார்!;
40.இந்திரன் நாடிய உண்மை!;
41.ஒரு பெண்ணின் பாண்டித்யம்!;
42.தேவ, அசுர, மனிதர்கள் பெற்ற அறிவுரை!;
43.அது இங்கேதான் இருக்கிறது!;
44.ப்ரம்ம ஸூத்ரம்!.
==================================
Comments
Post a Comment