=============================================================================
புத்தகம் 1.உலகம் யாவையும்
இந்த நூல் உலகம் யாவையும், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
புதுவைக் கம்பன் விழாவில் 14.05.2004 அன்று வெளியிடப்பெற்றது.
இலக்கிய திறனாய்வு நூல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
248 பக்கங்கள்;
முதற் பதிப்பு: மே, 2004;
இரண்டாம் பதிப்பு: ஜூன், 2007;
மொழி: தமிழ்;
வானதி பதிப்பகம்.
என்னுரை:
உள்ளம் உவக்க தமிழ்த்தாயின் திருவடிகளில்
மீண்டும் ஒரு சிறு இலக்கிய மலரினை இட்டு வணங்கும் வாய்ப்பினை,
இறைவன் கொடுத்திருக்கிறான்.
பெரும்புலவர் பலர் வாசமலர் பல இட்டு வணங்கிய திருவடிகளில்,
காகிதப் பூ இட்டுக் களிப்புற முயல்கிறது என் மனம்.
கம்ப கடலினுள் மூழ்கி முத்துக்கள் எடுத்த அறிஞர் வரிசையில்,
வெறும் சிப்பியெடுத்த இச்சிறியவனும் சேர நினைக்கிறான்.
காலம் கடந்து நிலைக்கும் கம்ப காவியக் கலைக்கோயிலில்,
தம் அறிவாற்றலால், மண்டபங்களும் மணிமாடங்களும்
சிற்பங்களும் சித்திரங்களும் செய்து, புகழ்கொண்டோர் பட்டியலில்,
வெறுமனே படிக்கல்லில் பாதம்பதித்த இப்பாமரனுக்கும்,
பெயர்பதிக்கும் பெருவிருப்பு.
காசில் கொற்றத்து இராமன் கதையை,
ஆசைபற்றி அறைவதாய்க் கவிச்சக்கரவர்த்தி கம்பனே பேசியிருக்க,
அவ்வோசை பெற்றுயர் பாற்கடலை, இப்பூசையும் புகுந்து நக்க முயல்கிறது.
இவன் 'பல்லாருள் நாணல் பரிந்து, நல்லோர் வருந்தியும் கேட்பர்' எனுந் துணிவில்,
என் இரண்டாம் இலக்கியப்படையலை கற்றோர் சந்நிதானத்தில்,
அறியாமை உணர்ந்தும்,
ஆசையினால் நாணத்தோடு படைக்கிறேன்.
கடல் தூர்க்க அணில் செய்த சிறுமுயற்சியையும் அங்கீகரித்த இராமனாய்,
கற்றோர் கனிவோடு என் முதுகு தடவுவார்களாக.
*** *** ***
இந்நூலுள்,
என் அறிவெல்லைக்குள் அகப்பட்ட சில சிந்தனைகள் பதிவாகின்றன.
கரைநின்று கம்ப கடலுள் கால் நனைத்தபோது,
என் சிற்றறிவுள் ஏற்பட்ட சில சிந்தனைகளைக் கட்டுரைகளாக்கியிருக்கின்றேன்.
கருத்துக்கள் அனைத்தும் எனக்கே சொந்தமானவை என,
துணிந்து சொல்லமுடியவில்லை.
நம் தமிழ் மரபில்,
இன்றைக்கும், நாளைக்கும் சேர்த்து,
நேற்றே சிந்தித்து வைத்துவிட்ட அறிஞர் தொகை அதிகம்.
அவர்தம் தேடல்களுக்குள்,
என் தேடல் எங்கோ பதிவாகியிருக்கும் என்பது உறுதி.
அங்ஙனமாயின்,
இவ் வீணான முயற்சி எதற்கு ? - கேள்வி பிறக்கும்.
பதில் இருக்கிறது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாய்,
தமிழ்த்தாயின் நிழலில் வாழ்ந்துவரும் என்னாலேயே,
தமிழ்த்தாய் உலாவரும் வீதிகளில் ஒன்றைத்தானும் தாண்டமுடியவில்லை.
அப்படியிருக்க,
பொழுதுபோக்காய்த் தமிழன்னையைப் பூஜிக்க நினைக்கும்,
ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,
அவள் திருவுலாவரும் தெருக்களை அறியத்தானும் முடியுமா?
அவர்தம்மை, அவள் அற்புத உலாக் காண அழைத்து வருவார் யார்?
இக்கேள்வியே,
எனக்குத் தெரிந்தவற்றை உரைத்தல் தவறில்லை எனும் தெளிவைத் தந்தது.
அத்தெளிவு தந்த துணிவே,
இந்நூலாக்கத்தின் காரணம்.
ஒன்றைத் தெளிவுபட உரைக்க விரும்புகிறேன்.
கம்ப கடலை, முழுவதும் தெரிந்து உரைக்கவில்லை.
கம்ப கடலுள், தெரிந்தவை முழுவதும் உரைக்கிறேன்.
இது வாலால் கடலளக்க முயலும் நரியின் முயற்சி.
கற்றோர் கனிந்து பொறுப்பார்களாக.
மற்றோர் துணிந்து நிறுப்பார்களாக.
*** *** ***
கடலாய்ப் பெருகிநிற்கும் கல்விச் சொத்தினைப் பெற்றிருந்தும்,
மாற்றார் அறிவுநோக்கி மண்டியிட்டு நிற்கிறது நம் இனம்.
காலத்தின் கோலமிது.
அறிவுச் சோம்பல் காரணமாக,
ஆழத் தமிழ்க்கடலுள் கால் வைக்காமல்,
நேற்றுப்பிறந்த நிழல் இலக்கியங்கள் நோக்கிப் புதிய தலைமுறையை,
ஆற்றுப்படுத்தும் அறிஞர்(!) கூட்டம் அதிகரித்து விட்டது.
மூழ்கி முத்தெடுக்கத் தெரியாத தம் தகுதிக் குறைவை மறைக்க,
ஆழக் கடலுள் அனைத்தும் உவர்ப்பே என்றுரைத்து,
இளையோர்க்கு,
பிழையாய் வழிகாட்டும் பேர் அறிஞர் பலர் தோன்றிவிட்டதால்,
தமிழன்னை தரம் சிதைந்து தனித்து நிற்கின்றாள்.
அவளைக் காக்கும் வழியென்ன?
கயவர்தம் புன்மை, போக்கும் வழியென்ன?
கற்றோர் கலங்கி நிற்கின்றனர்.
கம்பன் சுவையைக் காட்டிவிட்டால்,
மாற்றார் திசைநோக்காது மாண்புறும் நம் இளைய தலைமுறை,
கம்ப காவியம் வெறும் கதையே என நினைக்கும் இளையோர்க்கு,
அது கதையல்ல வாழ்வென உணர்த்துவது நம் கடமையென்றோ !
இந்நூல் மூலம்,
அக்கடமையைச் செய்ய என்னால் முடிந்தளவு முயன்றிருக்கிறேன்.
*** *** ***
கம்ப காவியம்பற்றி வெளிவந்த நூல்கள் இருவகைய.
ஆய்வாய் அமைந்தவை சில.
இரசனையாய் அமைந்தவை சில.
ஆய்வு நூல்கள் பெரும்பாலும் கம்பனைக் கணிக்க முயன்றன.
இரசனை நூல்கள், கம்பன் கற்பனைகள் விண்தொட்டு இருப்பதை விளம்பின.
இவ்விருவகை நூல்களும்,
போர் நிறைந்த இவ்வுலகில் புகுந்து நின்று,
அன்றாடம் அல்லலுறும் மனிதரை மறந்ததால்,
மண்தொட்டு நின்ற மனிதர்களின் மனந்தொட்டு உயரும் வாய்ப்பிழந்தன.
கற்பனை ஆய்வதும், கவிதையை ஆய்வதும்,
இன்றைய மானுட வாழ்வினை ஏதேனும் வகையில் உயர்த்துதல் அவசியம்.
இச்செய்தியை உணர்ந்து உரைத்த,
பேரறிஞர் சிலரைத் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.
என் குருநாதர் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்,
என்னைப் பிள்ளையாய்ப் போற்றிய பெருந்தகை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்,
மாக்சீயத் தத்துவத்தை இம்மண்ணுக்கு உரமாக்கிய
பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் என,
இவ்வறிஞர் வரிசை நீளும்,
என் முன்னைத் தவப்பயனால் அவர்தம்மைக் காணவும், கற்கவும் பேறுபெற்றேன்.
அவர் கைபிடித்து இம்மழலை தவழ முயலும் முயற்சியே இந்நூல்.
*** *** ***
தத்துவக் கண்திறந்து என்னை உய்வித்த,
வித்தகர், பேராசான் நமசிவாயதேசிகர்
என்னுள் அறிவுக்கதவுகள் பலதிறப்பித்து என்னை ஆட்கொண்டார்.
அவர்திறந்த கதவின் வழியே கம்பனைக் காணும் முயற்சியே,
"உலகம் யாவையும்" எனும் என் முதற்கட்டுரை'
*** *** ***
நல்லன், தீயன் என வரையறை செய்ய முடியாது.
கம்பனால் படைக்கப்பட்ட பாத்திரம் கைகேயி.
அவளின் தூய இயல்பினை இனங்காட்டி,
என் 'அழியா அழகு' எனும் முதல் நூலில்,
'சிறந்த தீயாள்' எனும் தலைப்பில் கட்டுரை வரைந்தேன்.
இந்நூலில் அவளின் தீய இயல்புகளை இனங்காட்டி,
அதே தலைப்பில் வேறொரு கட்டுரை வரைந்துள்ளேன்.
தெய்வக் கற்பினள் எனக் கம்பனால் பேசப்பட்ட கைகேயியை,
தீயள் என உரைத்தல் தகுமா? கேள்வி எழும்.
கைகேயியைத் தூயளாயும், தீயளாயும் காண கம்பனே வழிசெய்தான்.
எனவே, இது கம்பனை மீறிய முயற்சியன்றாம்.
ஒரு பாத்திரத்துள் புகுந்து தீ இயல்பு தேடலிற் பயன் யாது ?
மீண்டும் கேள்வி பிறக்கும்.
கட்டுரையுள் பதில் உரைத்திருக்கிறேன்.
கண்டு மகிழ்க.
*** *** ***
ஒருமுறை யாழ்ப்பாணக் கம்பன் விழாவில்,
'அகலிகை', பட்டிமண்டபப் பொருளானாள்.
அப்பட்டிமண்டபம்,
அகலிகை நெறி தவறியவளா ? தவறாதவளா ? எனும் ஐயத்தை எழுப்பிற்று.
இரண்டுக்குமே கம்பன் அடிகளைப் பேச்சாளர் சான்றாக்கினர்.
மாறுபட்ட கம்பனின் கருத்துக்களால் சபை மயங்கிற்று.
நானும் மயங்கினேன்.
அகலிகைபற்றி விழுந்த ஐய முடிச்சினை,
கட்டவிழ்க்க முடியாது கலங்கிய எமக்கு,
முட்டவிழ்த்து முடிவு காட்டினார் வித்தகர்.
அம்முடிவினை,
'நெஞ்சினால் பிழைப்பிலாள்' எனும் கட்டுரையாக்கியிருக்கிறேன்.
*** *** ***
வாலிவதையைப் போலவே,
சீதை தீக்குளிப்பும்,
இராமனின் உயர்வினை ஐயுற வைக்கிறது.
காசில் கொற்றத்து இராமன் எனப் பேசிய கம்பன்,
இராமனின் கொற்றத்தினைக் குற்றமாய் மயக்கும் இடங்கள் இவை.
இராமன் பற்றிய கம்பனின் முன்னைக் கருத்தினை உள்வாங்காது,
காட்சியை மட்டும் கண்டு கருத்துரைப்போர்,
இச்சம்பவங்கள் கொண்டு இராமனை இழித்துரைக்கின்றனர்.
தம் தாழ்நிலைக்கு இராமனையும் அழைப்பதில் அவர்தமக்குத் தனிவிருப்பு.
இளையோர் உண்மையுணர காட்சிப்பிரமானம் தவிர்த்து,
அனுமானப் பிரமாணம் கொண்டு,
இவ்விரு சம்பவங்களும் ஆராயப்படவேண்டியது அவசியம்.
என் முதல்நூலில் வாலிவதையை ஆராய்ந்தேன்.
இந்நூலில் சீதைத் தீக்குளிப்பு ஆராயப்படுகிறது.
'நெருப்பைச்சுட்ட நெருப்பு' எனுந் தலைப்பிலான கட்டுரை,
இக்கருத்தேற்று நிற்கிறது.
*** *** ***
இராவணனின் மனைவியாய் முக்கியத்துவம் பெறினும்,
நான்கே இடங்களில் தோன்றி மறையும் சிறுபாத்திரமாய் அமைபவள் மண்டோதரி.
தோன்றும் இடங்கள் சிலவாயினும்,
அப்பாத்திரத்துள், கம்பன் கைவண்ணம் பலப்பலவாய் விரிகின்றது.
கம்பன் தரும் குறிப்புக்கள் கொண்டு, மண்டோதரியின் மானுடத்தன்மையை ஆராயும் முயற்சியே,
'மயன் மகள்' என்னும் கட்டுரை.
*** *** ***
கம்ப சூத்திரம்,
சிறு சொற்களுள்பெரும் பொருளை உள்ளடக்கி ஆச்சரியம் தருவது.
எல்லையொன்றின்மை எனும் பொருளதனை
கம்பன் குறிகளால் காட்டும் முயற்சி கருதி,
பாரதி ஆச்சரியப்படுவான்.
அவ்வாச்சரியத்தை என் குருநாதர் பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்,
கம்பன் கவியொன்றின் இரு சொற்களில் காட்டி மகிழ்வித்தார்.
அவர் தந்த கருத்தினை இசைமேதை மதுரை டி.என்.சேஷகோபாலன்,
ஒருமுறை உரையாடலின்போது உயர்வித்தார்.
அவர்தம் கருத்துக்களை உள்வாங்கி,
என் கருத்துக்களையும் இணைத்து கட்டுரையாக்கினேன்.
அங்ஙனம், கம்ப
சூத்திரமாய் ஒரு பாடலுள் அமைந்த இரு சொர்களுள்,
கம்பன் அமைத்த பெரும் பொருளினை,
வெளிக்கொணர முயலும் முயற்சியாய் அமைந்ததே,
'முன்பு பின்பு' எனும் கட்டுரையாம்.
*** *** ***
யாழ்ப்பாணம் கணேசயரின் தலை மாணாக்கர்,
இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் அவர்களிடம்,
திருக்குறள் முழுவதனையும் பாடம் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.
குறலின் அரையடிக்கு அரைநாள் உரைசெய்து ஆச்சரியப்படுத்தினார்.
மூப்பெய்திய அப்பெரியார், தமிழில் என்னைப் பூப்பெய்த வைத்தார்.
வள்ளுவத்தின் விரிவன்றி, அறத்தின் விரிவும் அவரால் எனக்குணர்த்தப்பட்டது.
சொல், பொருள் கடந்து குரளையுணர்ந்தேன்.
அறியமுடியா அறத்தின் விரிவு ஆசானால் எனக்குணர்த்தப்பட்டது.
வள்ளுவத்தினூடு நான் கண்ட அறவிரிவினை,
கம்பனும் கையாண்டிருந்ததை பின் கண்டேன், களிகொண்டேன்.
அக் களிப்பே 'ஈறில் நல்லறம்' எனும் கட்டுரையாம்.
*** *** ***
'முத்தமிழும் கற்றால்தான் தமிழின் முழுமையறியலாம்.'
இது தமிழ்ச்சுவைகாட்டி, இளமையில் என்னை நெறிப்படுத்திய ஆசான்,
வித்வான் க.ந.வேலன் அவர்களது அறிவுரை.
அவர் ஆலோசனைப்படி முத்தமிழும் கற்க முயன்றேன்.
என் முயற்சி ஓரளவே கைகூடிற்று.
முத்தமிழ்த்துறை முறைபோகிய உத்தமர்க்கு,
கம்பன் உரைத்த அவையடக்கம்,
என் ஆசான் கூற்றை நிஜப்படுத்திற்று.
முத்தமிழ் பற்றிய என் சிறு அறிவோடு உட்புக,
கம்பனின் முத்தமிழ்த்துறை வித்தகம் விளங்கிற்று.
முத்தமிழுக்குமான வரையறையை,
முடிந்தவரை கம்பனுள் தேடிப்பதிவு செய்ததே,
''முத்தமிழ்க் கம்பன்' எனும் கட்டுரை.
இக்கட்டுரையில் நான் காட்டியிருக்கும் பல நயங்கள்,
வை.மு.கோபாலாகிருஷ்ணமாச்சாரியார் உரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
இயல் இசைக்கும், பருந்து நிழலுக்குமான பொருத்தப்பாடுகள்,
என்னால் உரைக்கப்பட்டவை.
*** *** ***
இயற்கை அழியாத் தன்மை கொண்டது.
இயற்கையோடு பொருந்தியதால் தமிழ்த்தாயும் அழியாத் தன்மை கொண்டனள்.
இவ்விரண்டோடும் பொருந்தியதால் கம்ப காவியமும் நிலைத்த பேறு கொண்டது.
இயற்கையோடு தமிழ் முழுக்க முழுக்கப் பொருந்துநிற்குமாற்றை,
தன் இலக்கணப் புலமையால் இலக்கண வித்தகர் பலதரம் எடுத்துக்காட்டினார்.
அவர் கருத்தேற்று என் சிற்றறிவு கொண்டும் சில சிந்தித்தேன்.
தனித்து மொழிவடிவ அடிப்படையில்கூட,
தமிழ், இயற்கையோடு பொருந்திநிற்கிறது.
இயற்கையோடு பொருந்திய தமிழோடு கம்ப காவியமும் பொருந்திநிற்கிறது.
அத்தொடர்பினை எடுத்துக்காட்டுவதே,
'இயற்கை - தமிழ் - கம்பன்' எனும் இக்கட்டுரை.
இக்கட்டுரையில் என் ஊகங்கள் பலவற்றையும் எடுத்துரைத்துள்ளேன்.
அக்கருத்துக்கள் என்னால் முழுமையாய் நிரூபிக்கப்பட்டன அல்ல.
அந்த அளவுக்கு என் இலக்கண அறிவு பூரணப்படவில்லை.
இலக்கண அறிவில் முழுமை கொண்ட இளைஞர்கள்,
என் கருத்துக்களை எடுகோள்களாய்க் கொண்டு ஆய்வியற்றி,
தமிழின் தரமுயர்த்தலாம்.
இலக்கணத் தத்துவ தொடர்புபற்றி ஆழ ஆராய்ந்தால்,
உலகம் வியக்கும் பல செய்திகள் வெளிவரும் என்பது,
என் திண்ணமான எண்ணம்.
*** *** ***
தமிழ்மேல் தான்கொண்ட பெருங்காதலால்,
கடல்கடந்து வாழ்ந்த இச்சிறியேனையும்,
கண்ணின் கருமணியாய்க் கருதிக் காத்த,
பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்,
என்மேற் கொண்ட அன்பு அளப்பரியது.
தன் பிள்ளையயாய் நினைந்து, என்னைப் பேணிய பெரியவர்.
என் ஆற்றலில், என்னைவிட அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தவர்.
அண்மையில் அவர் தெய்வமானார்.
'அழியா அழகு' என்னும் என் முன்னை நூலுக்கு முன்னுரை தந்து,
என்னை உயர்வித்த எம்பிரான் அவர.
இன்று அவரில்லை.
ஆனாலும், அவர் ஆசி இந்நூலிலும் பதிவாக என்னுள்ளம் விரும்பியது.
'பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள்' எனும் எனது சமூக நூல் கண்டு,
அன்புமிகுதியால் அத்தெய்வம் எழுதிய மடலினை,
'தியவத்திருமுகம்' எனும் தலைப்பிட்டு
இந்நூலில் இணைத்து ஆசிபெறுகிறேன்.
*** *** ***
குலச்சொத்தாய் தமிழினைப் பெற்றவர்.
தகுதிமிகு பேரறிஞர் திரு.ஔவை நடராஜன் அவர்கள்.
மரபும், நவீனமும் கற்றுணர்ந்த மாண்பாளர்.
பன்மொழிப் புலவர்.
துணைவேந்தராய்ப் பணியாற்றிய தூயர்.
இளையோரை ஏற்றம் செய்யும் ஏந்தல்.
அவர் தமிழ்மேற் கொண்ட அன்பு என்மேலதாக,
பல பணிகளுக்கிடையிலும் வாழ்த்துரை வழங்கினார்.
அது என் பேறு.
நன்றியுடையேன்.
*** *** ***
இக்கட்டுரைக்கு முன்னுரை தந்திருப்பவர்,
என் அன்பிற்குரிய இளைஞர் த.சிவசங்கர் அவர்கள்.
அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இன்றைய தலைவர் அவர்.
சிறந்த சிந்தனைக் கவிஞர்,
கணினித்துறை நிபுணர்.
கம்பன் பணியில் மூத்த மைந்தனாய் நின்று,
எனக்குப் பலம் சேர்ப்பவர்.
சுமைதாங்காது என் தலைசாயும் போதெல்லாம்,
தோள்கொடுத்துத் துணைசெய்பவர்.
என் ஆளுமையின் விம்பத்தை அவரில் கண்டு மகிழ்வேன்.
முன்னுரையில் அவர் முகிழ்த்த வார்த்தைகள்,
அன்பில் விளைந்தவை.
அவர் எழுந்து என் தகுதியை ஆகாயமளவு விரிக்கிறது.
அவ் விரிவில்,
அறிஞர்கள் என் அறிவின் தகுதியை அன்றி,
அவர் அன்பின் தகுதியைக் காண்பார்களாக.
*** *** ***
எனது முதற் கம்பநூலை வெளியிட்ட,
வானதி பதிப்பகத்தாரே இந்நூலையும் வெளியிடுகின்றனர்.
தமிழ் இலக்கிய உலகில் வானதிக்குத் தனி இடம் உண்டு.
உயர்ந்தோரை ஊக்குவித்து,
பல அறிவுச்சொத்துக்களை அவனிக்களித்த பெருமை,
இவர்தம் தனிப்பெருமை.
ஒரு காலத்தில், வானதியின் நூலொன்றைக் கையில் வைத்திருப்பதையே,
பெருமையாய் கருதிய எனக்கு,
எனது இரண்டாவது நூலினையும்,
வானதியினூடு வெளியிடும் பேறு கிடைத்திருக்கிறது.
எல்லையற்ற மகிழ்வு கொள்கிறேன்.
*** *** ***
கம்பவாணர் காலந்தொட்டு,
புதுவைக் கம்பன் கழகம்,
தாயாய் என்னைப் போற்றி வளர்க்கிறது.
கம்பவாணரைத் தொடர்ந்து செயலராய்ப் பொறுப்பேற்ற,
'கம்பகாவலர்' தி.முருகேசன் அவர்கள்,
கம்பன் கழகத்தினூடாக ஈழ -இந்திய கலாசாரப் பாலம் அமைத்து,
பெரும் பணியாற்றி வருகிறார்.
எங்கள் அகில இலங்கைக் கம்பன்கழகத்தின் காப்பாளராய்ச் செயற்பட்டு,
ஈழத்திலும், ஈழத்தமிழர் பரவி வாழும் புலம்பெயர் நாடுகளிலும்,
தானே நேர்வந்து கம்பன் பணிகளை ஊக்கப்படுத்தி வருகிறார்.
தலைவர் கோவிந்தசாமி முதலியார்,
இணைச்செயலர் கல்யாணசுந்தரர்முதலியார் உள்ளிட்ட
புதுவைக் கம்பன் கழகத்தார்,
தம் எல்லையற்ற அன்பினால் எம்மை இறுகப்பற்றி,
எங்கள் இலங்கைக் கம்பன்கழகத்தின்,
இரத்த உறவாய் ஆகிநிற்கின்றனர்.
கம்பன் பணியை,
தம் தலைப்பணியாய் ஆற்றிவரும் புதுவைக் கம்பன்கழகத்தாரே,
என் இரண்டாவது நூலினையும் வெளியிடுவது என் பேரு.
புதுவைக் கம்பன்கழகத்திற்கு என்ன கைம்மாறு ஆற்றுவேன் ?
'தாயே ஆகி வளர்த்தனை போற்றி' என வணங்குகிறது என் மனம்.
*** *** ***
இந்நூலாக்கத்தில் பலர் துணை செய்தனர்.
பிள்ளையாய் நின்று என்னைப் பேணும்,
என் மாணாக்கன் பிரசாந்தன்
இவ்வாக்கத்தில் பெரும்பணியாற்றினான்.
என் அன்பிற்குரிய கவிஞர் கல்வயல் குமாரசாமி,
என் அன்பு நண்பன் யாழ்ப்பாணம் மார்க்கண்டு,
என் திருக்குறள் மாணாக்கர் திருமதி.மகானந்தன் ஆகியோர்,
இந்நூலாக்கத்தில் ஒப்புநோக்கி உதவி புரிந்தனர்.
கழகப் பணியாளராய் அன்றி,
என் மாணவியாய் அக்கறையோடு செயலாற்றி, நூலினை வடிவமைத்தவர்,
செல்வி.பிரான்சிஸ்கா டொறின் டானியல் அவர்கள்,
இவர் அனைவர்க்கும் என் அன்பும், நன்றியும்.
*** *** ***
துள்ளித் திரியும் நாளில் துடுக்கடக்கி,
அள்ளித் தமிழின்பம் அருந்த வைத்து,
அன்னமும் அருந்தமிழும் ஒன்றாயிட்டு,
அகமும் புறமுமாய் எனை வளர்த்தெடுத்து,
அருகிருந்து வழிகாட்டி நெறிசெய்து,
அண்மையில் அமரராகிவிட்ட என் ஆசான்,
வித்வான் க.ந.வேலன் அவர்தம் திருவடிக்கு,
இந்நூலினை சமர்ப்பித்து மகிழ்கின்றேன்.
*** *** ***
'இன்பமே எந்நாளும் துன்பமில்லை.'
இலங்கை ஜெயராஜ்.
19.04.2004.
இலங்கை.
*** *** ***
பொருளடக்கம்:
1.உலகம் யாவையும்
2.சிறந்த தீயாள்
3.நெஞ்சினால் பிழைப்பிலாள்
4.நெருப்பைச்சுட்ட நெருப்பு
5.மயன் மகள்
6.முன்பு பின்பு
7.ஈறில் நல்லறம்
8.முத்தமிழ்க் கம்பன்
9.இயற்கை - தமிழ் - கம்பன்.
*** *** ***
==========================================================
புத்தகம் 2: செல்லும் சொல்வல்லான்
இந்த நூல் செல்லும் சொல்வல்லான், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
புதுவைக் கம்பன் விழாவில் 10.05.20013 அன்று வெளியிடப்பெற்றது.
இலக்கிய திறனாய்வு நூல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
208 பக்கங்கள்;
முதற் பதிப்பு: மே, 2013;
மொழி: தமிழ்;
வானதி பதிப்பகம்.
என்னுரை:
உயர் கம்பன் திருவடிகளில்,
நான் புதிதாய்ச் சமைத்த மாலை ஒன்றை,
அன்புத்தகுதி கொண்டு சூட்டி மகிழ்வு கொள்கிறேன்.
ஏலவே நான் சூட்டிய மூன்று மாலைகள்,
அத்தெய்வப் புலவன் திருவடிகளை.
அணி செய்து என நான் உரைப்பது சரிதானா?
கற்பகப் பூக்களால் சான்றோர் சாற்றிய மாலைகள் பல,
கம்பன் திருவடிகளில் கமழ்ந்து கிடப்பதால்,
கற்றோர்க்கு இவை காகிதப்பூமாலைகளாய்த் தோன்றிடலாம்.
ஆனாலும், சூட்டிய எந்தனுக்கு,
அவை அழகு மாலைகளாய்த்தான் தோன்றுகின்றன.
அவ் எண்ணத்தின் காரணம்,
அன்போ, அறியாமையோ அறியேன்.
ஒழுங்கற்ற மண்வீடானாலும்,
விளையாட்டாய்க் கட்டிய குழந்தைக்கு அது மாளிகைதான்.
அதன் மனநிலையே என் மனநிலையும்.
கற்றோரே அறிவுத்தகுதி காண விழைவர்.
கடவுளுக்கு அன்பே தகுதியாம்.
என்னை வாழ்வித்த கம்பக்கடவுள்தன் திருவடிகளில்,
அன்புத்தகுதியால் இந்த அணிமலரைச் சூட்டுகிறேன்,
அவன் ஏற்பான் எனும் நம்பிக்கையில்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ஒரு நூலுள் பல நூல்களைச் சமைத்த வன்மை,
கம்பனின் மதி நுண்மை
ஏட்டில் எழுத முடியாத இறைவனையே,
கூட்டிக் குறிகளுக்குள் கொடு வந்த கைத்திறமா?
நீட்டி உரைக்காமல் நிழல் போல, கதையுள்ளே,
மாட்டியிருக்கின்ற மாண்பான தத்துவமா ?
வீட்டில் நடக்கின்ற வினையெல்லாம் கூட அவன்,
பாட்டில் பதித்திட்ட பக்குவமா?
காடு, மலை, வானம், கடல், ஆறு அத்தனையும்,
நாடி அவன் உரைத்த நயப்பதனின் மகத்துவமா ?
பேதமற மனிதனொடு விலங்கு, பறவையெலாம்,
ஆதரவு செய்கின்ற அரும்பெரிய அற்புதமா ?
கம்பன் பெருமைக்குக் காரணம் இவற்றுள்ளே,
ஏதென்று உரைக்க என்னால் முடியவில்லை.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்,
எங்கள் கம்பா ! கம்பா ! கம்பா !
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கைபிடித்துக் கம்பனுள் அழைத்துச்சென்ற,
கற்றாரைக் காலம் விழுங்கிவிட,
உள்நுழைந்த பாதை மூடப்பட்டதால்,
ஆழவும் முடியாமல், மீளவும் முடியாமல்,
அன்றாடம் அவதியுறுகிறேன்.
மூழ்கியதோ அமுதக் கடல்,
நிகழ்வது திணறலா? தித்திப்பா ?
இன்று என் நிலை எதுவென்று எனக்கே தெரியவில்லை.
கம்பனின் அறிவாழம் கண்டு புத்தி திணறுகிறது.
அவனது அமுதக்கவிச்சுவையால் இதயம் தித்திக்கிறது.
அச்சமும், ஆனந்தமும் ஒருங்கே நிகழும்,
இவ் அற்புதத்தை என் சொல்ல ?
முழுமையாய்க் கம்பனை,
தொடவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை.
கவிச்சுவை காட்டி,
'இதோ பிடி' என்று தொடவும் வைக்கிறான்.
ஆழம் காட்டி அஞ்சி விடவும் வைக்கிறான்.
காவியத்தைக் கற்கக் கற்க,
கடவுளோடு கம்பன் ஒன்றுவது புலனாகிறது.
கம்பனைத் தொட்டார் கடவுளைத் தொட்டாரே !
என் முன்னோர் செய்த நல்வினைப்பயன்,
இப்பிறப்பில் கம்பனின் அடிதொடும் வாய்ப்புற்றேன்.
ஈங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ?
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கம்பனைக்கடவுளாய்க் காணக்காண,
கல்வி மீதான அச்சம் குறைகிறது.
முன்னை நூல்களைச் செய்யும் போது,
மனத்துள் ஏற்பட்ட மருட்சி ஏனோ இப்போதில்லை.
வெளி நின்று காட்டுபவனும் அவனே!
உள் நின்று காண்பவனும் அவனே!
வெறும் கருவியாய்ச் செயற்படுவதேயன்றி,
இங்கு என் வேலை ஏதும் இல்லை.
முழுமையாய் அன்றேனும்,
ஓரளவு இவ் உண்மை உளத்துள் பதிகிறது.
அதுவே அச்சம் அகன்றிடக் காரணமாம்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கல்லைப்பிசைந்து கனியாக்கி வான்கருணை,
வெள்ளத்தழுத்தி வினைகடிந்த வேதியராய் என்,
உள்ளத்திற்கும் குருநாதர்,
பேராசிரியர் அமரர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்கள்,
அருளால் எனக்கு இட்ட பிச்சை,
வெள்ளமெனப் பெருகி வேந்தனென என்னை வாழ்விக்கிறது.
என்ன குறையும் இலோம் என,
இதயம் நிரம்பி வாழ்கிறேன், வாழ்த்துகிறேன்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இறையருளால் அறிஞர் பலர்,
என் வாழ்வுக்கு வழிகாட்டித் துணைசெய்தனர்.
கம்பனே வாழ்வெனக் காட்டிய கம்பனடிப்பொடி,
அன்பால் ஆதரித்து எனை ஆளாக்கிய அருணகிரியார்,
தமது அங்கீகரிப்பால் அறிவுலகில் எனை நிலைநிறுத்திய
பேராசிரியர் அ.ச.ஞா.,
கம்பனின் தத்துவ வித்தகத்தை தரிசிக்கச்செய்த கவிக்கோ.
இப்பெரியாரைக் கண்டு பயனெய்தும் வண்ணம்,
என்னை ஆளாக்கி அருள் செய்த,
என் ஈழத்துக் குருநாதர்கள்,
வித்துவான் வேலன், வித்துவான் ஆறுமுகம்,
ஆசிரியர் சிவராமலிங்கம்பிள்ளை, தேவன் ஆகியோரோடு,
ஆழத்தமிழ் கற்பித்து என்னை ஆளாக்கிய,
பேரறிஞர் இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் என,
நான் போற்றித் தொழும் அறிஞர் வரிசை மிக நீண்டது.
என் உச்சியில் அவர்தம் திருவடித் தூசி பெற்றேன்.
நல் மன ஆசி பெற்றேன்.
அதனால் ஆசு தீர்ந்தது.
தேசு நீண்டது.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
செல்லும் சொல்வல்லான் எனும் எனது இந்நூலில்,
பத்துக்கட்டுரைகள் பதிவாகின்றன.
எழுத்துரு முழுவதும் எனது.
பொருளைப் பொறுத்தவரை,
முன்னோர் மொழி பொருள் சிலவற்றையும்,
பொன்னே போல் போற்றி இதனுள் பொதிந்துள்ளேன்.
அப்பெரியோரால் நான் சிறந்தது உண்மை.
என்னால் அவர் கருத்து மாசுற்றதோ அறியேன்.
அங்ஙனமாயின் கற்றோர் பொருப்பார்களாக !
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கன்னியாசுல்கம் எனும் முதற்கட்டுரை.
நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரின்,
தசரதன் குறையும் கைகேயி நிறையும் எனும்,
நூலைக் கற்றதன் பிரதிபலிப்பு.
கம்பனைக்கற்று கரைகண்ட பெரியார் அவர்.
ஆயினும் அவர்தம் இந்நூற் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
ஆன்ற அப்பெரியாரை மறுக்க நீ யார் ?
கேள்வி எழும்.
விடைகள் இரண்டுளவாம்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்,
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணாது ஒழியின்,
அது குற்றமே என்பது ஒன்று.
தசரதச்சக்கரவர்த்தியை,
கம்பனோ, கம்ப காவியத்தில் வரும் பாத்திரங்களோ,
போற்றினரேயன்றி தூற்றினார் இல்லை.
தாயொத்து, தவமொத்து, சேயொத்து, மருந்தொத்து, அறிவொத்து,
தன்னுயிர் போல் மன்னுயிரை நேசித்தவன் தசரதன் என்கிறான்
கம்பன்.
தாயொக்கும் அன்பில், தவமொக்கும் நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
நோயொக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப்புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான்.
மானமும், குலமும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் எனவும்,
நல் அற மூர்த்தி அன்னான் எனவும்,
தருமத்தின் கவசத்தான் எனவும்,
பலவகையாய், கம்பனால் போற்றப்பட்டவன் தசரதன்.
அத்தகையனை கவியின் கருத்துக்கு மாறாகவும்,
காவிய ஓட்டத்திற்கு மாறாகவும் விழச்செய்து,
அவ்வீழ்ச்சியில் கைகேயியை எழச்செய்யும்,
அப்பெரியார்தம் முயற்சியில் எனக்கு உடன்பாடில்லை.
நெஞ்சம் தூயதசரதனை வஞ்சன் என உரைக்கும்,
அவர்தம் வாதில் கிஞ்சித்தும் நியாயம் இருப்பதாய்ப் படவில்லை.
தாழ்ந்ததை உயர்த்துதல் தகும்.
உயர்ந்ததைத் தாழ்ந்துதல் தகுமா?
அப்பெரியார்தம் வாதத்தில்,
புத்தியின் கூர்மையன்றி சத்திய நேர்மை இல்லை.
ஐயத்தால் தெளிவைத் திரிபாக்க முயன்றிருக்கின்றார்கள்.
மறுக்கத்தோன்றியது, மறுத்திருக்கிறேன்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
தக்க பெரியார்தாமும் சிலவேளை,
முக்குண வயத்தால் முறை மறந்து ஒழுகுவர் என்பது,
இரண்டாவது பதில்.
உன் பதில்கள் மட்டும் சரியானவையா ?
மீண்டும் கேள்வி எழும்.
சரிதான் என உறுதி சொல்ல நான் யார் ?
எண்ணியது உரைத்தேன்.
ஏற்பதும் இகழ்வதும் கற்றார்தம் கணிப்பிற்குரியதாம்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
மதியினில் மறுத்துடைத்தாள்.
இஃது இரண்டாவது கட்டுரை.
மங்கல அடையாளம் நீக்கிய,
கைகேயியின் செயல் பற்றி விளக்க,
கம்பன் கையாண்ட உவமையில் ஏற்பட்ட குழப்பம்,
இக் கட்டுரையாய் விரிந்துள்ளது.
விடைகாண விழைந்துள்ளேன்.
என் முடிவினை அறிவுலகம் அங்கீகரிக்குமோ ? அறியேன்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
மூன்றாவது கட்டுரை,
பெருந்தடங்கன்.
புறம் அகத்தோடு தொடர்புற்றது.
பெண்களின் பெருத்த கண்களை,
அவர்தம் கருணை மனத்தோடு ஒன்றுவித்து,
கம்பன் செய்யும் வர்ணனையை,
காண்டந்தோறும் தேடிப்பதிவு செய்துள்ளேன்.
இஃது இக்கட்டுரையின் சாராம்சம்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
சொல் ஒக்கும்
என்பது நான்காம் கட்டுரை.
சொல்லுக்கும், பொருளுக்கும், உணர்வுக்குமான தொடர்பில்,
சொல்லுக்கும், பொருளுக்குமான இயைபு பற்றிய,
கம்பனின் கருத்து இக்கட்டுரையில் பதிவாகிறது.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
அறியாமை ஒன்றுமே
இத்தலைப்பில் இரண்டு கட்டுரைகள் வரைந்துள்ளேன்.
முதற் கட்டுரை,
கம்பனின் கடவுள் வாழ்த்துப்பாடல்களில் ஒன்றான,
நாராயணாய நம எனும் பாடலை நயப்போடு காண்பது.
இதே தலைப்பில் அமைந்துள்ள இரண்டாம் கட்டுரை,
மேற்பாடலை தத்துவக்கண் கொண்டு நோக்குவது.
கற்றோர் உவப்பின் என் முயற்சி பயன்கொள்ளும்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
செல்லும் சொல்வல்லான்
நூலின் தலைப்பாய் அமையும் இக்கட்டுரை,
சொல் வன்மையின் திறம் உரைப்பது,
சொல் வன்மை நோக்கி,
இராமனால் அனுமனுக்கும்,
கம்பனால் இராமனுக்கும் வழங்கப்பட்ட,
இருபட்டங்களை அடிப்படையாய்க் கொண்டு,
சொல்வன்மை பற்றிய கருத்துக்களை,
கம்பன் அடி பற்றி ஆய்ந்துள்ளேன்.
இக்கட்டுரையில் வரும்,
அனுமன் பற்றிய பகுதிகள்
எனது மற்றொரு நூலான மாருதி பேருரைகள் எனும் நூலிலும்,
வேறு விதமாய் விரிக்கப்பட்டுள்ளன.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
வேரோடும் சாய்ப்போம்
இஃது எட்டாவது கட்டுரை.
கம்பனைக் கண்டித்தவர் புரட்சிக்கவிஞர்.
ஆனாலும், அவர் உள்ளம் கம்பனின்பாற்பட்டது.
போரிலா உலகம் காணப் புறப்பட்ட கம்பன்,
அதற்காம் உபாயம் உரைக்கின்றான்.
அவ் உபாயம் பற்றியும்,
அதை உள்வாங்கி வழிமொழிந்த,
புரட்சிக்கவிஞர்தம் கவிதை பற்றியும்,
இக்கட்டுரை விரிந்துரைக்கின்றது.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
புலவர் இட்ட மாலை
இஃது ஒரு நயப்புக்கட்டுரை.
கவிஞனை விட,
கவிதைகளை இரசிக்கும் உரிமை இரசிகர்க்கே அதிகமாம்.
அவ் இரசனை மரபு இதயத்தை விரிவித்து இதம் தருவது.
பொருந்தா இடத்தில் புலவர் இட்ட மாலைகள்,
எண்ண விரிவில் பதிவாக்கும் ஏற்றத்தை,
இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.
இவ்வெண்ணத்தின் மூலவர் என் குருநாதர்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
நிறைவுக்கட்டுரை,
வரிசை.
உயர்வு, தாழ்வைச் சமன் செய்யும் இன்றைய உலகின் நடைமுறை,
தமிழர்தம் வாழ்விற்கு ஒவ்வாதது.
உலகின் உயர்வு நோக்கிய போற்றுதல்,
அவ் உயர்வு நோக்கி உலகோரை உயர்த்தும்.
அது நோக்கி நம் மூத்தோர் அமைத்த வரிசை மரபினையும்,
அம்மரபினைக் கம்பன் கையாண்ட அழகினையும்,
இக்கட்டுரை உரைக்கின்றது.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
முதன் முதலில் என் எழுத்தாக்கங்களை,
நூலாய் வெளியிட்டுப் பெருமை செய்தது,
புதுவைக்கம்பன் கழகமே.
அக்கழகத்தின் முதல்வர்,
அமரர் கம்பவாணர் அருணகிரி அவர்களின் அன்பினைப் பெற்றது,
என் முன்னைத் தவப்பயனேயாம்.
அவரின்பின், என்னைப் பிள்ளையாய்ப் பேணி வருபவர்,
புதுவைக்கம்பன் கழகத்தின் இன்றைய செயலர் தி.முருகேசனார்
அவர்கள்.
என் உயர்வில் என்னை விடப் பெருமை கொள்ளும் பெரு மனிதர்
அவர்
கம்பன் பணியை, தன் வாழ்நாள் கடைமையாய் ஆற்றும் பெரியார்.
தன் பொருளையும், புகழையும்,
கம்பன் திருவடிகளில் கொட்டி மகிழும் புண்ணியர்.
கனிவும், பணிவும் அவர் கண்ணியத்தின் அடையாளங்கள்.
தாயாய் என்னைத் தாங்குபவர்.
அவர் கருணைக்கு எப்பிறவியில் கைம்மாறு இயற்றுவேன்?
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கம்பனை ஆழக்கற்ற புதுவைக் கழகத் தலைவர்
கோவிந்தசாமி முதலியார்,
வக்கீல் வழிநின்று கம்பன் தாள்தொழும் தம்பியாய்ச் செயல்படுகின்ற,
கழகத்தின் உபதலைவர் அன்பர் சிவக்கொழுந்து,
பொருளால் புகழ் செய்யும் புரவலர் பொருளாளர் வேல்.சொக்கநாதன்,
சிற்றெறும்பையும் பொறாமைப்பட வைக்கும் செயல் வீரர்
செயலர் கல்யாணசுந்தர முதலியார் என,
வேரோடி விரிந்து நிற்கும் புதுவைக்கழக விருட்சத்தில்,
என் மற்றொரு நூல் கனிந்து பயன் செய்ய என்ன தவம் செய்தேனோ?
அவர் அனைவர்க்கும் என் அன்பும், பணிவும்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இந்நூலின் மூலம்,
என் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறுகிறது.
பேராசிரியர் நாவுக்கரசர் சோ.சத்தியசீலன் அவர்கள்,
முன்னுரை எழுதியமை,
இந்நூற்குக் கிடைத்த மகுடச் சிறப்பு.
என் குருநாதரின் அணுக்கத் தொண்டர் அவர்.
மைந்தராய், மாணவராய், மதியுரை அமைச்சராய் செயலாற்றி,
எனது ஆசானின் அகத்தமர்ந்த பெரியர் அவர்.
அறிவை அன்பாக்கிய அற்புதர்.
அறிவாணவம் சிறிதுமிலா அதிசயர்.
விநயமே அவர்தம் வித்தையின் வெளிப்பாடு.
இறங்கி வந்து இளையோரை ஏற்றுகிற மாமனிதர்.
முட்டில்லா அறிவிருந்தும் இளையோரை,
தட்டி வளர்க்கும் தகவுடையார்.
இன்றைய மேடைப்பேச்சாளர்களின் பிதாமகர்.
எங்கோ இருந்த எனை எல்லோர்க்கும் இனங்காட்டி ஏற்றம் செய்தவர்.
என் குருநாதர் மறைந்த குறையை நீக்குபவர்.
இந்நூல் பற்றிய அப் பெரியார்தம் வார்த்தை ஒவ்வொன்றும்,
தெய்வத்திருவாக்காய் என்னைத் தேற்றுவன.
என் ஆக்கங்களை விட அவர் தந்த அணிந்துரை,
இந்நூற்கு ஏற்றம் செய்வது திண்ணம்.
நீளநினைந்திருப்பேன்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
மாணாக்கர் முன்னுரை தருவது மரபு.
அம் மரபு பற்றி என் மாணவர்களில் ஒருவனான திரு.ச.மணிமாறன்.
இந்நூற்கு முன்னுரை வரைந்துள்ளான்.
என் விருப்பிற்குரிய மாணவன் அவன்.
மதிநுட்பம் அவனது மாண்பு.
தினம், தினம் புதுமை காண விழைவது,
அவனது நிறையும், குறையுமாம்.
எத்துறையில் நுழைந்தாலும் முத்திரை பதிக்கவிரும்புபவன்.
ஒன்றில் மனம் பதிக்கும் உறுதி இருந்திருந்தால்,
இவன் மூலம் தமிழுலகு ஒரு பேரறிஞனைப் பெற்றிருக்கும்.
தமிழ் கற்று, பின் விட்டு,
இன்று கணினித்துறையில் கால் பதித்து,
அங்கும் தனை அடையாளம் செய்கிறான்.
தன் மதியின் மைல்கல்லாய் எனைப் பதித்தவன்.
மதியோடு விதியும் பொருந்தி கதி தருமாயின்,
இவனால் நான் ஏற்றம் கொள்வேன்.
இவன் ஆற்றலில் என் ஏற்றம் கண்டு அகம் மகிழ்கிறது.
அவனின் முன்னுரை என் நூலை மட்டுமன்றி,
அவனையும் இனம் காட்டும்.
தீராக் காதலன்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
கம்பன் பற்றிய எனது முன்னை மூன்று நூல்களையும்,
வானதி பதிப்பகத்தாரே வெளியிட்டுத் துணைசெய்தனர்.
தமிழ் உலகிற்கு உயர் அறிஞர்தம் நற்கருத்துக்களை,
நூலாக்கித் தந்த பெருமை அவர்தமக்கே பெரிதும் உரியது.
வட்டி போட்டுத் தமிழை வளர்த்த செட்டிநாட்டுச் செம்மல்கள்.
ஐயா திருநாவுக்கரசு அவர்கள் வழிநின்று,
மைந்தர் ராமு அவர்கள்,
இன்றும் அத்திருப்பணியைச் செம்மையுற நிகழ்த்துகிறார்.
வரலாற்றுப் பெருமை கொண்ட வானதியின்,
இரு தலைமுறைத்தொடர்பு என் பேறு.
நன்றியோடு வணங்குகிறேன்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இந்நூலின் கருத்தாக்கத்தில் துணை செய்த,
என் மாணாக்கர்கள் திரு.ஸ்ரீ.பிரசாந்தன், திரு.ச.மார்க்கண்டு,
திரு.எம்.கலைச்செல்வன்,
செல்வி வாஹினி ஸ்ரீதரன் ஆகியோர்க்கும்,
உருவாக்கத்தில் துணை செய்த,
திருமதி சுதர்சினி கோபிரமணன்
ஆகியோர்க்கும் நன்றியுரைத்தல் அவசியமன்றாம்.
விழுதுகளாய் எனைத்தாங்கி நிற்கும்,
அந்நல்லார்க்கு நன்றி எதற்கு?
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்.
*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
நிறைவாய் என் அன்பு வாசகர்களுக்கு ஒரு வார்த்தை.
கம்பனால் உங்கள் உறவு கிடைத்தது.
உங்கள் ஆதரவால் உயர்ந்தேன் நான்.
அந்நன்றி மறவேன் !
நூலில் பதிவானவை எனது சிந்தனைகள்.
அவற்றை அப்படியே ஏற்காமல்,
உங்கள் சிந்தைத் தராசேற்றி,
தேர்ந்து பயன் கொள்க !
கம்பன் வாழ்க !
"இன்பமே எந்நாளும் துன்பமில்லை"
பொருளடக்கம்:
01.கன்னியாசுல்கம்;
02.மதியினில் மறுத்துடைத்தாள்;
03.பெருந்தடங்கன்;
04.சொல் ஒக்கும்;
05.அறியாமை ஒன்றுமே ! - 1;
06.அறியாமை ஒன்றுமே ! - 2;
07.செல்லும் சொல்வல்லான்;
08.வேரோடும் சாய்ப்போம்;
09.புலவர் இட்ட மாலை;
10.வரிசை.
=============================================================================
புத்தகம் 3.அவர் தலைவர்
இந்த நூல் அவர் தலைவர், இலங்கை ஜெயராஜ் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இலக்கியத் திறனாய்வு நூல்.
காகித உறை/ பேப்பர்பேக்;
184 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: மே, 2016.
Comments
Post a Comment