டி.வி.ராதாகிருஷ்ணன் இயற்றிய புத்தகங்கள் - 1.திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
டி.வி.ராதாகிருஷ்ணன்: 36 ஆண்டுகள் அரசு வாங்கி ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர். இவரது நாடகங்கள் பல பரிசுகளை வென்றுள்ளன. பாரத ரத்னா என்ற நாடகம் இலக்கியச் சிந்தனை விருதினைப் பெற்றதாகும். இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ள இவரின் படைப்புகள் பல, நூலாக வந்துள்ளன. மகாபாரதத்தை மிகவும் எளிய நடையில் எழுதி, புத்தகமாக வெளிவந்துள்ளது. அதுபோல இந்நூலையும், அனைவருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமைப்படுத்தி எழுதியுள்ளார். இந்நூல், வைணவம் பற்றிய பல செய்திகளை நமக்குச் சொல்லி வியக்க வைக்கிறது.
* - * - * - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -
1.திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
ஆன்மீகம் நூல்.
காகித அட்டை / பேப்பர்பேக்;
120 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதல் பதிப்பு: ஏப்ரல், 2017;
ஐந்தாம் பதிப்பு: அக்டோபர், 2021;
வானதி பதிப்பகம்.
‘அகமொழித்து விட்டேனோ விதுர ரைப்போல, தசமுகனைச்செற்றேனா பிராட்டியைப் போல, உடம்பை வெறுத்தேனோ திருநரையூரர்போல...’ இப்படிப் பலவேறு கதைகளின் சாரத்தை உரைத்தாள் மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்று சொல்லப்படுகிறது. வைணவத்தைச் சாறு பிழிந்தாற்போல் உள்ள இக்கதைகள் படித்து அறிந்து மகிழத்தக்கவை. வைணவர் மட்டுமன்றி அனைவரும் படித்துப் பயனடையலாம்.
* - * - * - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -
என்னுரை:
வணக்கம்!
நாயன்மார்கள் என்பவர்கள் சிவனடியார்கள் ஆவர். இவர்கள் 63 நபர்கள் ஆவார்கள்.
ஆழ்வார்கள் எனப்படுபவர்கள் திருமாலைப் போற்றிப் பாடியவர்கள். இவர்கள் ஆண்டாளையும் சேர்த்து 12 பேர் ஆவர். இவர்கள் வாழ்ந்த காலம் 7 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை எனலாம்.
இவர்களைத் தொடர்ந்து வைணவத் தொண்டாற்ற வந்த ஆச்சார்யர்கள், நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர், பராசர பட்டர், மணவாள மாமுனிகள் ஆவார்கள்.
ஆழ்வார்கள் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள் என்றால், ஆச்சார்யர்கள் புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள்.
ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள் தேடித் தேடி வெளிக்கொணர்ந்து பரப்பினார். பின்னவ் ஆச்சார்ய பீடத்தில் ஏறியவர் ஆளவந்தார். ஆளவந்தாரின் அழைப்பை ஏற்று காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜரால் ஆளவந்தாரின் உடலைத்தான் பார்க்க முடிந்தது. ஆனால், ஆளவந்தாரின் உடலில் மூன்று விரல்கள் மட்டுமே மூட முடியாத நிலையில் இருந்தது.
ராமானுஜர் மூன்று பிரமாணங்களை எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமானங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் மடிந்தன என்பர்.
அந்த மூன்று பிரமாணங்கள்
1.பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது;
2.விஷ்ணுபுராணம் எழுதிய பராசரர் மற்றும் பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாப் புகழுக்கு வழி கோலுவது;
3.வேதத்தை அழகுத் தமிழில் பாசுரங்களாய்த் தந்த நம்மாழ்வாரின் பெயர் உலகில் என்றும் வாழும்படி செய்வது.
ராமானுஜர், 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் அவதரித்தார். இது அவரின் ஆயிரமாவது ஆண்டாகும். அவர் பெரிய வேதாந்தி மட்டுமல்லாது சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தியவர் ஆவார்.
வைணப் பெரியோர்களின் அருஞ்செயல்களை ஸ்ரீராமானுஜரிடம் சொன்ன பாமரப் பெண்ணின் 81 வாசகங்களை புத்தகமாக எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்தமைக்கு இறைவனுக்கு என் நன்றி.
மகாபாரதத்தை அனைவருக்கும் எளிமையாகப் புரியும் வண்ணம், மினியேச்சர் மகாபாரதம் என்று நூலை எழுதியுள்ள நான் அப்பாணியைப் பின்பற்றியே எளிய நடையில் இந்நூலையும் எழுதியுள்ளேன்.
அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற அளவில் இந்நூலை வெளியிட்ட என் அன்பு நண்பர் வானதி ராமநாதனுக்கும் முகப்பு ஓவியம் வரைந்துள்ள ஓவியர் அவர்களுக்கும், மற்றும் வானதி பதிப்பக ஊழியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இம்முயற்சியில் எனக்குப் பெரிதும் உதவியாய் இருந்த என் மனைவியும் குழந்தைகள் இலக்கிய எழுத்தாளருமான காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றி.
படியுங்கள்...பயன் பெறுங்கள்.
டி.வி.ராதாகிருஷ்ணன்.
சென்னை.
* - * - * - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -
உள்ளே புகுமுன்...
ஆண்டவன் அருளியது பகவத் கீதை.
ஸ்ரீராமானுஜருக்கு ஒரு பெண் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்.
108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்த தலம். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் "வைத்த மாநிதிப் பெருமாள்." இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிப் படுகையில் உள்ளது.
நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற திருக்கோளூர் திவ்விய தேசத்திற்கு எம்பெருமானார் திருநகரியிலிருந்து எழுந்தருளினார்.
ஊருக்குச் சற்றுத் தொலைவில் அவர் வந்த போது, ஒரு பெண்மணி ஊரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தார்.
அந்த ஊர் புகும் ஊர் என்றும், அங்கு வசிப்பது பெரும்பாக்கியம் என்றும் பலரும் கருதும் போது, இந்தப் பெண் மட்டும் என் ஊரைவிட்டு வெளியே செல்கிறாள் என்று ராமானுஜருக்கு ஆச்சரியம். அப்பெண்ணிடம். அவள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கான காரணத்தைக் கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், "சுவாமி, முயர்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன?" என்றாள் விரக்தியுடன்.
அதைக் கேட்ட ராமானுஜர், "அம்மா, உனக்குக் குறைதான் என்ன?" என்று விசாரித்தார்.
"ஒன்றா, இரண்டா?" என்று தொடர்ந்து ஏக்கத்துடன் கேட்ட அவள், 81 வைணவப் பெரியோர்கள் எத்தனையோ அருஞ்செயல்களைப் புரிந்திருக்கிறார்கள். அதுபோன்ற அவர்களுடைய வைணவ நலன்கள் ஒன்றுகூடத் தனக்கு வாய்க்கவில்லையே என்று வருந்திக் கூறினாள்.
அந்தப் பெண்மணி, வைணவ நலன்கள் என மொத்தம் எண்பத்தோரு வைணவப் பெரியோர்களின் செயல்களைப் பட்டியலிட்டாள். இப்படி அவள் கூறிய வாசகங்களின் மறைபொருளைக் கொண்ட நூல், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்! இது வைணவ ரகசியக் கிரந்தங்களுள் ஒன்று என்று போற்றப்படுகிறது.
அந்த பெண்மணி கூறியவற்றைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் ராமானுஜர். சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார். பின், அவளை சமாதானப்படுத்தி அவளை அவளுடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார். அவள் சமைத்த உணவை உண்டார்.
அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது. அவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது.
மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் எனப்படுகிறது.... அந்த 81 செயல்கள் என்ன என்று பார்ப்போம்.
01.அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!
02.அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே !
03.தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப்போலே !
04.தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப்போலே !
05.பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே !
06.பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே !
07.தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே !
08.தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே !
09.மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே !
10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே !
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே !
12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே !
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே !
14.அவன் சிறியனென்றேனோ ஆழ்வாரைப் போலே !
15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே !
16.யான் சத்யம் என்றேனோ ஆழ்வாரைப் போலே !
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே !
18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே !
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே !
20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே !
21.தேவுமற்றறியேனோ மதுரகவியரைப் போலே !
22.தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே !
23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே !
24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே !
25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே !
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே !
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே !
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே !
29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே !
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே !
31.குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே !
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே !
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே !
34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே !
35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே !
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே !
37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே !
38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே !
39.அனுப்பி வையுமென்றேனோ வசிஷ்டரைப் போலே !
40.அடி வாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே !
41.மண்பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே !
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே !
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே !
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே !
45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே !
46.வழி அடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே !
47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே !
48.அரக்கனுடன் பொறுதேனோ பெரியவுடையாரைப் போலே !
49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே !
50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே !
51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே !
52.இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே !
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே !
54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே !
55.இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே !
56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே !
57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே !
58.நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர் நம்பியைப் போலே !
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே !
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே !
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே !
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே !
63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே !
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே !
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே !
66.அந்தாதி சொன்னேனோ அமுதானரைப் போலே !
67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே !
68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே !
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே !
70.சுற்றிக்கிடந்தேனோ திருமலையாண்டான் போலே !
71.சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே !
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே !
73.உடம்பை வெறுத்தேனோ திருநறையூரார் போலே !
74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே !
75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே !
76.நீரில் குதித்தேனோ கணப்புரத்தானைப் போலே !
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே !
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே !
79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே !
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே !
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே !
இனி ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
* - * - * - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -* - * -
Comments
Post a Comment