இந்த நூல் இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா. கமலக்கண்ணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அணிந்துரை:
வடலூர் வள்ளற் பெருமானின் வாழ்க்கை வரலாற்றையும் அவரின் அற்புத செயல்களையும் உணர்ந்து எழுதியுள்ளார் நூலாசிரியர்.
வாழ்க்கை வரலாறு என்ற பொருளில் 46 தலைப்புகளும் சத்திய ஞான வாக்கு என்ற பொருளில் 32 தலைப்புகளும் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. ஆக 78 தலைப்புகளில் வள்ளலாரின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை உணர்ந்து உரைத்துள்ளார்.
பதினாறு ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவர் வெறும் நூலறிவை வைத்துக் கொண்டு இந்த நூலினை எழுதிடவில்லை. நூலாசிரியரின் குருநாதரான புதுக்கோட்டை ஆறுமுகம் அய்யா அவர்களின் பெருங்கருணையால் அருளாளர்களோடு தொடர்பு கொள்ளும் பேற்றினைப் பெற்றவர் நூலாசிரியர். அந்த அனுபவ நிலையில் பல செய்திகளை உணர்ந்து உரைத்துள்ளார். இதில் கூறப்பெற்றுள்ள பல செய்திகள் இதுவரை யாரும் வெளிப்படுத்தாதவை.
இந்நூலிலுள்ள பல செய்திகள் குருவருளின் துணையோடும் வள்ளற்பெருமானின் அருளோடும் அவர் உணர்ந்து எழுதியிருக்கிறார். இராமலிங்கரின் சீடர்கள் ஞானத் தவம் பயின்ற மலைக்கோவில்கள், அருட்பாவைத் காத்த அ.பாலகிருஷ்ணப் பிள்ளை, இராமலிங்கர் தம் சீடருக்கு எழுதிய கடிதங்கள், மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த் தாழிசை ஆகிய கட்டுரைகள் தமிழ் உலகத்திற்குப் புதியவை.
இந்த நூலில் உள்ள செய்திகளை ஒன்றுக்குப் பன்முறை படித்து, நூலாசிரியர் காட்டியுள்ள சான்றுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பின்னர் பிற அருளாளர்களின் வாழ்வோடு ஒப்பிட்டு நோக்கி உண்மை உணர்தல் அறிவுடையாருக்கு அழகு.
இவ்வாறு அரிதின் முயன்று இவர் பெற்ற செய்திகள் நூலாக வெளிவருவது போற்றுதலுக்குரியது.
அருட்பிரகாச வள்ளலாரின் உண்மை வரலாற்றை நமக்குப் பதிவு செய்து தந்திருப்பதோடு அவருடைய அருட்பாடல்களில் பொதிந்துள்ள உண்மைகளை இறையருளின் துணையோடு அறிந்து உரைத்திருப்பது இந்நூலுக்குரிய சிறப்பு.
தங்கள் அன்புள்ள,
அரங்க இராமலிங்கம்
26.06.2013.
முன்னுரை:
இராமலிங்கப் பெருமானார் அருளிச்செய்த திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளிலும் அடங்கிய 6733 பாடல்களுக்கும் சென்னை வானதி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த ஞானவிளக்கம் நூல்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்று அறிகின்றேன்.மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஸ்ரீலங்கா, கத்தார், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி ஆகிய 11 நாடுகளிலிருந்து இதுவரை வாசகர்கள் பாராட்டியுள்ளனர். அவர்களுடைய புகழுரைகளெல்லாம் இராமலிங்கப் பெருமானாருக்கே உரியனவாகும். ஏனெனில், ஞானவிளக்கம் உருவாகுமாறு, பெருமானார் இயக்கினார்; எளியேன் இயங்கினேன். ஆகவே, புகழுரைகளை எல்லாம் பெருமானாரின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு, அவருடைய திருவடி சேவகனாய்ப் பணிவோடு நிற்கின்றேன்.
புகழுரைகள் மட்டுமல்லாது, இகழுரைகளும் வருவதை நான் மறைக்க விரும்பவில்லை. சிங்கப்பூரிலுள்ள சன்மார்க்கத் தலைவர்கள் சிலர், கமலக்கண்ணன் எழுதும் நூல்களைப் படிக்காதீர்கள்; அவருடைய உரையைக் கேட்காதீர்கள் என்று பலருக்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்புகின்றனர்; தாக்கியும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். மலேசியாவில் சில சன்மார்க்கத் தலைவர்கள் நான் சைவ சமயம் சார்ந்த விளக்கம் எழுதியிருப்பதாகக் குறை கூறுகின்றனர். ஆனால், எவருமே, எந்த பாடலுக்கு நான் எழுதிய விளக்கம் தவறுடைத்து என்று சுட்டிக்காட்டவில்லை. ஆகவே, அவர்களுடைய எதிர்ப்பின் நோக்கம் எனக்குப் புரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒருசிலர் என்னுடைய நூல்களைப் பாராட்டியுள்ளனர். ஆனால், பலரும் என்னை, சன்மார்க்க விரோதியே, சைவ சமயவாதியே, குழப்பவாதியே, சிவலிங்க வடிவ ஜீவஜோதி என்று உளரும் அறிவிலியே என்று வசைபாடி வருகின்றனர். இந்த இகழுரைகளை எல்லாம் நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். அன்று இராமலிங்கருக்கு விஷம் கொடுத்துக் கொள்ள முயன்றதை ஒப்பிட்டால், எனக்கு ஏற்படும் எதிர்ப்பு சிறு துரும்புக்கு சமமாகும். என்ன காரணத்தாலோ அவர்கள் பல்லாண்டு காலமாக மறைத்து வைத்திருந்த உண்மைகள் இன்று என்மூலம் வெளிப்படுவதால் அவர்கள் ஆத்திரம் கொள்கின்றனர் போலும்!
நான் ஞானவிளக்கம் எழுதத் தொடங்கியது முதல் கடந்த ஏழாண்டுகளில் என் அநுபவத்தால் அறிந்த அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், சன்மார்க்கத் தலைவர்களாய் உலா வரும் ஒருசிலர் மறைமுகமாக, திருஅருட்பாவை அழிக்க முயல்கின்றனர் என்பதாகும்.
தமிழக அரசு அலுவலரான வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அலுவலர், சுயமாக செயல்பட்டிருந்தால், தன்னுடைய துறையின் முன்னாள் ஆணையர் ஆ.பாலகிருஷ்ணப் பிள்ளையின் கட்டளைப்படி அவருடைய திருஅருட்பா செம்மொழிப் பதிப்பை அப்படியே வெளியிட்டிருப்பார்.
இராமலிங்கரின் கட்டளைப்படி தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறு திருமுறைகளிலும் சேர்க்காமல் ஒதுக்கிவிட்ட ராமநாமப் பதிகம் முதலான 150 பாடல்களைத் தேடி எடுத்து, ஐந்தாம் திருமுறையில் இடைச்செருகல் செய்து அரசாங்கத்தின் சார்பாக ஒரு நிர்வாக அலுவலர் வெளியிட்டிருக்க முடியாது. வேறு எவரோ இத்தீய செயலைச் செய்திருக்கவேண்டும். இந்த இடைச்செறுகலைக் கண்டித்து நான் எழுதிய கட்டுரை தினமணி நாளிதழில் 1-5-2011 அன்று வெளியாயிற்று. மறுநாளே, அதாவது 2-5-2011 அன்று நிர்வாக அலுவலரின் சார்பாக ஒரு தனியார் வக்கீல் ஒரு லட்ச ரூபாய் நட்டஈடு கேட்டு எனக்கு நோட்டீசு அனுப்பியிருந்தார். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு அரசு அலுவலர், தன் மேலதிகாரிக்கு அறிக்கை அனுப்பி ஆணை பெற்று அரசு வழக்கறிஞர் மூலமே நோட்டீசு அனுப்ப முடியும். இவ்வாறு தனியார் மூலம் அடுத்த நாளே அனுப்பியத்திலிருந்து இதன் பின்னணியில் எவரோ உள்ளனர் என்று தெளிவாகிறதல்லவா?
வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அலுவலரின் வக்கீலுக்கு நான் 9-5-2011ல் பதில் நோட்டீசு அனுப்பினேன். அதிர், நிர்வாக அலுவலர் கொடுத்துள்ள நோட்டீசில், 150 பாடல்களை இடைச்செருகல் செய்திருப்பதை அவரே ஒப்புக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி அவற்றை நீக்குமாறு தெரிவித்திருந்தேன். அதற்கு இன்றுவரை பதில் இல்லை. இவ்வாறு திருஅருட்பாவில் இடைச்செருகல் செய்து, இராமலிங்கர், ரேணுகாத்தம்மன் முதலான சிறு தெய்வங்களைப் பாடினார் என்று மக்களை நம்ப வைத்து முதல் ஐந்து திருமுறைகளை அழிக்கும் நோக்கத்தோடு ஆறாம் திருமுறை முன்னுரை பக்கம் 14ல் கீழ்கண்டவாறு விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது:-
முதல் ஐந்து திருமுறைகள்: ELEMENTARY
சமயம் சார்ந்தவை
தோத்திரம் மிகுதி
உருவ வழிபாடு.
நிர்வாக அலுவலரைப் பயன்படுத்திக்கொண்டு எவரோ திட்டமிட்டு செய்த சதிச்செயல் இதுவாகும். இந்த சதிச்செயலின் விளைவாக, சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் "அருள் ஜோதி" என்ற
பத்திரிகையின் பிப்ரவரி-2013 இதழில் பக்கம் 8ல் வருந்துகிறோம் என்ற தலைப்பில் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதை உலகுக்கு அறிவிக்கின்றேன்.
மேற்கண்ட தீய செயல்களை எல்லாம் தமிழகத்தில் என்னைத் தவிர வேறு எவரும் கண்டுகொள்ளவில்லையே என்று வருத்தத்தோடு பதிவு செய்கின்றேன்.
சென்னை ஏழுகிணறு வீராசாமிப் பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39 இருந்த வீட்டில் இராமலிங்கப் பெருமானார் 1826 முதல் 1858 வரை சுமார் 32 ஆண்டுகள் வசித்தார் என்பதும், சிறுவராய் அவர் பசியோடு அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கியபோது திருஒற்றியூர் வடிவுடை அம்மனே அங்குவந்து அவரை எழுப்பி உணவளித்தார் என்பதும் உலகறிந்த உண்மையாகும். ஆனால் அத்திண்ணை அகற்றப்பட்டு, வேறு பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு வருவது கண்டு மனம் வருந்தி கண்ணீர்விட்டுக் கதறி அழுதேன். வேறு நான் என்ன செய்ய?
திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளுக்கும் ஞான விளக்கம் எழுதும்போது இதுவரை எவரும் தெரிவிக்காத கீழ்க்காணும் செய்திகளை நான் வெளிப்படுத்தியுள்ளேன் என்பதை வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்:-
01.முதல் திருமுறையில் முதல் பதிகமான திருவடிப் புகழ்ச்சியிலுள்ள முதல் கால்பாகமான 32 வரிகள் சிவபெருமான் வடமொழியில் இயற்றி அருளிய சிவரகசியம் என்ற நூலில் அவர் பரப்பிரமத்தை நோக்கி அர்ச்சித்த மந்திரங்களாகும். மீதி முக்கால் பாகமான 96 வரிகள் இராமலிங்கர் இயற்றியவை.
02.பரப்பிரமத்தின் அரூபாரூபமே உயிராகிய சிவலிங்க வடிவ ஜோதி சொரூபம் (1/1:60,68)
03.திருஅருட்பாவில் அல்லாஹ் என்ற சொல் அமைந்துள்ளது. (1/5:17)
04.இராமலிங்கர் சைவ சமய நால்வரையும் சூக்கும சரீரத்தில் தரிசித்து உரையாடியுள்ளார் (4/9, 10, 11, 12)
05.இராமலிங்கரின் கட்டளைப்படி தொழுவூர் வேலாயுத முதலியார் விலக்கிவிட்ட 150 பாடல்களை வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் ஐந்தாம் திருமுறையில் இடைச் செருகல் செய்து வெளியிட்டது.
06."அருட்பெருஞ்சோதி" என்ற சொல், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலுள்ள "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை" என்ற பாடலிலிருந்து எடுக்கப்பெற்றதாகும்.
07.இரண்டு வரிகளில் நான்கு முறை "அருட்பெருஞ்சோதி" என்று இராமலிங்கர் எழுதி அகவலைப் பாடியபிறகு, சிவ பெருமான் "தனிப்பெருங்கருணை" என்று ஒரு திருத்தம் செய்தார்.
08.இறைவனின் தூதராய் வந்தவர் இராமலிங்கர். இறைவன் அடி எடுத்துக் கொடுக்க அருட்பா பாடியவர். (- 5அ/1:2; 5ஆ/53:45; 6ஆ/36:76)
09.சிவபெருமானே இராமலிங்கரின் குருநாதர். (3/1:3; 5, 13)
10.சிவபெருமான் உருவில் இராமலிங்கர் தோன்றுகின்றார். (3/1:23; 2:58)
11.சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் திருஞானசம்பந்தர். (4/9:11)
12.வடலூரில் இராமலிங்கரை விஷம் வைத்துக் கொல்ல முயன்றதால் மேட்டுக்குப்பம் சென்றார். (6ஆ/11:5)
13.இராமலிங்கர் மனைவியோடு இயல்பான இல்லறம் நடத்தியவர். (1/2:408; 411, 412)
14.திருஅருட்பாவின் கடைசிப் பாடலான "என் சாமி எனது துரை" என்று தொடங்குவதில், முதல் மூன்று அடிகளை இராமலிங்கர் எழுத, 'மின்சாரும் இடைமடவாய்' என்ற ஈற்றடியை சிவபெருமான் பாடினார்.
15.சிவபெருமானைப் போன்று ஐந்தொழிலும் செய்கின்ற ஆற்றலைப் பெற்ற இராமலிங்கர் ஜோதியோடு கலந்துவிடவில்லை; நாதாந்த நாட்டின் நாயகராக சிவபெருமானால் நியமிக்கப்பெற்றுள்ளார்.
16.திருமுறை 5அ/ பதிகம் 2 பாடல் 11ல் "பெறுவயல் ஆறுமுகன்" என்று குறிப்பிட்டிருப்பது, புவனகிரிக்கருகிலுள்ள வயலூர் என்று கண்டுபிடித்து நிழற்படம் வெளியிட்டுள்ளேன்.
17.ஆறாம் திருமுறை "இ" பதிகம் 44ல் பாடல் 47ல் "ஆங்காரம் ஒழி" என்று காணப்படும் சொற்களுக்கு உன் கழுத்திலுள்ள சிவமாலையைக் கழற்று என்று சரியான பொருள் கூறியுள்ளேன்.
18.மிக்க முயற்சி எடுத்து கீழ்க்கண்ட நிழற்படங்களைச் சேகரித்து வெளியிட்டுள்ளேன்:-
1) 1867ஆம் ஆண்டு பிப்ரவரியில் பெருமானார் முன்னிலையில் வெளியிடப்பெற்ற திருஅருட்பாவின் மேலட்டையின் படம்.
2) இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், ஆ.பாலகிருஷ்ணப்பிள்ளை ஆகியோரின் நிழற் படங்கள்.
எங்களுடைய ஆய்வை நங்கள் தொடர்ந்து நடத்தியதால், உலகம் அறிந்திராத, கீழ்க்கண்ட அரிய செய்திகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன:-
01.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பிங்கள வருஷத்தில் பங்குனி உத்திரத் திருவிழா 19.3.1858 வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் தொடங்கி 28.3.1858 ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணத்துடன் முடிவுற்றது. ஐந்தாம் நாள் ரிஷப வாகன விழா 23.3.1858 செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இராமலிங்கப் பெருமானார் இவ்விழாவை தரிசித்துவிட்டு மறுநாள் 24.3.1858 புதன்கிழமை அதிகாலையில் தம்முடைய சிதம்பரப் பயணத்தைக் தொடங்கினார். இந்த வரலாற்றுச் செய்தியை முதன்முதலாக உலகுக்கு அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
02.மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்திற்கருகில் அக்காலத்தில் இடுகாடு இருந்தது. இராமலிங்கரின் மனைவி தனக்கோடி அம்மாள், தாயார் சின்னம்மாள், அண்ணன் சபாபதிப் பிள்ளை ஆகியோர் அப்பகுதியில் அடக்கம் செய்யப் பெற்றனர்.
03.இராமலிங்கப் பெருமானார் தம் பயணத்தின்போது அச்சிறுபாக்கம் கர்ணீகர் தெரு வழியாக (தற்போது பஜனைக் கோயில் தெரு) நடந்து வந்ததைக் கண்ட குப்புசாமிப் பிள்ளை தன் வீட்டிற்குள் அழைத்து தண்ணீர் அருந்தக் கொடுத்தார்.
04.புதுச்சேரியில் சென்னப்பட்டினத்து ராஜவீதி (மகாத்மா காந்தி வீதி) வழியாக நடந்து வந்தார்.
05.இராமலிங்கரோடு பயணம் வந்த பரசுராமப் பிள்ளை, கருங்குழியில் இருக்கும்போது இறைவனடி சேர்ந்ததால் இராமலிங்கர் அவரை ஓடைக்கருகில் அடக்கம் செய்தார்.
06.சமையல்காரரான கல்பட்டாரை இராமலிங்கர் சீடராக ஏற்று ஞானோபதேசம் செய்ததால், தொழுவூர் வேலாயுத முதலியார் உட்பட பல அணுக்கத் தொண்டர்களும் பொறாமைப்பட்டு, பிணக்கு கொண்டனர். ஆகவே இராமலிங்கர், எவரும் அறியாதவாறு சீடர்களைத் தேர்வு செய்து சென்னப்ப நாய்க்கன் பாளையம் மலைக்கோயில், வேட்டவலம் மலைக்கோயில் ஆகிய இரு இடங்களிலும் சுரங்க அறைகளில் 4 பெண்கள் 28 ஆண்களுக்குத் தவப் பயிற்சியளித்தார். அவர்களை வழிநடத்துவதற்காகவே அவ்வப்போது கருங்குழி மற்றும் வடலூரிலிருந்து எவருக்கும் தெரியாமல் அட்டமா சித்தியால் மறைந்து விடுவார்.
07.வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியாரும் இராமலிங்கரின் சீடர்களுள் ஒருவராவர்.
08.சென்னப்ப நாய்க்கன் பாளையம் ஆலய வளாகத்திலும் வேட்டவலம் ஆலயத்திற்கருகிலும் இராமலிங்கரின் சீடர்களுடைய சமாதிகள் உள்ளன.
09.1905ஆம் ஆண்டில் இராமலிங்கரின் சீடர்கள் இராமலிங்கருக்கு வெண்கலச் சிலை வடித்து சென்னப்ப நாய்க்கன் பாளையம் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் வைத்துள்ளனர்.
10.வேட்டவலம் கிராமத்தில் இரண்டு இடங்களில், இராமலிங்கர் நிற்கும் நிலையில் வெண்கலச் சிலைகள் உள்ளன.
11.ஆ.பாலகிருஷ்ணப் பிள்ளையின் செம்மொழிப் பதிப்பின் மேலட்டையில் இடம் பெற்றுள்ள வெண்கலச் சிலையில் இராமலிங்கர் ஆற்காடு காலணி (ஜோடு) அணிந்து காணப்படுகிறார். இது ஒரு அரிய காட்சியாகும்.
12.திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், "தமிழ்த்தாழிசை" என்ற தலைப்பில் 12 அகவல் பாக்களைப் பாடி தனியாக வைத்திருந்தார். இராமலிங்கரின் வேண்டுகோளுக்கிணங்க அவற்றை அவருக்குக் கற்பித்தார்.
மேற்கண்ட வரலாற்றுச் செய்திகளை எல்லாம் உலகுக்கு அறிவிக்கும் வகையிலும், திருஅருட்பாவின் ஆறு திருமுறைகளிலும் விரவிக் கிடக்கும் ஒளிரும் முத்துகளை எல்லாம் ஒன்று திரட்டியும் இராமலிங்கரைப் பற்றிய முழுமையான ஒரே நூலாக உருவாக்க வேண்டுமென்று எண்ணியதால், "இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்" என்ற தலைப்பில் இந்நூலை அமைத்து, பெருமானாரின் திருவடிகளில் பணிவோடு சமர்ப்பித்துள்ளேன். இதைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் உருவாக்குதற்குப் பெருமானாரின் திருவருளைப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த ஆய்வு நூலைப் பார்வையிட்டு அணிந்துரை வழங்கியுள்ள சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் முனைவர் "அரங்க இராமலிங்கம்" அவர்களுக்கு இறை அருளும் குருவருளும் பல்கிப் பெருகுமாறு பிரார்த்திக்கின்றேன்.
இந்நூலைக் கற்கும் வாசகர்கள் வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கின்றேன்.
திருஅருட்பாவின் ஞானவிளக்கம் நூல்களை உலகெங்கும் பரவச் செய்யும் வானதி திருநாவுக்கரசு அய்யா அவர்களுக்கும், அவருடைய மகனார் "அருட்பா காவலர்" இராமநாதன் அய்யா அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும் உரித்தாக்குகின்றேன்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இராமலிங்கப் பெருமானார் திருவடிகள் வாழ்க ! வாழ்க !
பாதசேவகன்
பா.கமலக்கண்ணன்
பொருளடக்கம்:
(அ) வாழ்க்கை வரலாறு
01.இறைதூதர் இராமலிங்கர்;
02.பிறந்த ஊரும் பெற்றோரும்;
03.பெயர் சூட்டியவர் சிவபெருமானே!;
04.அண்ணனிடமே அடிப்படைக் கல்வி கற்றார்;
05.ஒன்பது வயதில் தில்லையில் திருக்காட்சி கண்டார்;
06.குருவாய் சிறுகாலை ஆட்கொண்டார் முருகன்;
07.சிவபெருமானே சிவமாலை அணிவித்து தவம் பயிற்றுவித்தார்;
08.சிறுவராய் உறங்கும்போதும் சிவபெருமான் கடைக்கண் வைத்தார் !;
09.உறங்கும் சிறுவனை எழுப்பி உணவளித்தார் உமாதேவியார்;
10.சிறுபிள்ளைக் குறும்புகள்;
11.சிறிய வயதில் செய்த தொழில்களும் பணத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பும்;
12.சிறுவர்களின் தற்கொலை முயற்சியைத் தடுத்தார் சிவபெருமான்;
13.சிவபெருமான் திருக்கையால் சிறுவர் இராமலிங்கரைத் தடவிக்கொடுத்தார்;
14.சிவபெருமானே வேதங்கள் முதல் திருமந்திரம் வரை கற்பித்தார்;
15.சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்க இராமலிங்கர் பாடினார்;
16.ஞானத்தவ அநுபவங்கள்;
17.ஞானத் தவத்தில் நால்வர் உதவி;
18.இயல்பான இல்லற வாழ்க்கை நடத்தினார்;
19.வறுமையால் செல்வந்தர் வீடுகளில் காத்துக் கிடந்தார்;
20.தவம் தடைபட்டதற்காகத் தண்டனை பெற்றார்;
21.தன் சூக்கும சரீரத்தைத் தானே கண்டார்!;
22.அடிமுடி கண்டார் !;
23.உச்சிக்குழி திறந்திடப் பெற்றார்;
24.சென்னையை விடுத்து நடந்து சிதம்பர தரிசனம் செய்து கருங்குழி வந்த வரலாறு;
25.திருவடி தீட்சை பெற்றார்;
26.இராமலிங்கரை சமயவாதிகள் எதிர்க்கக் காரணம் என்ன ?;
27.இராமலிங்கரின் சீடர்கள் ஞானத்தவம் பயின்ற மலைக் கோவில்கள்;
28.தண்ணீரால் எரிந்தது விளக்கு !;
29.திருஅருட்பா நூல் உருவான வரலாறு;
30.கணேசர் மீது பதிகம் பாடக் காரணம் என்ன? ;
31.வடலூரில் தருமச் சாலை எழுந்தது !;
32.வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்;
33."சன்மார்க்க விவேக விருத்தி" "சத்திய ஞானமாக பெயர் மாறி வெளிவருகிறது;
34.வடலூரை விடுத்து மேட்டுக்குப்பம் சென்ற காரணம்;
35.மனித உடல் எக்காலத்தும் அழியாத வரம் பெற்றார்;
36.ஐந்தொழில் புரிந்திட சிவபெருமான் மெய்யருள் அளித்தார்;
37.இராமலிங்கர் உடலுக்குள் சிவபெருமான் பொருந்தினார்;
38.நெற்றிகண்பெற்று அண்டங்கள் அனைத்தையும் கண்டார்;
39.நாதாந்த நாட்டின் நாயகராக முடிசூட்டப் பெற்றார்;
40.மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 30.1.1874 இரவு நடந்தது என்ன?;
41.இராமலிங்கர் மறைந்தது எப்படி?;
42.இராமலிங்கரின் உருவத் தோற்றம்;
43.இராமலிங்கரின் அணுக்கத் தொண்டர்கள்;
44.உலகம் அறிந்த ஒரே சீடர் கல்பட்டார்;
45.அருட்பாவைக் காத்த ஆ.பாலகிருஷ்ணப் பிள்ளை;
46.திருஅருட்பாவின் முதல் ஐந்து திருமுறைகளை அழிக்கும் முயற்சி;
(ஆ) சத்திய ஞான வாக்கு
01.ஒருவனே இறைவன் - தோற்றங்கள் மூன்று;
02.ஆதிபகவனே அல்லாஹ்!;
03.பரப்பிரமத்தின் அரூபாரூப தோற்றமே அறஅழி வடிவ ஜீவஜோதி சொரூபம்;
04.ஐவருக்கும் அதிபதியானவரே சிவபெருமான்;
05.சிவபெருமான் = காபிரியேல் - ஜிப்ரில் (அலை);
06.மாயை = சாத்தான் = இப்லீஸ்;
07.நெற்றியில் திருநீறு இடுவது ஏன்?;
08.ஞானம் என்றால் என்ன?;
09.அத்வைதம் என்றால் என்ன? ;
10."வள்ளலார்" என்ற சொல்லுகிரியவர் யார் ?;
11.நடராஜன் என்ற சொல்லின் உட்பொருள்;
12.முத்தி, ஸித்தி விளக்கம்;
13.சஞ்சார சமாதியும் ஜீவ சமாதியும்;
14.அருட்பெருஞ்சோதி மந்திரத்தின் தோற்றம்;
15.தவம் செய்வதற்குக் கால எல்லை உண்டா?;
16.ஞானசன்மார்க்கம்;
17.பிறப்பை அறுக்கும் நெறி;
18.சாகாக்கல்வி;
19.உயிர்க் கொலையும் புலால் உணவும்;
20.இறந்தோரைப் புதைக்க அறிவுரை;
21.இறந்தோர் எழுவாரோ;
22.பாவ மன்னிப்பு ;
23.சன்மார்க்கர்களுக்கான ஒழுக்க விதிகள்;
24.இறுதி அறிவிப்புகள்;
25.வாய்மொழி உபதேசம்;
26.இராமலிங்கர், இறுக்கம் இரத்தின முதலியாருக்கு எழுதிய கடிதங்கள்;
27.இராமலிங்கர் புதுவை வேலு முதலியாருக்கு எழுதிய கடிதம்;
28.இறுக்கம் இரத்தின முதலியார் வடலூர் சண்முகம் பிள்ளைக்கு எழுதிய கடிதம்;
29.புதுவை இரத்தினம் செட்டியார் கூடலூர் அப்பாசாமி செட்டியாருக்கு எழுதிய கடிதம்;
30.கூடலூர் அய்யாசாமிப்பிள்ளை அப்பாசாமி செட்டியாருக்கு எழுதிய கடிதம்;
31.ஜோதி வழிபாடு;
32.மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த் தாழிசை.
இராமலிங்கப் பெருமானார் திருவடிகள் வாழ்க! வாழ்க!
Comments
Post a Comment