நாவலர் கு.சடகோபன் இயற்றிய புத்தகங்கள் - 1.திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம்
கவிராயர் குடும்பத்தில் பிறந்தவரான நூலாசிரியர் முனைவர் நாவலர் கு.சடகோபன் அவர்கள் மகாகவி பாரதியார் மீது அதிக ஈடுபாடு கோண்டவர். பல கவியரங்கங்களிலும், மேடைப்பேச்சுகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார். வைணவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் மிக்கவர். சமயம், சமயப் பெரியோர்கள், திருக்கோவில்கள், தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறித்தெல்லாம் நூல்கள் பல எழுதியுள்ளார்.
காந்திய சிந்தனையில் முதுகலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர்.
டாக்டர் நாவலர் கு.சடகோபன் M.A.,Ph.D.,
கு.சடகோபன் 15.06.1943ஆம் நாளில் நம்மாழ்வாரின் நெஞ்சம் பறிகொண்ட தென்திருப்பேரை என்னும் திருப்பதியில் பிறந்தார். தந்தையார் பெயர் தெ.சா.குழைக்காதன், தாயார் பெயர் கு.ஆண்டாள்.
ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க கல்வியையும் உயர்நிலைப்பள்ளி படிப்பையும் பயின்றார். திருநெல்வேலி ம.தி.தா. இந்தக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். பொறியாளர் பட்டயபடிப்பை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தார். காந்திய சிந்தனையில் M.A. பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பெற்றார்.
"இராமானுசர் காந்தி அடிகள் வாழ்வும் சிந்தனைகளும் ஓர் ஆய்வு" என்னும் பொருளில் ஆராய்ச்சி செய்து, மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் 7.08.09இல் நடந்த வைவாவில் (VAIVA) டாக்டர் பட்டம் பெற்றார்.
1966ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை சங்கர்நகர், இந்தியா சிமிண்டு ஆலையில் பணியாற்றினார்.
1971இல் பூதப்பாண்டியில் கமலாவை மணந்தார். ஆனந்தி, ஜெயந்தி என்ற இரு மகள்களும் மோகன்ராஜ் என்ற மகனும், பேரன்களும் பேத்தியும் உள்ளனர்.
"ஊருக்கு உழைப்பதே யோகம்" என்ற பாரதி வழியில் நாட்டிற்குழைத்து வருகிறார்.
சங்கத் தமிழில் தேமதுரத் தமிழோசையில் மேடைகளில் முழங்கிவருகிறார். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்குத் தூய தமிழ்நடையில் உரைவிளக்கம் தந்து வருகிறார். மார்கழித் திங்களில் ஆண்டாளின் திருப்பாவை உரை நிகழ்த்தி வருகிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி வானொலியில் இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். சென்னை தொலைக்காட்சியில் குறள் நெறி பேசியுள்ளார். நெல்லை A.M.N.டிவியில் பேசி வருகிறார்.
சிங்கவேள் குன்றம், ஆழ்வார்திருநகர், நம்மாழ்வார் நோக்கில் நவதிருப்பதி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பல மலர்களில் மணம் பரப்பும் இவர் கட்டுரைகள் வந்துள்ளன.
'கார்கில்' என்ற பெயரில் ஒரு கலை இலக்கிய அரசியல் இதழ் நடத்தியுள்ளார்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*
இந்த நூல் திருக்கோளூர் பெண் பிள்ளை ரகஸியம், கு. சடகோபன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஆன்மீகம்/ வைணவம்.
காகித உறை / பேப்பர்பேக்;
616 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: 2008;
இரண்டாம் பதிப்பு: 2014.
Buy from Bookwomb: திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம்
Buy from Bookwomb - திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம்
முன்னுரை:
"சான்றோர் உடைத்து தொண்டை மண்டலம்" என்ற புகழுக்குரிய நிலத்தில் பழம் பெரும் பத்திகளில் ஒன்று பெரும்பூதூர் ஆகும். அவ்வூரில் கி.பி.1017-ஆம் ஆண்டில் இராமானுசர் தோன்றினார். இவரது தந்தை கேசவ சோமையாசியார், தாயார் காந்திமதி. இந்தத் தம்பதியருக்கு திருவுடைய மகனாக இராமானுசர் பிறந்தார்.
வடமொழிப்புலமையையும் வேதாந்த அறிவையும் பெருக்கிய இராமானுசர், விசிட்டாத்வைத சமயத்தைச் சார்ந்து ஒழுகியவர். இவர் காவி உடையில் திரிதண்டம் தாங்கியவர். இவ்வகை வைணவத் துறவிகள் சங்ககாலம் முதற் கொண்டே தமிழகத்தில் இருந்தனர். இத்தகைய துறவிகளை முக்கோற் பகவர் என்பார்கள்.
இவர் பலமுறை தென்னகமும் வடபாரதமும் சுற்றி வந்தவர். இவர் தமிழகத்தில் பொருநை பாயும் தென்பாண்டி நாட்டிற்கு தம் சீடர்களுடன் புனிதப்பயணம் மேற்கொண்டார்.
தெற்கே தண் பொருநைத்துறையில் நம்மாழ்வார் தோன்றி, ஞானத்தவம் புரிந்து திராவிட வேதம் அருளிய பெருமைக்குரிய 'குருகூருக்கு' அவர், தம் சீடர்களுடன் எழுந்தருளினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய திருவைகுந்தம் (ஸ்ரீவைகுண்டம்) வட்டத்தின் தென்பாகமும், திருச்செந்தூர் வட்டத்தின் வடபகுதியும் இணைந்த நிலப்பரப்பிற்கு திருவழுதி நாடு என்று அக்காலத்தில் பெயர். அவ்வழுதி வளநாட்டின் அரசர் மரபில் தோன்றியவர் நம்மாழ்வார். அவர் திருப்புளிய மரத்தடியில் மோனத்தவம் இயற்றினார். அவர் வாழ்ந்த ஊரின் அன்றைய பெயரே 'திருக்குருகூர்' என்பதாகும். இன்று அக்குருகூர் ஆழ்வாரின் பெயரையும் தன்னோடு இணைத்துக் கொண்டு 'ஆழ்வார்திருநகரி' என்றழைக்கப்படுகிறது.
நம்மாழ்வாரால் பாடப்பெற்ற திருத்தலங்களைக் கண்டு, அங்கு அங்கே அருள்பாலிக்கும் திருமாலை வணங்க இராமானுசர் திருக்குருகூரில் முகாமிட்டார்.
ஆழ்வாரால் பாடப்பெற்ற ஒன்பது தலங்களில் ஒன்றுதான் திருக்கோளூர் ஆகும். அவ்வூரைப் பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டை வளர்த்த தொட்டில் என்று கூறலாம். உன்னதமான வாழ்த்தொலிகளை மட்டுமே எப்பொழுதும் கூறிக்கொண்டு இருக்கும் பண்பாளர்களைக் கொண்ட ஊர் ஆதலால் அவ்வூரைத் "திருக்கோளூர்" என்று அழைத்தனர் தமிழ்ச் சான்றோர்கள்.
அத்திருக்கோளூரில்தான் நம்மாழ்வாரின் தலையாய சீடரான மதுரகவி ஆழ்வார் தோன்றினார். மதுரமான கவி புனைவதில் வல்லவராதலால் இவரை அக்காலத்தில் மதுரகவி என்று அழைத்தனர். இப்பெயரே நின்று இயற்பெயரை மறைத்து விட்டது. இவர், தம் திருத்தொண்டினால் உயர்வுபெற்று மதுரகவி ஆழ்வாரானார்.
இம்மதுரகவியே நம்மாழ்வாரின் திராவிட வேதத்தைப் பட்டோலை கொண்டவர். பட்டோலை கொள்ளுதல் என்றால் ஏட்டில் எழுதுவது என்று பொருள். திருப்புளிய மரத்தடியில் ஆசான் நம்மாழ்வார் சொல்வார். இவர் ஓலையில் எழுதுவார். இவரால் திராவிட வேதம் ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.
இத்தகைய வரலாற்றுக்கு சொந்தமான திருக்கோளூருக்கே இராமானுசர் பயணமானார்.
நம்மாழ்வார் திருக்கோளூர் என்னும் பதியினைப் பத்துப் பாடல்களில் பாடிப்பரவி உள்ளார். "உண்ணுஞ் சோறு பதிக"த்தில் நம்மாழ்வார் தாயான நிலையில் நின்று கொண்டு, தம் மகள் திருக்கோளூருக்கு சென்றுவிட்டதைப் பத்துப் பாசுரங்களில் பாடி, பதினோராவது பாசுரத்தில் பரசுருதியுடன் நிறைவு செய்துள்ளார்.
இலக்கியத்தில், அகத் துறையில், தலைவி, தலைவனின் ஊர் தேடிப்போகும் நிலையில் அவளைப் பெற்ற தாய் புலம்புவதாக உள்ளதே ஆழ்வாரின் திருக்கோளூர்ப்பதிகம் ஆகும்.
தன் மகள், காதல் கொண்டிருக்கும் நாயகனுடன் போய் விடுவாளோ என்று அஞ்சிய தாயானவள், தன் மகளைத் தன் அருகிலேயே கிடத்தி உறங்க வைக்கிறாள். மகளோ, உறங்குவது போல் பாசாங்கு செய்து, நடுஇரவில் தாயின் அரவணைப்பி சாமர்த்தியமாக விலக்கிவிட்டு, தன் நாயகன் வசிக்கும் திருக்கோளூருக்கு கிளம்பி விடுகிறாள். இவள் தன் நாயகனின் வளம்மிக்க பதியின் பெயரை அறிந்து வைத்திருந்தாள். ஊருக்கு செல்லும் வழியையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தாள். எனவே நடுஇரவில் இந்த இளம்பெண், முற்றிலும் இன்னும் பருவ வளர்ச்சி பெறாத இந்த இளம் மான் பயணத்தைக் தொடர்ந்தாள்.
அதிகாலையில், தன் அருகில் கிடந்த மகளைக் காணாமல் தாய் பரிதவித்தாள். 'பிள்ளை மனம் கல்லு, பெத்த மனம் பித்தாக' இருந்தது. தேடினாள், ஓடினாள், அலைந்தாள், எங்கும் காணாமல் தாய், "திண்ணம் என் இளமான் புகும்ஊர் திருக்கோளூரே" என்று பைந்தமிழில் புலம்பத் தொடங்கினாள்.
அந்தத் தாய் "எந்த ஊரைத் தன் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே!" என்றாளோ, அந்த ஊருக்கு இராமானுச மாமுனி தம் அறிவார்ந்த சீடர்கள் புடைசூழ வந்து கொண்டு இருக்கிறார்.
அவர் அவ்வூருக்குள் புகும்பொழுது அவ்வூரில் இருந்து ஓர் அம்மையார் அவ்வூரை விட்டு வெளியே கிளம்பிக்கொண்டு இருக்கிறாள். அவ்வம்மையார் பக்தி நிறைந்தவர். இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற நூல்களைக் கேட்டு ஞானம் பெற்றவர். ஆழ்வார்களின் அமுது ஒழுகும் பாசுரங்களைப் பொருளோடு கற்று ஒழுகுவர். வைணவக் கோட்பாடுகளை அறிந்தவர். வைணவ அடியார்களின் வரலாறுகளைத் தெரிந்தவர். அவருக்கு ராமனுசரையும் நன்கு தெரியும். அம்மாமுனியின் பெருமை எல்லாம் தெரிந்தவராதலால் சீடர்களுடன் ஊர் நோக்கி வரும் சீயரைத் தண்டனிட்டு வணங்கினாள்.
அவள் திருக்கோளூரில் இருந்து புறப்படுகிறாள் என்பதை தெரிந்து கொண்ட இராமானுசர் "நம்மாழ்வார் பாசுரத்தில் "புகும் ஊர் திருக்கோளூரே!" என்று வருகிறதே, அம்மா, உனக்கு மட்டும் இது புறப்படும் ஊராயிற்றோ?" என்று வினவினார்.
அவளோ, "முயல் புழுக்கை வயலில் கிடந்தால் என்ன? வரப்பில் கிடந்தால் என்ன? ஞான மில்லாத அடியேன் கோளூரில் இருந்தால் என்ன? வேரூரில் இருந்தால் என்ன?" என்று வினாவிலேயே விடையளித்தாள்.
மனித நேயப் பண்பாளராகிய மேதகு சீயரை நோக்கி அவள் மேலும் வினவினாள். "அறிஞர் கூட்டத்திலோ, வைணவ அடியார் கூட்டத்திலோ வைத்து எண்ணப்படும் அளவிற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது சுவாமி?" என்றாள்.
அவள் தன்னைத் தாழ்த்திக் கொண்டும், ஏனைய வைணவ அடியார்களை எல்லாம் மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டும் இனிமையாகப் பேசத் தொடங்கினாள். தன் கருத்துக்களை எல்லாம் இனிய தமிழில், பொருள் பொதிந்த ஒருவகை நாடோடித் தமிழில் வெளியிட்டு அருளினாள். அவள் இராமாநுசப் பெருந்தகையிடம் எண்பத்தோரு வாக்கியங்களைக் கூறி மகிழ்ந்திருக்கிறாள். அவள் பேச்சு பொருள் ஆழம் மிக்கதாகவும், பணிவும், பண்பும் மிக்கதாகவும் இருந்ததால் சீயரின் உடன் வந்த அடியவர்கள் அவற்றை எல்லாம் தொகுத்து ஓர் இலக்கியமாக்கி விட்டனர். அந்த நூல்தான் 'திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம்" ஆகும்.
அவளுடைய பேச்சில்,
"அகம் ஒழிந்து விட்டேனோ விதுரரைப்போலே
தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயை போலே
பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே"
என்று வார்த்தைகள் வந்து விழுந்தன.
அவள் தன்னைத் தாழ்த்திக் கொண்டு சீயரிடம் பணிந்தாள். அவள் பணிவும், அடக்கமும் அவளை உயர்த்திவிட்டன, ஓர் இலக்கியப் படைப்பாளியாக்கிவிட்டன. வைணவ அடியார் திருக்கூட்டத்தில் அவளை உயர்த்திவிட்டன, ஓர் இலக்கியப் படைப்பாளியாக்கிவிட்டன. வைணவ அடியார் திருக்கூட்டத்தில் அவளை ஒரு நாச்சியாராக்கிவிட்டன!
தன்னை ஒரு "பயனில்லாத முயல் புழுக்கை!" என்றாள் அவள். பயனற்றவர்களையும், பண்பற்றவர்களையும், பாங்கற்றவர்களையும் உயர்த்தி விடுவதற்கன்றோ நம்மாழ்வார் திராவிட வேதம் தந்தருளியிருக்கிறார். அத்திராவிட வேதத்தை திருமாலிருஞ்சோலை, திருமாலை ஆண்டாரிடத்தில் முறையாகக் கற்ற இராமானுசர் முயல் புழுக்கையையும் உரமாக்கும் வித்தை கற்றவரல்லவா? அவளை ஊர்விட்டுச் செல்ல விட்டுவிடுவாரா?
கடையனுக்கும் கடைத்தேறும் மார்க்கத்தைப் போதிக்கும் மாறன் நம்மாழ்வாரின் திருவடி தொழும் மானிடப் பண்பாளர் இராமானுசருடன் உரையாடியதால் அம்மங்கை உயர்ந்து இன்றும் நிற்கிறாள். இந்த எண்பத்தோரு வாக்கியங்களையும் 'தினத்தந்தி' நெல்லைப் பதிப்பில் தொடர்ச்சியாக 5.12.2004-இல் தொடங்கி 16.07.2006 வரை ஞாயிறு தோறும் எழுதினேன். தொடர்ந்து வெளியிடும் தினத்தந்தி நிர்வாகத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கட்டுரை எழுதிய பொழுது அந்த அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் படிக்கும் நேயர்களுக்கு எல்லாச் செய்திகளையும் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதால் கூறியது கூறல் வருகிறது. முழு நூலாகப் படிக்கும் நேயர்கள் இதை ஒரு குறையாகக் கொள்ளக் கூடாது எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
திருக்கோளூர்ப் பெண்பிள்ளை முதலில் எழுப்பிய வாக்கியம், அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே" என்பதாகும்.
- நாவலர் கு.சடகோபன்.
***
உள்ளே:
01.கண்ணன் அவதாரம்;
02.அத்தினாபுரியில் கண்ணன்;
03.கண்ணனுக்காக உயிர் துறந்த பறவை;
04.இலங்கையர்கோனை விரட்டிய மிதிலைப் பெண்;
05.இலங்கையர்கோனை வீழ்த்திய பெண்;
06.தொண்டைமானின் பக்தி;
07.அடியார் திருக்கூட்டத்தில் ஒரு கர்ணன்;
08.அழகினுக்கு அழகு செய்த அனுசூயை;
09.தந்தை யார்?;
10.கடையனையும் கடைத்தேற்றம் திருமால் நாமம்;
11.அகலிகை சாப விமோசனம்;
12.புலத்துறை முற்றிய பூவை ஆண்டாள்;
13.பல்லாண்டுபாடிய பெரியார்;
14.மதத்தில் தோன்றிய மாபெரும் பக்தர்;
15.மானுடம் வென்றதம்மா!;
16.தீதில் நன்னெறி காட்டிய சேரலர்கோன்;
17.சத்தியமே கண்ணன்;
18.நல்லவர்கள் கூட்டணி;
19.அந்தரங்கம் சொல்லி ஆருயிர் காத்த திரிசடை;
20.மயன்மகள் மாண்புமிகு மண்டோதரி;
21.கருத்த மாமுனி;
22.நல்லதோர் சீடன்;
23.கண்ணன் என்னும் பெருந்தெய்வம்;
24.தட்டுமாறி நிற்கும் நிலை;
25.குழந்தையும் தெய்வமும்;
26.இராமகாரியத்தில் அணில்கள்;
27.திருவரங்கப்பெருமாளின் திருவிளையாடல்;
28.பக்தியுடை அடியவர்க்கு எளியவன்;
29.தென்தமிழ் இயம்பி இசைகொண்ட அகத்தியர்;
30.நம்பகத்தன்மை மிக்கவன்;
31.அனைத்தும் உலகநாதன் உடைமையே;
32.மங்கைமன்னர் ஆழ்வார் ஆனார்;
33.தம்பி உடையான் படைக்கு அஞ்சான்;
34.திருமாலின் மகிமை;
35.பகைவனுக்கு அருள்வாய்;
36.திருமாலைக்கண்ட முதலாழ்வார்கள்;
37.இராமகாதை பாடிய இளவரசர்கள்;
38.திருவரங்கனின் திருத்தொண்டர்;
39.திருக்கச்சி நம்பிகள்;
40.பாட்டினால் வாழ்ந்த பாணர்;
41.தரணியாட்சியை வெல்லும் தவமாட்சி;
42.திருவடி சம்பந்தம்;
43.தொண்டைமான் போற்றிய குருவநம்பி;
44.பரந்தாமனின் பேரருள்;
45.கோவிந்தன் அருளால் கூன் நிமிர்ந்து;
46.பூவைப் பூவண்ணனுக்கு பூமாலை;
47.பரதனென்னும் பெருந்தகை;
48.இளையபெருமாள்;
49.கங்கைக் கரைக் காதலன்;
50.பெரிய உடையார்;
51.நீதியால் வந்த நெடுத்தருமநெறி;
52.தாயினும் மிக்க சபரி;
53.முதல் சத்யாக்கிரக வீரன்;
54.ஆயர்குலப் பெருஞ்சுடர்;
55.தந்தை சொல்லைக் காத்தவன்;
56.இராமதூதன்;
57.கிருஷ்ணனிடம் சரணாகதி;
58.வியப்பூட்டும் ஆசார்ய பக்தி;
59.நாராயணன் மகிமை;
60.பக்தனின் பெருமை;
61.முத்தமிழ் வித்தகர்;
62.நல்ல தூதன்;
63.அவன் வேண்டா என்றேனோ ஆழ்வானைப்போலே;
64.இராமானுசப் பெருந்தகை;
65.பொல்லானை நல்லானாக்கிய திருமால்;
66.முடியாட்சியா? அருளாட்சியா?;
67.குரு பக்தி;
68.அரங்கம் தந்த அமுதன்;
69.இடித்துரைக்கும் பண்பு;
70.வாமனாவதாரம்;
71.சாதிகள் இல்லையடி பாப்பா!;
72.ஆண்டான் பெருமை;
73.எம்பெருமானார் தர்சனம்;
74.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!;
75.உடலைத் துறந்த தியாகச் செம்மல்;
76.ஆத்திகமும் நாத்திகமும்;
77.தாழ்த்திக் கொள்பவன் உயர்த்தப்படுவான்;
78.குரு பக்தி;
79.நீர்ச்சுழியில் சரணாகதி;
80.கூரத்தாழ்வானின் குலக்கொழுந்து;
81.கை கொடுத்த தம்பி;
82.திருத்தோளில் சங்கொடு சக்கரம்;
83.வடமறை வழியும் திராவிட வேத நெறியும்;
84.சின்னியம்மாள் ரகசியம்.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Comments
Post a Comment