சாவி @ சா. விசுவநாதன் இயற்றிய புத்தகங்கள் - 1.இங்கே போயிருக்கிறீர்களா

எழுத்தாளர் பற்றி : 



சா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

சாவி @ சா. விசுவநாதன் இயற்றிய புத்தகங்கள் :-

1.இங்கே போயிருக்கிறீர்களா? 


*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

1.இங்கே போயிருக்கிறீர்களா? 

பயணக் கட்டுரைகள்.
 
காகித உறை /பேப்பர்பேக்; 
360 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: 2012.



Buy from Bookwomb! இங்கே போயிருக்கிறீர்களா இந்த நூல் இங்கே போயிருக்கிறீர்களா, சாவி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                         
 
என்னுரை: 
சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம்; வீட்டில் அடைபட்டிருக்க மாட்டேன்; எங்கேயாவது 'சுறுசுறு'வென்று சுற்றிக்கொன்டே இருப்பேன். அது வெறும் சுற்றலாக இல்லாமல், அங்குள்ள சிறப்புகளை அறிந்துகொள்ள ஓர் ஆர்வத்தை உண்டாக்கக் காரணமாக இருந்தது.
 
என்னைத் தெரிந்தவர்கள் என்னுடைய அந்தச் சுபாவத்தை, அந்த நாட்களிலேயே பாராட்டினார்கள்; என்னைத் தெரியாதவர்கள் 'ஊர் சுற்றி' என்று சொன்னார்கள். நான் ஊர் சுற்றியோ ? உலகம் சுற்றியோ ? அப்படிச் சுற்றுவதில் எனக்கு ஓர் சுகம் அன்றும் இருந்தது; இன்னும் இருக்கிறது.
 
அந்தப் பழக்கத்திலிருந்து பிறந்த எழுச்சி, எங்கேயாவது சுற்றி எதையாவது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. நான் எழுத்தாளனாகி, பத்திரிக்கையாளனாகி, பத்திரிகை ஆசிரியராகப் பணி ஆற்றத் தொடங்கியது முதல் என்னுள் இருந்து வரும் அந்தப் பழக்கம் மேலும் மிகுந்திருக்கிறது. 
 
பத்திரிகை ஆபீஸ்களில் தரப்பட்டிருக்கும் அறைக்குள் முடங்கிக் கிடப்பது எனக்கு எப்போதுமே பிடிக்காது. வெளிநடப்புகளைப் பார்க்கும் அடக்கம் எனக்குப் பிடிக்காத ஒன்று. எதையும் நேரில் சென்று பார்க்க வேண்டும்; அந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான். அவ்வாறு வெளிவந்து சுற்றியதில் கிடைத்த சுவையான அனுபவங்களை நகைச்சுவையோடு சொல்லத் தொடங்கினேன். அந்தப் புதிய கண்ணோட்டத்தின் ஒரு படைப்புத்தான் "இங்கே போயிருக்கிறீர்களா?" என்ற இந்தத் தொகுப்பு.
 
"இங்கே போயிருக்கிறீர்களா?" என்று நான் வாசகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பி விட்டுச் சும்மா இருந்து விடவில்லை. நான் சென்று வந்த இடங்களில் கண்டதையெல்லாம் ஒரு 'நியூஸ் ரீல்' போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறேன். நமது நாட்டில் நான் போகாத இடங்கள் இல்லை. சுற்றிப் பார்க்காத பகுதிகள் இல்லை. சென்ற இடங்களில் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்ததையே திரும்பத் திரும்பச் சொல்லவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் நின்று கவனித்து, அந்த அனுபவங்களை அப்படியே எழுதியிருக்கிறேன்.
 
நான் பெங்களூருக்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். அங்குள்ள லால்பாக்கின் இயற்கை அழகையும் விதான் சௌதாவின் வனப்பையும் மட்டும் கண்டு களித்து விட்டு வந்து விடுவதில்லை. மல்லேசுவரத்தில் சுடச்சுட மசால் வடை எந்த இடத்தில் கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.
 
எதையும் சரிவரக் கூர்ந்து கவனிக்கவேண்டும். கவனித்ததை ரசமாகச் சொல்ல வேண்டும்; படிப்பவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். 
 
ஏதாவது ஒன்றை எந்த ஊரிலாவது பார்த்தால், அதைப் பார்வைக்கு மட்டும் ஒரு காட்சியாக்கிவிடாமல், அதையே காதுக்கும் மூக்கிற்கும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தான் திட்டமிடுவேன். உதாரணமாகப் 'பொள்ளாச்சி சந்தை' பற்றி இந்த கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதியில் அந்தச் சந்தையில் புரளுகிற கொங்கு நாட்டு மொழியை அவர்கள் எப்படிப் பேசுகிறார்களோ அப்படியே தந்திருக்கிறேன். மாடுகள் விற்பனை செய்யும் பகுதியில் அவர்கள் மாட்டு பாஷையிலேயே பணத்திற்கும் ஒரு பரிபாஷயைப் பயன்படுத்துவதையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதைப்போலவே மூக்கு அனுபவித்த பலாப்பழ வாசனை, கதம்ப மணம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
 
உலக நாடுகள் சுற்றிப் பார்த்து இதே குறிக்கோளோடு சிறு சிறு விஷயங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்துச் சுவையாக வாசகர்களுக்குச் சொல்லவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய ஆசை. அது எப்பொழுது நிறைவேறுமோ தெரியாது.
 
பிரயாணக் கட்டுரையில் ஒரு புதிய முறையைப் பின்பற்றவேண்டும் என்ற என் நெடு நாளைய ஆசை. அது எப்பொழுது நிறைவேறுமோ தெரியாது.
 
பிராயணக் கட்டுரையில் ஒரு புதிய முறையைப் பின்பற்றவேண்டும் என்ற என் நெடு நாளைய லட்சியத்திற்கு இந்த "இங்கே போயிருக்கிறீர்களா?" ஒரு சின்ன வாய்ப்பு. 
 
'பொன்னியின் புதல்வர்' என்ற பெயரில் பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் எழுதிப் பெரும் புகழ் பெற்றுள்ள என் அருமை நண்பர் திரு.சுந்தா அவர்கள் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியுள்ளார்கள். தமது லண்டன் வாழ்க்கையைப் பற்றி 'ஆங்கில வாழ்க்கை' என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதியவர். நகைச்சுவையோடு, ரத்னச் சுருக்கமாக அமைந்துள்ள அந்தக் கட்டுரைகளை அவர் புதிய டெக்னிக்'கில் எழுதியுள்ளார்.
 
என் வேண்டுகோளுக்கு இணங்கி இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதித் தந்த திரு.சுந்தாவுக்கு நன்றி கூறி என்னுரையை முடித்துக் கொள்கிறேன்.
 
சாவி 
ஆசிரியர், தினமணி கதிர், 
சென்னை.
 
*-*-*-*-*-*-*-*-*--*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
 
ஆனந்த கலை: 
இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் ஒன்று, புதுடெல்லியில் பாரத ரத்தினம் நேருஜி வசித்திருந்த "தீன்மூர்த்தி பவன்" என்ற புகழாலயம் பற்றியது. அந்த ஆலயத்தையும் டெல்லி நகரின் மற்றக் காட்சிகளையும் சுற்றிப் பார்ப்பதற்காக நூலாசிரியர் சாவி வந்திருந்த போது, என் வீட்டில்தான் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் என் புத்தக அலமாரிகளை அவர் குடைந்து பார்த்து, "என் சுய வரலாறு" என்ற மகுடத்துடன் சார்லி சாப்ளின் எழுதிய நூலை உருவி எடுத்து அதைத் தமக்குப் படிக்கக் கொடுக்கும்படிக் கேட்டார். "படிக்க மட்டும் அல்லாமல் உங்களுக்குச் சொந்தமாகவே தருகிறேன்" என்று நான் சொல்லி அதைக் கொடுத்தேன். அப்படிக் கொடுக்கையில் அதன் முகப்புப் பக்கத்தில் நான் எழுதிய வாக்கியம்: 
          
சாவி சாப்ளினுக்கு அன்பளிப்பு 
 
வேடிக்கையாய்ச் சூட்டிய பெயர்தான்; ஆயினும் உண்மையான பாராட்டு இதிலே பொதிந்திருக்கிறது. நகைச்சுவை நடிப்புக் கலையில் சாப்ளின் எப்படியோ, அப்படியே நகைச்சுவை எழுத்துக் கலையில் சாவி சாப்ளின்!
 
கணப்பொழுதில் புனைந்த இந்தப் பெயருக்கான தோற்றக்கூறு, பல ஆண்டுகளுக்கு முன்பே உண்டானதாகும்.
 
திடீரெனெ ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார் சாவி, "என்ன காரியமாய் இந்த ஊருக்கு வந்தீர்கள்?" என்று நான் கேட்டதற்கு, "சும்மாதான் இப்படி..." என்று சொல்லிவிட்டு, எங்கள் இருவருக்கும் பிடித்ததும், நாங்கள் இருவரும் பயில்வதுமான நகைச்சுவை இலக்கியம் பற்றிப் பேசத் தொடங்கினார். எழுத்தினால் மட்டும் அல்லாமல் பேச்சினாலும் அவர் சிரிப்பு வாணங்களை வெடிக்க வல்லவர் என்பதை அப்போது நான் கண்டு வியந்தேன். மிமிக்ரியிலும் அவர் தேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்டது மற்றொரு வியப்பு. சிலருடைய பேச்சுக்களை அப்படியே முகபாவங்களுடன் கேலிப் போலிப்பு செய்து காட்டினார். சுமார் இரண்டு மணி நேரம் என்னைச் சிரிப்பு அலைகளில் குலுக்கி எடுத்துவிட்டு வந்தது போலவே திடீரெனப் புறப்பட்டு விட்டார். அவரை வழியனுப்புவகையில் ஒரு பத்திரிகையின் பெயரைக் குறிப்பிட்டு, "அதில்தானே இருக்கிறீர்கள்? " என்று கேட்டேன்.
 
"இல்லை, அந்த வேலை போய்விட்டது," என்று சொல்லிக் கொண்டே அவர் வேகமாய் நடந்தார். பின்னே ஓடிப்போய் என் அனுதாபத்தைத் தெரிவிக்கத் துடித்தேன். ஆனால் வேண்டுமென்றே அதைக் கேட்க விரும்பாதவர் போல் அவர் விரைந்தோடியதால், வாசற்படியில் நின்றபடியே, அவருடைய உருவம் தெருவின் திருப்பத்தில் மறைகிறவரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். 'இடுக்கண் வருங்கால நகுக' என்ற வாக்கின்படி ஒருவர் உண்மையிலேயே நடந்து கொள்ள முடியும் என்பதை முதல் தடவையாகக் கண்டேன். அப்போது, மேலும் அடுத்தடுத்து அந்த இயல்பை அவரிடம் கண்டுகொண்டே இருந்தேன். அதைக் குறிப்பிட்டு ஒரு சமயம் நான் பேசிய விவரத்தை இங்கே எடுத்துச் சொல்லலாம்.
 
சாவிக்குப் பெரும் புகழ் அளித்த "வாஷிங்க்டனில் திருமணம்" ஆனந்த விகடனில் தொடர் கதையாய் ஓடியபின் புத்தகமாய் வெளியானதை அடுத்து, அவர் டெல்லிக்கு வந்திருந்த சமயம் அது. தில்லி தமிழ்ச் சங்கத்தில் அப்போது அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினோம். அவரை நான் வரவேற்றுப் பேசுகையில், எப்படி அவர் அந்தக் கதையில் பல்வேறு நகைச் சுவை உத்திகளை நயமாய்க் கையாண்டிருக்கிறார் என்பதையும், என்னென்ன அம்சங்களில் அது இணையற்றதோர் நூலாய் விளங்குகிறது என்பதையும் இலக்கிய மதிப்பீட்டு முறையில் எடுத்துச் சொன்னேன். பிறகு, மனத்தத்துவ ஆராய்ச்சி முறையில் கூறினேன்.
 
"சாவியின் மனத் திண்மைக்கும் எழுத்துத் திறமைக்கும் ஒரு தொடர்பு உண்டு. வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள், தொல்லைகள், கவலைகள், ஏமாற்றங்கள், இவருடைய வாழ்க்கையில் இவை அதிகமாகவே இருந்திருக்கின்றன. ஆனால், இவற்றினிடையே இவர் அசாதாரண தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் வளைய வருகிறார். எதுவும் பாதிக்காத விதத்தில், ஓர் ஆனந்த மனநிலையைக் கொண்டிருக்கிறார். இந்த மனநிலையே இவருடைய எழுத்துக்களில் இவ்வளவு மகிழ்ச்சியைப் பெருகி ஓடச் செய்கிறது. இவருடைய கலை ஆனந்த கலை; இதன் மூலம் இவர் சிரிப்பூட்டுகிறார் என்று சொல்வது சாதாரணம்; ஆறுதலும் தேறுதலும் நம்பிக்கையும் ஊட்டுகிறார் என்றுதான் சிறப்பாய்ச் சொல்லவேண்டும்.
 
ஆனந்தக் கலைஞர் சாவியின் மனத்திண்மைக்குச் சான்றாக இன்னும் சில சம்பவங்களை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய மணி விழாவை முன்னிட்டு வெளியான பாராட்டு மலரில் எழுதி இருந்தேன். அவற்றை இங்கே மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. அந்த மலரில் உள்ள சிறப்பு அம்சம் ஒன்றை மட்டும் சொன்னால் போதும்.
 
அந்த மலரின் முதல் மூன்று பக்கங்களில் மூன்று படங்கள். முதல் படத்தில், "தாய் தந்தை" என்ற தலைப்புடன் சாவியின் பெற்றோர்கள்; மூன்றாவது படத்தில் "தெய்வம்" என்ற மகுடத்துடன் காஞ்சி பீடாதிபதி; நடுப்பக்கத்தில் குரு என்ற வருணனையுடன் கல்கி.
 
தமது இலக்கிய குருவாகக் கல்கியைக் கொண்டவர் சாவி - இலக்கியம் என்பதன் இரு பொருள்களிலும், சிறு வயதிலேயே கல்கியின் எழுத்தில் மோகம் கொண்ட சாவி, அவரைப்போல் களிப்பும் வியப்பும் பொங்க எழுத வேண்டும் எனக் கனவு கண்டார். அவரைப்போல் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டுச் செல்வாக்குடன் சிறக்க வேண்டும் என்றும், அவரிடமே அத்தொழிலைப் பயிலவேண்டும் என்றும் ஆசைப்பட்டார். எப்படி எல்லாமோ முற்சிகளும் தந்திரங்களும் செய்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். முதலில் ஆனந்த விகடனில், பின்னர் கல்கி பத்திரிகையிலும் உதவி ஆசிரியராய் இருந்து பத்திரிகைத் தொழிலையும் எழுத்துக் கலையையும் தமது இலக்கிய ஆசானிடமிருந்து நேர்முகமாய்க் கற்றுத் தேர்ந்தார்.
 
சாவியின் ஆர்வத்தையும் திறமையையும் கல்கி நன்றாகப் பேணி வளர்த்தார்; அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்தார். அவர் சாவிக்கு அளித்த வாய்ப்புக்களில் அரிதாகவும் பெரிதாகவும் இருந்தது, "நவகாளி யாத்திரை."
 
வங்க நாட்டில் மனிதனை மனிதன் மாய்க்கும் கொடுமை திகழ்ந்த நவகாளிப் பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக சாந்த மூர்த்தி காந்தி மகாத்மா மேற்கொண்ட பாரத யாத்திரையில் கல்கியின் பிரதிநிதியாகவும் நிருபராகவும் சாவி சேர்ந்து கொண்டு செய்த புனிதப்பயணம் அது. அந்த யாத்திரையின் அனுபவங்களை உருக்கமும் நகைச்சுவையும் இழைந்தோட, அவர் கல்கி பத்திரிகையில் எழுதிய கட்டுரைத் தொடர், சிறந்ததோர் எழுத்தாளராக அவரை வாசகர்கள் கொண்டாடும்படி செய்தது. குருவின் பெருமையுடன் கல்கியும் அதைக் கொண்டாடினார்; எவ்வாறு, எவ்வளவில் என்பதை, அத்தொடர் புத்தக வடிவில் வந்தபோது அதற்குக் கல்கி வழங்கிய அணிந்துரை புலப்படுத்திற்று.
 
"இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகள் அல்ல; சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சி பற்றிய தார்மீகக் கட்டுரைகள்; காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத்தையும் எல்லாரும் அறியத் தெளிவாக்கித் தரும் கட்டுரைகள்; இலக்கியம் என்று செல்வதற்குரிய ரசமான கட்டுரைகள்..."
 
இத்தகைய பாராட்டைப் பெற்ற "நவகாளி யாத்திரை", இந்நூலில் இடம் பெற்றுள்ள உள்நாட்டுப் பயணக் கட்டுரைகளுக்கு முன்னோடி; பின்னர் சாவி வெளிநாடுகளில் பயணம் செய்து எழுதியவற்றுக்கும் அப்படியே.
 
இதில் மொத்தம் உள்ள 31 கட்டுரைகளும் முன்னோடிக்கு மேல் பல வகையில் முன்னேற்றம் கொண்டவை; எல்லாம் சாவியின் ஆனந்தக் கலை வண்ணங்கள்.
 
இவற்றில் நகைச்சுவை மேலோங்கியுள்ளன. ஆயினும் அது மட்டுமே ஒரு தனிச்சுவையாய் இருக்கவில்லை. பலவிதச் சுவைகளும் ஊடாடுகின்றன. இக்கட்டுரைகள் வர்ணிக்கும் இடங்களும் விதவிதமானவை; வர்ணனைகளும் வித விதமானவை. இவற்றைப் பயணக் கட்டுரைகள் என்று அல்லாமல், காட்சிக் கட்டுரைகள் அல்லது சொல்லோவியங்கள் என்று வர்ணிப்பதுதான் பொருத்தமாய் இருக்கும்.
 
இந்தக் கட்டுரைகள் முதலில் ஆனந்த விகடனில் வந்த போது இவற்றிற்குத் துணையாக ஓவியர் கோபுலுவின் சித்திரங்கள் வெளியாயின. சாவியுடன் கோபுலு நெடுகிலும் சென்று வரைந்தவை அவை. கட்டுரைகளும் சித்திரங்களையும் சேர்ந்தாற்போல் பார்த்த ரசிகர்கள், "முன்பு கல்கியும் மாலியும் போல இப்போது சாவியும் கோபுலுவும்" என்று மெச்சிப் பேசிக் கொண்டார்கள்.
 
சாவியும் கோபுலுவும் எவ்வளவோ தாராள மனசு உள்ளவர்கள்தாம். ஆனால் தத்தம் கலைத் திறமையை வெளிப்படுத்தும் முறையில் மிகவும் செட்டும் கட்டுமான ஆசாமிகள். மிகக் குறைவான கோடுகளைக் கொண்டேதான் தமது சித்திரங்களை வரைவார் கோபுலு; மிகக் குறைவான சொற்களைக் கொண்டேதான் தமது கட்டுரைகளை எழுதுவார் சாவி.
 
சுருக்கமே சுவை; எளிமையே இனிமை; அழகே ஆனந்தம். இம்மூன்றின் உண்மையையும் இந்நூலில் காணலாம். உதாரணங்களாய்ச் சில பகுதிகளை இங்கே கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே படித்துப் பார்த்து கொள்ளலாம்.
 
பொதுவாக ஒன்று சொல்லலாம். சாவியின் கட்டுரைகள் கதைகளுக்கு ஒப்பான சுவையுள்ளவை; அவற்றிலே சில கதைகளுக்கும் மேலான சுவையுள்ளவை. இந்த இரண்டு வகைகளும் இந்நூலிலே இருக்கின்றன.
 
கல்கிக்குப் பிறகு அவருக்கு ஒப்பாக எனது எழுத்தாற்றலுக்கு ஊக்கம் ஊட்டியவர் சாவி. எனது டெல்லி அனுபவக் கட்டுரைகளைத் தமது தினமணி கதிரில் இவர் வெளியிட்டதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். அவற்றைப் படித்துவிட்டுத்தான், கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பணியில் அவருடைய குமாரர் திரு.ராஜேந்திரன் என்னை ஈடுபடுத்தினார். இதன் விளைவாய் 'பொன்னியின் புதல்வர்' வரலாற்றை நான் எழுதி முடித்து மனநிறைவு கொண்டுள்ள இவ்வேளையில், தமது இந்த நூலுக்கு அணிந்துரை எழுதும் பெருமையை எனக்குச் சாவி அளித்துள்ளார். உண்மையில் அரிய பெருமை இது.
 
எவ்வளவு பெருமையாய் இருப்பினும் இவ்வளவு போதும் என் முன்னுரையாக.
 
இதோ உங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தக் கலைஞர், மெரினா கடற்கரையில்! அங்கிருந்து, "இங்கே போயிருக்கிறீர்களா? " என்று கேட்டுக் கொண்டே உங்களைப் பல்வேறு இடங்களுக்குச் கூட்டிச் செல்வார். அவற்றில் சில இடங்களுக்கு நீங்கள் ஏற்கனவே போயிருந்தால் என்ன? மீண்டும் அவற்றைச் சாவியின் கண்ணோட்டத்திலும் சொல்லோட்டத்திலும் பார்க்கலாம். போயிராத இடங்களையோ புதுமையைக் காணும் வியப்புடன் கற்பனைக் கண்ணால் காணலாம்; அவற்றையே பின்னர் நேரில் காண வாய்க்கும்போது, எதை எதை எப்படி எப்படிச் சாவி வர்ணித்தார் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு மகிழலாம்.
 
ஊம், தொடங்கட்டும் ஆனந்தப் பயணம்!
 
- திரு.சுந்தா
 
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*                                                    
உள்ளே...
01.மெரினா கடற்கரை;  
02.மிருகக் காட்சிச்சாலை;  
03.சென்ட்ரல் ஸ்டேஷன்; 
04.கொத்தவால் சாவடி; 
05.மூர் மார்க்கெட்;  
06.சர்க்கஸ்; 
07.டெஸ்ட் மாட்ச்;  
08.பெங்களூர் ரேஸ் கிளப்; 
09.நெய்வேலி; 
10.பங்களூர்; 
11.பாண்டிச்சேரி; 
12.கல்பாத்தி தேரோட்டம்; 
13.குருவாயூர்;  
14.திருக்கழுக்குன்றம்;  
15.தேக்கடி; 
16.முதுமலை - பண்டிப்பூர்; 
17.தியாகய்யர் உற்சவம் - திருவையாறு; 
18.பதினெட்டாம் பெருக்கு;  
19.மதுரை - மீனாட்சி அம்மன் கோயில்;  
20.பொள்ளாச்சி சந்தை;  
21.கோலார் தங்க வயல்;  
22.தாஜ்மகால்; 
23.தீன் மூர்த்தி பவன்;  
24.ஊட்டி; 
25.குடகு; 
26.சாத்தனூர் அணைக்கட்டு; 
27.குற்றாலம்; 
28.மகாபலிபுரம்; 
29.பம்பாய் - மாதுங்கா; 
30.எல்லோரா; 
31.கோவா.
 
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-* 

Comments

Popular posts from this blog

கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள் - 1

எழுத்துசித்தர் பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

சிவா @ சிவன் சார் இயற்றிய புத்தகங்கள் - 1.ஏணிப்படிகளில் மாந்தர்கள்